Showing posts with label அண்ணாமலை வெண்பா. Show all posts
Showing posts with label அண்ணாமலை வெண்பா. Show all posts

Friday, September 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #71 - ஐயர், அந்தணன், பிராமணன், சதுர்வேதியன் & வேள்வி - சிறு விளக்கம்

மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

திருவெண்ணெய்நல்லூரில் நடக்கவிருந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 முதல் திருமணத்தை தடுத்தி நிறுத்தி அவரை எம்பெருமான் ஆட்கொண்ட வரலாற்றைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

🔸 திருவெண்ணெய்நல்லூர் (திருஅருட்துறை) - மூலவர் ஆட்கொண்டநாதர் 🌺🙏🏽. இதன் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் தான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டதாக தொன்நம்பிக்கை.

இவ்வூரில் தான் சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்த மெய்கண்ட சிவம் 🌺🙏🏽 சமாதி அடைந்துள்ளார்.

🔸 சதுர்வேதியன் - நான்கு மறைநூல்களையும் கற்றவர். எனில், நான்கு உயர்ந்த சொற்றொடர்களின் உட்பொருளை அறிந்தவர் (1. உணர்வே உள்ளபொருள், 2. அது நீயே, 3, நானே உள்ளபொருள், 4. இந்த உயிரே உள்ளபொருள்)

இதை வாய்ப்பாகக் கருதி பெரும்பாலும் தவறாகவே பொருள் கொள்ளப்படும் மேலும் சில சொற்களையும் பார்ப்போம்:

🔹 ஐயர் - கற்றறிந்தவர், பெரியவர்.

🔹 அந்தணன் - எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காதவர் / இழைக்காதவர்

🔹 பிராமணன் - பிரம்மம் எனில் பரம்பொருள் / உள்ளபொருள். பிராமணன் எனில் உள்ளபொருளாய் உள்ளவர். உள்ளபொருளை அறிந்தவர்.

🔹 வேள்வி - உடல் என்னும் குண்டத்தில் எரியும் நெருப்பான தன்மையுணர்வில், மனதில் தோன்றும் எண்ணங்கள் என்னும் குச்சிகளை (சுல்லிகளை) போட்டுக்கொண்டிருப்பதே வேள்வி. வேள்வியின் விளைவால் தோன்றும் புகையென்பது மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் நல்லுரைகள் (பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 வெளிப்பட்ட "நான் யார்?" போன்று). வேள்விப்புகை காற்றை சுத்தப்படுத்துவது போல் மெய்யறிவாளரின் நல்லுரைகள் கேட்போரின் மனதை சுத்தப்படுத்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #70 - ஆத்தி, கடுக்கை, கொன்றை - சிறு விளக்கம்

ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 பொதுவான பொருள்:

ஆத்தி, கொன்றை போன்ற மலர்களாலும், நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாலும் அடியவர்களும், தகுதியுடைய ஏனையோரும் சிவப்பரம்பொருளை போற்றி வணங்குவர். அவ்வாறு போற்றி வணங்குவோரை, அவர் தம் இடத்திற்கே உமையன்னையுடன் சென்று காட்சியருளி மகிழ்வார் எம்பெருமான்.

🔸 உட்பொருள்:

🔹 ஆத்தி - இங்கு மலரைக் குறிக்கவில்லை. தொடர்பு (சம்பந்தம்) என்ற பொருளைக் குறிக்கிறது. "நான் இன்னார்" என்று நம்மை நம் உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்வது.

🔹 கடுக்கை - கொன்றை மலரல்ல. சேட்டை. நமது செயல்கள். "நான் செய்கிறேன்" என்ற எண்ணம்.

🔹 ஐந்தெழுத்து - நமசிவாய.

உணர்த்தும் பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் நீயே. எல்லாம் உன்னிடமிருந்து வெளிப்படுபவையே. எல்லாம் உனது வெளிப்பாடே.

இந்த வகையில் தொடர்ந்து சிந்திக்க, நமது ஆணவம் ஒழியும்.

🔹 பொற்கொடி - உமையன்னையைக் குறிக்கும். உமையன்னை என்பது நம்மைத் தவிர (நான் என்னும் தன்மையுணர்வைத் தவிர) மீதமனைத்தும் அடங்கும். ஏற்கனவே உமையன்னையோடு தான் இருக்கிறோம். இனி புதிதாக எப்படி "ஆங்கு பொற்கொடியோடு எய்த" முடியும்?

இப்போது, உலகினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். இது உலகக்காட்சி - பொய் காட்சி. திருக்கயிலாயக் காட்சியின் போது அனைத்தும் நம்முள்ளிருப்பதை உணர்வோம். நாமும் இருப்போம் (சிவம்). காட்சிகளும் தோன்றும் (உமை). இச்சமயத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் (மகிழும் மலை). யாருக்கு இந்த காட்சி கிடைக்கும்?

"நான் இன்னார்" (ஆத்தி), "நான் செய்கிறேன்" (கடுக்கை) போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, "எதுவும் நானில்லை. எல்லாம் நீயே." (திருவைந்தெழுத்து) என்று சிந்தித்து ஆணவத்தை ஒழிக்கும் மெய்யன்பர்களுக்கு!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #69 - திருக்கயிலாயக் காட்சி - சிறு விளக்கம்

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 இமையவரும் ... ஆனமலை

வானவரும், அன்பர்களும், மாமுனிவர்களும் காண, (சைவ) சமயத்தின் முதல் மெய்யாசிரியரான நந்தியம்பெருமான் (விடை) தாங்க, உமையன்னையோடு காட்சித் தருகிறாராம் சிவபெருமான். அதாவது, உலகக் காட்சியைப் புனைகிறார் ஆசிரியர்.

🔹 சிவம், அன்னை & விடை - உலகக்காட்சி

🔹 சிவம் & அன்னை - திருக்கயிலாயக் காட்சி. சில திருத்தலங்களில். "இன்னாருக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்த இடம்" என்று எழுதி, அம்மையப்பரை வரைந்திருப்பார்கள் / செதுக்கியிருப்பார்கள். அவ்விடங்களில், அந்த அருளாளர்கள் தாமே தாமாயிருக்க, படைப்பனைத்தும் தம்முள்ளிருக்க "இரு"ந்திருப்பார்கள்.

🔹 சிவம் - நிர்விகற்பசமாதி நிலை

வேடிக்கையாக 😊,

🔹 நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - உலகக் காட்சி

🔹 கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - சமாதி

🔹 இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி. அடிப்பவன் - விடை/மனம்.

🔸 வாக்குமனம் காயம் தமக்குஅரிய வானமலை

உள்ளபொருளுக்கு வாக்கு, மனம் & காயம் ஆகியவை கிடையாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

வானமலை - உயிர் மலை. வானம் (விசும்பு) என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் உயிர் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தியுள்ளார். விசும்பிற்கு எல்லை கிடையாது. ஒரு பொருளைத் தொடுவதுபோல் விசும்பைத் தொடமுடியாது. அதை ஒளிச்சிதறல் கொண்டே காண/உணரமுடியும். இவ்வாறே உள்ளபொருளும். படைப்பை வைத்தே படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று உணரமுடியும்.

அந்த படைப்பும் எதைக் கொண்டு படைக்கப்பட்டது? (இந்த கேள்விக்கு பாலைவன மதங்கள் 'ஙே' என்று முழிக்கும்! 😁) விடை கூறுகிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:

... நாமஉரு
சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆர்ஒளியும்
அத்தனையும் தானாம் அவன்!!

(ஆர்ஒளி - அறிவு ஒளி)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, September 9, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #68 - திருக்கடவூர் தல வரலாறு - சிறு விளக்கம்

கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #68

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கதித்தமுனி ... வீரமலை

சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கடவூர் தலவரலாற்றைப் பாடுகிறார் ஆசிரியர். அதாவது, திரு மார்க்கண்டேய மாமுனிவரைக் 🌺🙏🏽 கவர வந்த காலனை, இறைவன் தனது காலால் உதைத்த வரலாறு.

வீரட்டத்தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் பெருமான்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் / உத்திகள், ஆன்மிக உலகில் பெரும் தாக்கத்தை / மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவேதான் "வீரட்டானம்" என்ற சிறப்பு பெயரால் அழைக்கின்றனர்.

திருக்கடவூர் - மார்க்கண்டேய மாமுனிவரின் சமாதி திருத்தலம். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளம்தான் மூலவர் அமுதுடல் கொண்ட அண்ணல் (அமிர்தகடேசுவரர்). இவர் மெய்யறிவு பெறும் போது இவருக்குள் நடந்தவைதான் திருக்கடவூர் தலவரலாறாகியிருக்கிறது. இவர் கண்டுணர்ந்து தெரிவித்தவை தான் திரு சிங்கப்பெருமாள் திருவிறக்கம் மற்றும் திரு முருகப்பெருமான் பிறப்புக் கதைகளுக்கு அடிப்படையாகும்.

நாம் காணும் யாவையும் நம்முள்ளிருந்து உதிப்பவை. வெறும் தோற்றமாத்திரம் தான். நாமே உள்ளபொருள். இதை நாம் உணரமுடிவதில்லை. பல காலம் வடக்கிருந்து பக்குவமடைந்த பின், ஒரு சமயம், நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நாம் காணும் காட்சிகளை நீக்கிவிடும். அது வெளிப்படும் போதே நாம் யாரென்று உணரத் தொடங்கிவிடுவோம். காட்சிகள் நீங்கிய பிறகு இன்னமும் தெளிவாக உணர்ந்துவிடுவோம். இந்நிகழ்வே மெய்யறிவு பெறுதல் எனப்படும். இதனால் ஏற்படும் உடனடி விளைவு: சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல்!

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தனது 16 வயதில், மதுரையிலுள்ள தனது சித்தப்பபாவின் வீட்டில் மெய்யறிவு பெற்றார். "இதன் பின்னர் என்ன நடந்தது?" என்று ஒரு அன்பர் பின்னொரு நாள் கேட்டபோது பகவான் கொடுத்த பதில்: அத்தோடு மரணபயம் என்னைவிட்டு விலகிற்று!!

நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு, காட்சிகளை நீக்கி, நாம் யாரென்று நமக்கு உணர்த்தி, சாவைப் பற்றிய அச்சத்தை போக்குவதைத்தான் "சிவலிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருளினார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

காலனை உதைத்தல் = சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!!

மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரணாக
மரண பவம் இல்லா மகேசன் -- சரணமே
சார்வர்; தம் சார்வொடு தாம் சாவு உற்றார்; சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- உள்ளது நாற்பது

🔸சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச வாரமலை

இறைவன், தனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽 வடிவில் வந்து, தன்னை அன்பாக ஆட்கொண்டதைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.

(பட்சம் - அன்பு. "ஒரு பக்கமாக" என்றும் பொருளுண்டு. எனில், "இறைவன் தன் மீது மட்டும் அதிக கருணைக் கொண்டதாகப்" பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.)

வாரமலை - சரிவான மலை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 5, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #67 - வினைப்பிறவி - சிறு விளக்கம்

அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #67

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸வினைப்பிறவி - நாம் செய்யும் வினைகளின் விளைவுகளைத் துய்க்கவே உடல்கள் நமக்கு அமைகின்றன.

நாமே உள்ளபொருள். நம்மைத் தவிர மற்றவை பிறபொருள். உடல் மாட்டப்பட்டவுடன் நமது உண்மையை மறந்துவிடுகிறோம். பிறபொருள் ஆகிறோம். பிறவாகிறோம். பிறவி எடுக்கிறோம்.

உடல் மாட்டப்பட்டாலும், மறைந்துபோனாலும் நாம் நாமாகத்தான் இருக்கிறோம். துய்க்க வேண்டியதையெல்லாம் துய்த்து முடித்தபிறகு, நமக்கேற்ற மெய்யாசிரியர் வந்து, மேற்சொன்ன நமதுண்மையை சுட்டிக்காட்டிய பின் உணர்கிறோம். பின்னர், நிலை பெறுகிறோம்.

(வேடிக்கையாக: பிற-ஆக இருந்த நாம் மீண்டும் நாம்-ஆக ஆகிறோம்! 😊)

நிலைபேற்றினை அடைந்த பின், உடலோ, அதன் மூலம் கிடைக்கும் துய்ப்புகளோ நம்மை பாதிக்காது. பகவான் திரு ரமணர் 🙏🏽🌺 இறுதியாக அருளிய அறிவுரைகளில் ஒன்று: பிறவிகள் வரும்; போகும். அதனாலென்ன?

🔸அனவரதம் - எப்பொழுதும் / எக்கணமும்
🔸வழுத்தும் - வாழ்த்தும்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, September 3, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #66 - நீதி, தந்திரம், யந்திரம், மந்திரம் - சிறு விளக்கம்

ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #66

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸ஆதிமலை - திருவண்ணாமலையின் பழமையைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். புவிப்பந்தின் வயதில் மூன்றில் ஒரு பங்கு வயதுடையது. இம்மலையோடு ஒப்பிடுகையில் இமயமலை கை குழந்தையாகும்!!

🔸ஆதி அநாதிமலை - உள்ளபொருளைப் பற்றி பாடுகிறார். எல்லாம் தோன்றுவதற்கு முன்னும், எல்லாம் அழிந்த பின்னும் இருப்பது உள்ளபொருளாகிய இறைவன் மட்டுமே.

🔸அம்மை ஒரு பாதிமலை - அசைவற்றது இறைவன். அசைவது அன்னை. இரண்டும் சேர்ந்ததே உலகம். இது பற்றிய ஆராய்வுகள் காஞ்சியில் தொடங்கி, திருவருணையில் நிறைவு பெற்றிருக்கிறது. அசைவற்றதிற்கு வலது, அசைவதற்கு இடது என்று முடிவும் இங்கு எய்தப்பட்டிருக்கிறது. எனவே தான் "அன்னை இடப்பாகம் பெற்ற திருத்தலம்" என்று போற்றுகின்றனர்.

🔸ஓதிமறை பாடுமலை - எனில், இறைவன் ஆரிய நூல்களை ஓதிக் கொண்டிருக்கிறார் என்று பொருளல்ல!

"தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்பது பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்த ஒரு தலைசிறந்த மெய்யறிவியல் உத்தி. இது போன்று பல மெய்யறிவாளர்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் மற்றும் உத்திகளின் தொகுப்பே திருமறைகள். தோன்றும் ஒவ்வொரு மெய்யறிவாளரும் புதிதாக ஒன்றை உணர்ந்து சொல்வார். அல்லது, ஏற்கனவே இருப்பனவற்றிற்கு உரம் சேர்ப்பார். எனவே தான் "பாடும் மலை" என்று நிகழ்காலத்தில் பாடியுள்ளார் ஆசிரியர்.

🔸நீதிமலை - நீதி என்ற சொல்லுக்கு நெறி, முறை, மெய், நியதி என பல பொருள்கள் இருந்தாலும் இதன் அடிப்படை பொருள் கட்டுபடுத்துவதாகும். நிதி எனில் பொங்குவது, பெருகுவது, வெளிவருவது. குறிலுக்கு எதிரான பொருளை நெடில் தரவேண்டும். ஆகையால், நீதி என்பது அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் இருப்பது என்று விரியும். எதை அடக்குவது...? மனதை அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் தடுப்பது. அதாவது, பற்றற்றிருப்பது. பற்றற்ற மலை. பற்றற்ற இறைவன். இறைவன் பற்றற்றவர்.

🔸தந்த்ரமலை, யந்த்ரமலை & மந்த்ரமலை

🔹த்ர எனும் ஆரிய எழுத்துக்களின் பொருள் விடுவிப்பது.

🔹மந்த்ர எனில் மனதை தளைகளிலிருந்து, பற்றுகளிலிருந்து விடுவிப்பது. ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ திரும்ப திரும்ப "உருட்டிக்" கொண்டிருப்பதால் இது நடக்காது. அச்சொல்லின் / சொற்றொடரின் உட்பொருளை உணரவேண்டும். உணர்ந்ததை எக்கணமும் நினைவில் நிறுத்தவேண்டும். இப்பாடலில் வரும் "பஞ்சாக்கரம்" என்னும் திருவைந்தெழுத்தான "நமசிவாய" என்பது மிகச்சிறந்த மந்திரம் - பொருள் உணர்ந்து, அதன்படி நின்றால்!

🔹யந்த்ர எனில் உடலை விடுவிப்பது. இன்று இயந்திரம் எனில் நமது பணிச்சுமையைக் குறைப்பது என்று பொருள் கொண்டுவிட்டோம். ஆனால், இதன் உண்மையான பொருள், "உடல் எனும் தளையிலிருந்து நம்மை பிரித்துக்கொள்ள உதவுவது" என்பதாகும்.

🔹தந்த்ர எனில் மூச்சிலிருந்து / அசைவுகளிலிருந்து விடுவிப்பது. மூச்சு என்பது மனதின் தூல வடிவம் என்று அருளியிருக்கிறார் பகவான். மூச்சிலிருந்து விடுபடுவது என்பது மனதிலிருந்து விடுபடுவதாகும். அசைவுகளிலிருந்து விடுபடுவது என்பது அசைவற்ற நிலைக்கு செல்வதாகும். அசைவற்ற நிலை என்பது நிலைபேறு.

ஆக, மந்த்ர தந்த்ர யந்த்ர என்பவை நாம் மெய்யறிவில் நிலைபெற உதவும் கருவிகள் / உத்திகள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, August 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.

இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.

அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!

நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!

அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 29, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #64

கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கூனல் சிறுபிறையைக் ... வைத்தமலை

சிவபெருமானின் திருவுருவைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். பெருமான் என்பது நிலைபேற்றை அடைந்த ஒரு மெய்யறிவாளருக்கு சமம். எனில், அவரது திருவுருவத்தில் இருக்கும் பொருள்கள் மெய்யறிவாளரின் உள்ளநிலை மற்றும் அவரிடம் காணப்படும் பண்புகள், இயல்புகள் & தன்மைகளைக் குறிப்பவையாகும்.

🔸ஞானச் சரதமலை - மெய்யறிவில் உறுதியாய் உள்ள மலை அல்லது மெய்யறிவை உடலாகக் கொண்ட மலை

🔸ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற வரதமலை

ஆனந்த - ஆ+நந்த - எல்லையில்லா / முடிவற்ற.

ஆனந்த தாண்டவம் - எல்லையில்லா / மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு.

வடக்கிருந்து நிலைபேற்றினை அடைவதற்கு ஏற்ற இடம் திருவண்ணாமலை என்கிறார் ஆசிரியர்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Thursday, August 27, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #63 - அடி முடி காணா அண்ணாமலையார் - சிறு விளக்கம்

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மீண்டும் ஒரு முறை திருவண்ணாமலை தலவரலாற்றில் வரும் "அடி முடி காணா அண்ணாமலையார்" படலத்தைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். (அன்னம் - நான்முகன், கோலம் - பன்றி - பெருமாள்)

"நான்முகனாலும் மாயோனாலும் இறைவனைக் காணமுடியவில்லை" எனும் உவமையைக் கொண்டு 2 பொருள்களைப் பெறுவர்:

1. கல்வியாலும் (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் மெய்யறிவைப் பெறமுடியாது

2. புத்தியாலும் ஆணவத்தாலும் இறைவனை உணரமுடியாது

உவமையில் வரும் மேல் - கீழ் என்பதை வெளி - உள் என்று மாற்றிக்கொண்டால் இன்னொரு பொருளும் கிடைக்கும்.

பூமி என்பது மண். மண் என்பது நம் உடல். "பெருமாள் பூமிக்குள் சென்று தேடினார்" என்பது நாம் நமக்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். நான்முகன், பெருமாள் சென்ற திசைக்கு எதிரில் சென்றிருப்பார். எனில், உடலுக்கு வெளிப்புறம் என்று பொருள். இது, நாம் உலகிற்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். இருவரும் தோற்றார்கள். அதாவது, இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. பிறகு, எவ்வாறு இறைவனை அடைவது?

உவமையில் மீதமிருக்கும் கதாபாத்திரமான சிவபெருமான் வழிகாட்டுகிறார். தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு நெருப்புத் தூணாக நின்றிருப்பார். இறைவனை அடைய நாம் செய்யவேண்டியது தேடுவதல்ல. இருத்தல்!! நாமாக - தன்மையுணர்வாக - இருக்கவேண்டும். "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பது பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 வாக்கு.

உவமை உணர்த்தும் மூன்றாவது பொருள்: இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. இறைநிலையை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாமாக இருத்தலே!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Sunday, August 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #62 - பிட்டுக்கு மண் சுமந்த படலம், கூத்தப்பெருமான் - சிறு விளக்கம்

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

சிவப்பரம்பொருள், பழமையான மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானாக பிட்டுக்கு மண் சுமந்த படலத்தையும், தில்லையில் கூத்தப்பெருமானாக திருநடனம் புரிவதையும் போற்றிப் பாடுகிறார் ஆசிரியர்.

🔸#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்

🔹பிட்டு - இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் அனைத்து துய்ப்புகள்

🔹சுமக்கும் மண் - நமது உடல். "மண்ணினாய விகாரமும் மண்ணே" என்பது கண்ணபிரானின் 🌺🙏🏽 வாக்கு. உடல் எப்படி உருவானது? உணவிலிருந்து. உணவு எங்கிருந்து கிடைத்தது? தாவரங்களிடமிருந்து (அசைவம் எனில் தாவரம் -> விலங்கு -> மனித உடல்). தாவரம் எங்கிருந்து உருவானது? மண்ணிலிருந்து. ஆக, உடல் = மண்.

மண்ணை (உடலை) சுமந்து என்ன பெறுகிறோம்? வாழ்க்கை எனும் ஒரு சொல்லில் அடங்கும் பலவிதமான துய்ப்புகள். இந்த துய்ப்புகள் எனும் பிட்டுக்காக மண்ணைச் சுமக்கிறோம். எப்போது "இனி, பிட்டு வேண்டாம்" என முடிவெடுத்து அசைவற்று நிற்கிறோமோ (தன்மையுணர்வில் நிலை பெறுகிறோமோ) அதன் பிறகு மண்ணைச் சுமக்க வேண்டியிருக்காது.

🔹பெருமானின் மீது பட்ட பிரம்படி அனைத்துயிர்களின் மீதும் படுவது - எல்லோருக்குள்ளும் இருப்பது ஓர் இறைவன் தான் என்பதைக் குறிக்கிறது. படைப்பு என்பது நீரில் தோன்றும் குமிழிகள் போன்றது. குமிழிகள் பலவாக இருந்தாலும், எல்லாம் நீர் தான்.

#பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அருளுகிறார்: ... பொருட்களை, அவற்றின் உருவங்களையும், பெயர்களையும் கொண்டு வேறுபடுத்தி அறியலாம். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில், எல்லோரும் தங்களை ஒரே பெயரில் தான் அறிகிறார்கள். அப்பெயர்... "நான்"! யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். ... (பகவத் வசனாம்ருதம் - #582)

🔸#கூத்தப்பெருமான் திருநடனம் புரியும் தில்லை பொன்னம்பலம்

🔹பொன்னம்பலம் என்பது திருமூலர் 🌺🙏🏽 மற்றும் அவரது வழிச்சென்ற சிலரது 🌺🙏🏽 சமாதித் தொகுப்பாகும்.

🔹கூத்தப்பெருமான் என்பது நம்மைப் பற்றிய மெய்யறிவைக் கொடுக்கும் மெய்யாசிரியர், அவ்வறிவில் நிலைபெற உதவும் நல்ல துணைவன், நிலைபெற்ற பின் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டி!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, August 15, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #60 - செறிவு, விள்ளு, யாது - விளக்கம்

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கள்ளப் புலவேடர் ... கருத்துமலை

ஐம்புலன்களை அடக்கி, பக்குவமடைந்து, உலகம் எனும் மாயையிலிருந்து தெளிந்தோர் நிலைபெறுவதற்காக (செறிவாக - திண்ணியராக - திடமாக - அசைவற்று நிற்க) மலர்ந்த பெருமான்.

எப்போது நிலைபெறுவோம்? நாம் யாரென்று உணர்ந்த பிறகு. எப்போது நாம் யாரென்று உணர்வோம்? உலக காட்சி நீங்கிய பிறகு. இந்த உலக காட்சி நீங்குதலையே "விள்ள" (மலர்ந்த) என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். உலக காட்சிகள் நீங்குவது என்பது கிட்டதட்ட ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கழட்டுவது போலிருக்கும். (இதை வைத்தே திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கத்து மூலவரின் கீழ் சமாதியாகி இருப்பவர்) "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கவேண்டும் என்பது என் கருத்து)

🔸யாது இருக்கக் ... மருத்துமலை

யாது என்ற சொல் ஐயம், மயக்கம் மற்றும் நினைவு போன்ற பொருட்களில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாரென்று ஐயமற தெரிந்துகொள்ளாத வரை, உலக காட்சிகளைக் கண்டு மயங்கும் வரை (உண்மையென்று நம்பும் வரை), பழவினைகள் மீதமுள்ள வரை உடல் & உலக காட்சிகள் தோன்றிக்கொண்டுதானிருக்கும்.

காட்சிகள் தோன்றுவது எதற்காக? ஒரு முறை பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽 இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "காண்பான் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார்!! 👌🏽👏🏽

இவ்வகையில், காட்சிகளின் தோற்றம் என்பது நாம் நம்மை உணர்வதற்காக, அதில் நிலைபெறுவதற்காக, பிறப்பறுப்பதற்காக. பிறப்பு எனும் நோயை, காட்சிகளின் மூலம் குணப்படுத்துவதால் இறைவனை தெய்வ மருத்துவன் என்றழைக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, August 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.

🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து

🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.

நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽

🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.

🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து

🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!

🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.

🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, July 28, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #58 - குன்றம் குனிக்குமலை - சிறு விளக்கம்

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸நீலமலை தேடரிதாய் நின்றமலை

நீலமலை - பெருமாள். நான்முகனும் பெருமாளும் பெருமானின் முடி-அடியைத் தேடிய கதையில் வரும் பெருமாள். இங்கு பெருமாள் அகந்தையைக் குறிக்கிறார். அகந்தையால் மெய்யறிவை அடையமுடியாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸நின்றதழல் கோலமலை

மேற்சொன்ன "அடிமுடி காணா அண்ணாமலை" கதையில் பெருமான் நெருப்புத் தூணாக நின்ற கோலம்.

🔸#குன்றம் #குனிக்குமலை

முப்புரம் எரித்த கதையில் பெருமான் மேருமலையை வளைத்ததைப் பாடுகிறார்.

#முப்புரம் #எரித்த கதை: புவியைத் தேராக்கி, மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாக்கி, பெருமாள் கொடுத்த "தீர்ந்து போகாத அம்பாரத்துணியுடன்", மூன்று பறக்கும் கோட்டைகளில் சுற்றி வந்த மூன்று அரக்கர்களுடன் பல காலம் பெருமான் போரிடுகிறார். ஒரு சமயத்தில், "தாங்கள் கொடுத்த பொருட்களால்தான் பெருமானால் போரிடமுடிகிறது" என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். இதையுணர்ந்த பெருமான், போரிடுவதை நிறுத்திவிட்டு, புன்முறுவல் பூக்கிறார். முப்புரமும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது!

இது மிகப்பழமையான கதை. பெருமான் புரிந்த "#அட்டவீரட்ட" செயல்களுள் (8 வீரச்செயல்களுள்) ஒன்று. பல திருத்தலங்களின் தலவரலாறாக உள்ளது. பல வடிவுகளில் உள்ளது. நான் மேற்கண்ட வடிவை எடுத்துக் கொண்டேன்.

🔹3 பறக்கும் கோட்டைகள் - முப்புரம் - கனவு, நனவு & தூக்கம்
🔹தேரான புவி - நம் உடல்
🔹நாணான வாசுகி - மூச்சுக்காற்று
🔹வில்லான மேருமலை - சீவன் / மனம்
🔹பெருமாள் வழங்கிய தீராத அம்பாரத்துணி - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள் வழங்கிய அறிவுரைகள். பெருமாள் உயிரற்றதைக் குறிக்கிறார். உயிரற்றது என்பது ஐம்பூதங்களின் கலவை. உள்ளபொருளேயான பகவானிடமிருந்து ஒர் அறிவுரை வெளிப்பட்டிருந்தாலும், வெளிப்பட்ட பின் அது உயிரற்றதாகிவிடுகிறது. எனவே, எல்லா அறிவுரைகளும் பெருமாளின் கூறுகளாகின்றன. பெருமாள் வழங்கியவையாகின்றன.

எல்லாவற்றிற்கும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: இங்கு போரிடும் சிவபெருமான் யார்?

நாமே அது! நாமே உள்ளபொருள்!! இதை நாம் உணர்வதில்லை. பல காலம், வடக்கிருக்கிறேன் பேர்வழியென்று, பல சர்க்கஸ் வேலைகளை செய்துகொண்டு, உடலைக் கெடுத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில், "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தானாய் இருப்போம் - தன்மையுணர்வில் நிற்போம். இத்தோடு எல்லாம் முடிந்தது. இதைத்தான் "பெருமான் புன்முறுவல் பூத்து முப்புரம் எரித்தார்" என்று மேலே உருவகப்படுத்தியுள்ளனர்!

முப்புரம் எரிப்பு என்பது வடக்கிருந்து மெய்யறிவு பெறுதல். குன்றம் குனித்தது என்பது மனதை அழிப்பது.

🔸மூலமலை அந்தமலை

உள்ளபொருளான பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முன்னரும் இருக்கும். எல்லாம் அழிந்த பின்னரும் இருக்கும். என்றும் இருக்கும்.

🔸சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய் வந்தமலை

#குரு #நமச்சிவாயர் 🌺🙏🏽 தனது மெய்யாசிரியரான குகை நமச்சிவாயருக்கு 🌺🙏🏽 அடுத்தபடியாக அதிகம் குறிப்பிடுவது திரு சுந்தரமூர்த்தி நாயனாரைத்தான் 🌺🙏🏽!!

நாயனாருக்காக, அவர்தம் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது சென்று அவரது கோபத்தை தணித்த பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளரைக் 🌺🙏🏽 குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, July 18, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #57: வேட்ட அடியார்...

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 #வேட்ட #அடியார் - குளிக்குமலை

பாரம்பரிய பொருள்: வேள்வி செய்யும் அடியார் விளக்கிக் காட்டும் உள்ளபொருளை மெய்யன்பர்கள் உணர்ந்தவுடன், அவர்களிடமிருந்து பெருகிப் பொழியும் பெருமகிழ்ச்சி கண்ணீரால் அவர்கள் இறைவனைக் குளிப்பாட்ட, இறைவனும் மகிழ்ச்சியுடன் குளிப்பார்.

"வேள்வி செய்யும் அடியார்" என்றவுடன் ஆரியப் பூசாரிகளைக் கற்பனை செய்துகொள்வோம். இது தவறு. குண்ட நெருப்பில் சுள்ளிகளைப் போடுவது மட்டும் வேள்வியல்ல. நாம் செய்யும் எல்லா செயல்களுமே வேள்விதான். இவ்வுலகில் வாழ்வதே ஒரு வேள்விதான்.

🔹அடிப்படை செயலளவில், #வேள்வி என்பது குண்டத்திலுள்ள நெருப்பில் உயிரற்றப் பொருட்களைப் போடுவது. அதாவது, உடலென்னும் குண்டத்திலுள்ள தன்மையுணர்வு என்னும் நெருப்பில் நம்முள் தோன்றும் எண்ணங்களைப் போடுவது!

(எண்ணங்கள் உயிரற்றவை. இவற்றைப் போடுவது என்பது இவற்றைக் கவனியாதிருப்பது.
இச்செயலை "காமனை எரிப்பது" என்றாலும் தகும்.)

🔹அடுத்தது, #அடியார். தன்மையுணர்வே இறைவனடி. இவ்வுணர்வை விடாதிருப்பவரே இறைவனடியை இறுகப் பிடித்திருப்பவர். அடியார் - தன்மையுணர்வில் இருப்பவர்.

ஆக, வேட்ட அடியார் = உள்ளபொருளை உணர்ந்தவர். மிக உயர்ந்த பக்குவ நிலையில் இருப்பவர். இவர் அடுத்து அடைய வேண்டிய நிலை - நிலைபேறு.

இப்படிப்பட்டவர்கள் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு காட்டும் பாதையே "#சிவஞான #நாட்டம்". மெய்யறிவு கண்ணோக்கம். புறமுகமாகவே செல்ல பழக்கப்பட்டிருக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - தன்மையுணர்வின் மீது - திருப்புவதே மெய்யறிவுக் கண்ணோக்கம். தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது தானாய் இருப்பது.

நல்ல பக்குவ நிலையை அடைந்த ஒரு அன்பர், இத்தகைய கண்ணோக்கத்தை மேற்கண்ட வேட்ட அடியாரிடமிருந்து பெறும்போது, தன்னிலை - சிவநிலை - அடைந்து, பிறவியின் நோக்கம் முடிவடைந்துவிட்ட பெருமகிழ்ச்சியில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகிப் பொழிய வாய்ப்புள்ளது. சிவமாய் அவர் சமைந்து நிற்கும் வரை அவரது உடல் லிங்கத்திருமேனி எனப்படும். இப்போது அவரது கண்களிலிருந்து பொழியும் நீர் அவரது லிங்கத்திருமேனியை நனைக்கும். இவ்வாறு நனைப்பதே "பேரானந்த நீராட்டு" ஆகும்.

(சிவநிலையை அடைந்து, விதிவசத்தால் அதை இழந்து, பல காலம் போராடி, மீண்டும் அந்நிலையை அடையும் அடியார்களிடமும் மேற்கண்ட விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.)

🔸நாளும் #குறைவு #இலாச் #செல்வம் அளிக்குமலை

உலகிலுள்ள எல்லா செல்வங்களும் மாறக்கூடியவை & அழியக்கூடியவை. மாறாத, அழியாத, என்றும் குறையாத ஒரே செல்வம் மெய்யறிவு - நம்மைப் பற்றிய அறிவு - நான் எனும் தன்மையுணர்வு. இவ்வுணர்வு என்றுமே கூடாது, குறையாது, மறையாது & அழியாது. கனவு, நனவு, தூக்கம் என்று மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருப்பது இவ்வுணர்வு மட்டுமே. இறப்பின் போதும் உடல் தான் இறக்கிறது. இவ்வுணர்வு இறப்பதில்லை.

"இறக்கும் தருவாயில் நமது கடைசி எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி அமைகிறது என்று பகவத்கீதையின் 8ஆம் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அக்கணம் நமது தன்மையுணர்வை இறுகப் பற்றிக்கொள்வதற்கு, இப்போதே அது என்ன என்று தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள்." என்று அறிவுருத்தியுள்ளார் பகவான் 🌺🙏🏽 (வசனாம்ருதம் #621).

தன்மையுணர்வே நாளும் குறைவு இலாச் செல்வம்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, July 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #55: ஊனமலை - சிறு விளக்கம்

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொண்டருடை ஊனமலை

தொண்டர்களை உடைய குறையுள்ள மலை!! ஊன என்பதற்கு "ஐம்பூதங்களால் ஆன", "குறையுள்ள" என சில பொருள்கள் உண்டு. இங்கு "குறையுள்ள" என்பதே பொருத்தமாகும். எப்படி?

இவ்வளவு அருமையும், பெருமையும், தொன்மையும், வல்லமையும் கொண்டு மெய்யறிவு வடிவாய்த் திகழும் அண்ணாமலையாருக்கு தொண்டர்கள் இருக்கலாமா? தொண்டர்கள் எனில் (இங்கு) மெய்யறிவு பெறாதவர்கள். அண்ணாமலையாரின் பெருமை என்ன? அவரை நினைத்தவுடன் விடுதலை அளிப்பது. அவரது தொண்டர்கள் அவரை நினைக்காமல் இருப்பார்களா? அப்படி தன்னை நினைத்தவர்களை, நினைத்த கணம் அவர்களது தளைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படி விடுவித்திருந்தால் இன்னும் தொண்டர்கள் இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். எனவே, அண்ணாமலையார் குறையுள்ளவர் ஆகிறார்! குறையுள்ள மலை = ஊனமலை!!

இந்த குறையைப் போக்கிக்கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும்? தனது தொண்டர்களின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்காகவே - தனது தொண்டர்களின் பற்றறுக்கவே - குகை நமச்சிவாயராக 🌺🙏🏽 வடிவெடுத்தாராம்!! பற்றறுக்க ஓம்நமச்சிவாய குரு ஆனமலை!!! 😊

("இளநீரை ஒத்த ஆற்றுநீரில் துள்ளி விளையாடும் வாளைமீன்களால் தெறிக்கும் நீர் துளிகள் பகலவனின் தேரோட்டியான அருணன் மீது போய் விழுந்தன" என்று ஒரு புனைவுரை உண்டு. இதிலுள்ள கற்பனைத்திறன் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். இது போன்றொரு புனைவுரை தான் எனது விளக்கம். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Friday, July 10, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #54 - சிவபெருமான் தூது சென்றது, காமனை எரித்தது, தமிழ் சங்கம் நடத்தியது - சிறு விளக்கம்

தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #54

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொல்நாவல் ... வந்தமலை

பழமையான திருநாவலூரில் பிறந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 அவர் தம் முதல் மனைவியார் பரவை நாச்சியாரிடம் பகவான் 🌺🙏🏽 போன்ற ஒரு மெய்யறிவாளர் தூது போய்வந்த வரலாறு. ஏற்கனவே சற்று விரிவாகப் பார்த்திருக்கிறோம். "சிவபெருமான் தூது போய் வந்தார்" என்றதும், சடைமுடி, பிறைநிலவில் ஆரம்பித்து கால்களில் கழல் பூட்டிய ஒரு உருவம் தான் நம் நினைவுக்கு வரும்படி செய்துவிட்டார்கள்! இது தவறு.

தன் இருப்புணர்வில் நிலைபெற்ற அனைவருமே சிவபரம்பொருள் தான். ஆறுகள் பலவாக இருக்கலாம். கடலில் கலந்த பின்னர் அனைத்திற்கும் கடல் என்று ஒரு பெயர் தான். நீர்குமிழிகள் பலவிதமாக இருக்கலாம். அவை வெடித்த பின் இருப்பது ஒரே நீர்நிலைதான். இது போன்றே சீவர்களும் சிவமும். சீவர்கள் பலவாகத் தோன்றலாம். அவர்கள் காணும் காட்சிகளும் பலவாகத் தோன்றலாம். ஆனால், எல்லாம் "அடங்கிய" பின் (மெய்யறிவு பெற்ற பின்) இருப்பது ஒரு சிவபரம்பொருள்தான். இதனால் தான், அருணை, கூடல், நெல்லை போன்ற பழம்பெரும் திருத்தலங்களில் சமாதியாகி இருக்கும் மாமுனிவர்களை அண்ணாமலையார், சொக்கநாதர், நெல்லையப்பர் என்று தனித்தனியாக அழைத்தாலும் பொதுவாக சிவபெருமான் என்றே அழைத்தனர் நம் முன்னோர்.

மேற்கண்ட "#அடங்கு" என்ற சொல்லைப் பற்றி: தமிழில் வேடிக்கையாக "#அடங்குடா" என்பார்கள். அதிகம் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் சொல்லாக இன்று விளங்குகிறது. ஆனால், இதன் வேர் ஆன்மிகத்தில் உள்ளது. நம்மை (நமது கவன ஆற்றலை) நாம் வெளிவிட்டால் தான் உலகம். அடங்கியிருந்தால் - அடக்கிக் கொண்டிருந்தால் - நமது கவன ஆற்றலை நம் இருப்புணர்வின் மீதே வைத்துக் கொண்டிருந்தால் - எல்லாம் சிவமயம் தான். "மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்" என்பது பகவானது வாக்கு. அடங்கு எனில் தன்மையுணர்வில் அடங்குதல்!!

தமிழ் ஆன்மிக மொழி என்பதையுணர இன்னொரு எடுத்துக்காட்டு: மேற்சொன்னது போன்றே, அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்களைக் கண்டு பெரியவர்கள், "செத்த நேரம் #சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே?" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். படித்தவர் முதல் பாமரர் வரை பயன்படுத்தும் சொற்றொடர் இது. உலகில் வேறெங்கும் இப்படியொரு வசைவுச் சொற்றொடர் இருக்காது. வேறெந்த தெய்வத்தைக் கொண்டும் இருக்காது. இன்று இது வெறும் சொற்றொடர். ஆனால், அன்று, இவ்வாறு திட்டியவருக்கும், திட்டுப் பெற்றவருக்கும் "சிவம் என்றால் என்ன?", "சிவமாய் கிடப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருந்ததால் தான் அவ்வாறு திட்டமுடிந்தது, திட்டை ஏற்க முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும்!!

இவையெல்லாம் நம் அன்னைத்தமிழில் எவ்வளவு தூரம் ஆன்மிகம் கலந்திருக்கிறது என்பதற்கும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவுத் தாகம் கொண்டவர்கள் என்பதற்கும், ஆதிசைவமே நமது சமயம் என்பதற்கும், சிவபரம்பொருளே நாம் போற்றிய தெய்வம் என்பதற்கும் சிறு எடுத்துக்காட்டுகள்.

🔸நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை

இறைவன் நமக்கு வழங்கும் அறிவும், பொருளும் மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வதற்காக, மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதற்காக என்கிறார் ஆசிரியர். இதில் பொருளைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், நியாயம், தர்மம், கடமை, சமூக அநீதி, மக்களாட்சி, கல்வி, மருத்துவம் என பல பெயர்களால் நம்மிடமிருப்பதை பறித்துக் கொள்ள குடும்பம், உறவினர், சமூகம், மாநில அரசு, நடுவண் அரசு, பரங்கியர்கள் (எதிர்காலத்தில் சீனர்கள்) என பல அமைப்புகள் உள்ளன. தனியாகப் பகிர்ந்து கொண்டு நமக்கு நாமே பட்டைநாமம் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. 😁

🔸மன்மதனைக் காய்ந்தமலை

சிவபெருமான் மன்மதனை எரித்த கதை.

ஒரு எடுத்துக்காட்டு. எந்நேரமும் பகவானது அறிவுரைகளைப் படித்துக் கொண்டும், அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் ஒரு தீவிர அன்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம், வேறொரு மாமுனிவரின் அறிவுரையைப் படிக்கிறார். படித்ததும் சமாதியடைந்துவிடுகிறார். ஆனால், அவரது வினைத்தொகுதி இன்னமும் முழுவதும் தீரவில்லை. ஆகையால், அவரால் அந்நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. சமாதியில் இருக்க வேண்டிய காலம் முடிந்ததும், மாயை தனது வேலையைக் காட்டும்.

"பகவானின் அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். இப்படி வேறாரு பெருமானின் அறிவுரையால் வந்திருப்பது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?" என்று தூபம் போடும். இவரும், தான் ஏமாற்றப்படுவது அறியாமல், "ஆம். இதுவும் சரிதான். பகவானது அறிவுரைகளால் மீண்டும் இங்கு வந்து சேருவோம்." என்று எண்ணிக் கொண்டு புறமுகமாகிவிடுகிறார். இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அடுத்த முறை, வினைத்தொகுதி முழுவதும் தீர்ந்து, மீண்டும் சமாதியடைகிறார். இம்முறை மாயை தனது வேலையைக் காட்டினாலும் ஏமாறமாட்டார், கண்டுகொள்ளமாட்டார். பற்றிக்கொள்வதற்கு ஒருவரும் இல்லாததால் எழுந்த மாயை அடங்கிவிடும்.

முதல் முறை, நமது அன்பரை புறமுகப்படுத்திய இறையாற்றலை சைவத்தில் #சிவகாமி, #காமாட்சி என்றும், வைணவத்தில் வெண்ணெய் திருடிய #கண்ணன் என்றும் அழைப்பர்! அடுத்த முறை, அன்பரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அடங்கிய இறையாற்றலே #மன்மதன் எனப்படும். ஒதுக்கித் தள்ளப்பட்ட செயலே மன்மதனை எரித்ததாகும் (#காம #தகனம்)!!

(நம் நாட்டில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. ஒருவர் பெண்ணாக பார்த்ததை இன்னொருவர் ஆணாக பார்த்திருக்கிறார். மற்றொருவர் அதை ஆண்-பெண் (மன்மதன்-ரதி) என்று மேற்கொண்டு பிரித்திருக்கிறார். இவை எல்லாம் பிற்காலத்தில் இணைந்து, ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டன.  "மன்மதன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?" என்று சிந்தித்தால் போதும். "ஏன் மன்மதன்-ரதி என்று பிரித்தார்கள்?" என்று சிந்தித்தால் ஓரளவிற்கு மேல் பதில் கிடைக்காது. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் மனிதனின் ஆணவம், சுயநலம் மற்றும் தேவை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது.)

🔸கூடலில் சங்கத்தாருடன் தமிழை ஆய்ந்தமலை

கடல் கொண்ட தென்மதுரையில் நடந்த #முதல் #தமிழ் #சங்கம் சிவபெருமானின் தலைமையில் நடந்த வரலாறு.

சிவபெருமான் என்பது தன்னையுணர்ந்த மெய்யறிவாளரைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். ஆணவம் சிறிதுமற்ற, பொய் சொல்ல தேவையற்ற, மனிதப்பிறவியின் நோக்கமறிந்த இத்தகையோர் உருவாக்கிய மொழி என்பதால் தான் நம் அன்னைக்கு நிறைமொழி என்று பெயர்!!

இப்பெருமான்கள் நமது மொழியை மட்டுமல்ல, நமது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம், மருந்து, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் என அனைத்தையும் உருவாக்கி/சீர்செய்து கொடுத்தவர்கள். ஆரியத்தில் சத்ய யுகம் என்று ஒரு காலப் பகுதிக்கு பெயரிட்டிருப்பார்கள். இக்காலத்தில் பிராமணர்கள் ஆண்டார்கள் என்பார்கள் (பிராமணர் - பிரம்மத்தை அறிந்தவர் / பிரம்மமாய் இருப்பவர் - மெய்யறிவாளர்கள்). இது, அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா-ரஷ்யா) நடந்ததோ இல்லையோ, நமது புண்ணிய பூமியில் நடந்துள்ளது.

அன்று சிவபெருமானை ஆட்சியில் வைத்த நாம், இன்று கொள்ளையர்களை ஆட்சியில் வைத்திருக்கிறோம்! 😔 காலம் மாறும். என்றும் வாய்மையே வெல்லும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, July 8, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #53: தாயான உண்ணாமுலையம்மை & பாகம்பிரியாள் - சிறு விளக்கம்

மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #53

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸மூலமுதல் ... நாலுமறை பேசுமலை

மேலோட்டமாகப் பார்த்தால், "ஒரு தாய் போன்று, உண்ணாமுலையம்மை நாம் கேட்பதையெல்லாம் தந்திடுவார் என்று நான்மறைகள் கூறுகின்றன." என்ற பொருள் கிடைக்கும். ஆனால், இது சரியா? கேட்பதையெல்லாம் கொடுப்பவர் தாயா? பிள்ளை கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்? அனைத்தும் உணர்ந்த குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இந்தப் பொருளில் பாடியிருக்க வாய்ப்பில்லை.

🔹மூலமுதல் உண்ணாமுலை - எண்ணங்களற்ற நிலையில் உள்ளோர் - பகவான் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள்.

🔹சாலவரம் - சிறந்த வரம் - மெய்யறிவாளர்கள் தங்களை நாடிவருவோருக்கு என்றும் ஈந்தருளும் ஆன்ம அறிவு.

🔹நாலுமறை - முந்தைய வெண்பாவில் பார்த்தது. மறை என்பது உபநிடதங்களைக் குறிக்கும். நாலுமறை பேசும் மலை - உபநிடதங்களிலுள்ள பேருண்மைகளை வழங்கிய மாமுனிவர்கள்.

தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு என்றுமே ஆன்ம அறிவு வழங்கும் மெய்யறிவாளர்கள் (உண்ணாமுலையர்கள்) தாய் போன்றவர்கள் என்று பேருண்மைகளைக் கண்டுணர்ந்த மாமுனிவர்கள் கூறுகிறார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸பாகம் பிரியாச் சிவஞான வாசமலை

சிவ + ஞானம் - இருப்பு + அறிவு - தன்மையுணர்வு.

#பாகம் #பிரியாள் - உமையன்னை.
பாகம் பிரியாச் சிவஞானம் - நாம் காணும் உலகமும் நாமும் வேறு வேறல்ல.

"முதலில் ஒருவன் தான் உடலல்ல என்பதை தெரிந்து கொள்ளட்டும். பின்னர், எல்லாமும் தானே என்பதை தெரிந்து கொள்ளட்டும்." என்பது பகவானது வாக்கு.

கனவும், அதைக் காண்பவனும் வேறு வேறல்ல. காண்பவனிடம் உள்ளவற்றால் உருவானது தான் கனவு. அவனேதான் அது. இவ்வாறே நனவும். காண்பவை யாவும் நம்முள்ளிருந்து உதிப்பவை. நாம் எதனால் ஆகியிருக்கிறோமோ அதே பொருளால் ஆனது தான் காண்பவையும். காண்பவையும் நாமே. கனவைக் காண்பவனிடமிருந்து பிரிக்கமுடியாது. இவ்வாறே நனவும். காண்பவையே பாகம் பிரியாள்.

கனவும் நனவும் நம் விதிப்படி உதிக்கும், உதிக்காமலிருக்கும். ஆனால், நாம் எப்போதும் நாமாகத்தான் இருக்கிறோம். இந்த உண்மையை உணரவேண்டும்.

கனவு காணும்போது, காண்பவனுக்கு, "தான் கனவு காண்கிறோம்" என்ற அறிவு இருந்தால் போதும். அவன் கனவால் பாதிப்படையமாட்டான். கனவை ரசிப்பான். இவ்வாறே நனவிலும், "காண்பவை தோற்ற மாத்திரமே" என்ற அறிவிருந்தால் போதும். காட்சிகளால் பாதிப்படையமாட்டோம்.

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும்
ஏதேதும் தானாகா வண்ணம்
தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Saturday, July 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #52 - சோதிர்லிங்கம், தொல்மறை - சிறு விளக்கம்

தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேர்ஒளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தர்அகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #52

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தில்லைவனம் ... பேர்ஒளியாய் நின்றமலை

தில்லை, காசி, திருவாரூர், மதுரை மற்றும் நெல்லை ஆகிய இத்திருத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் திருமூலர் 🌺🙏🏽, நந்திதேவர் 🌺🙏🏽, கமலமுனி 🌺🙏🏽, சுந்தரானந்தர் 🌺🙏🏽 மற்றும் நெல்லையப்பர் 🌺🙏🏽 (உண்மையான பெயர் தெரியவில்லை) ஆகிய மாமுனிவர்கள் சகஜ சமாதியில் இருந்தவர்கள் என்று பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽.

பேர்ஒளியாய் - ஒளிமயமாய் - மெய்ப்பொருளாய் (மெய்ப்பொருளே ஒளி எனப்படும்). மெய்ப்பொருளாகவே இருந்தவர்கள். சகஜ சமாதியில் இருந்தவர்கள். ஒளியுடல் கொண்டவர்கள். ஆரியத்தில், சோதிர்லிங்கங்கள் எனப்படும் (சோதி - ஒளி, லிங்கம் - உடல்).

சோதிர்லிங்கம் எனில் நமக்கு 12 என்ற எண் நினைவுக்கு வரும். உடன், "தமிழகத்தில் உள்ள ஒரேயொரு சோதிர்லிங்கத் தலம் இராமேச்சுரம்" என்ற வரியும் நினைவுக்கு வரும். 😁 இந்த பட்டை நாமம் வடக்கிலிருந்து போடப்பட்டது. மிகவும் தொன்மையானதும், உலக மதங்களின் தாயாகிய இந்து சமயத்தின் பிறப்பிடமுமாகிய தமிழகம் ஒரேயொரு ஒளியுடலாரைத் தான் பெற்றெடுத்தது என்பதை ஏற்கமுடியாது! (விட்டால், ரிஷிவர்ஷாவிலிருந்து அவர்கள் வந்துசேர்ந்தபோது, இங்கு தமிழர்களில் ஒருவர்தான் கோவணமே கட்டியிருந்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள்!! 😏)

சில திருத்தல வகைகள்:

🔹சுயம்புத் தலங்கள் - எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல் தாமாகவே மெய்யறிவைப் பெற்ற மாமுனிவர்களின் சமாதிகள்

🔹குருத்தலங்கள் - இத்தலங்களில் சமாதி அடைந்துள்ள மாமுனிவர்கள், தாங்கள் உடல் தாங்கியிருந்த காலத்தில் கல்விச்சாலைகளை நடத்தியிருப்பார்கள்; சிறந்த ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள்.

🔹வீரட்டத் தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்துள்ள மாமுனிவர்கள், அறியாமை இருள் விலகி நிலைபேறு அடையும் வரை தமக்குள் நடந்த நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கண்டுணர்ந்து வெளியிட்டிருப்பார்கள். அவர்கள் வெளியிட்ட பேருண்மைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். திருக்கடவூரில் சமாதியாகி இருக்கும் திரு மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாவார். மெய்யறிவு வெளிப்படும் விதத்தைக் கண்டுணர்ந்து இவர் வெளியிட்ட பேருண்மை தான் சிங்கப்பெருமாள், முருகப்பெருமான், சிவனுமைமுருகு (சோமாஸ்கந்தர்) ஆகிய திருவுருவங்களுக்கு அடிப்படையாகின்றது.

அண்மையில் நம்மிடையே வாழ்ந்த பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 ஒரு சிறந்த ஒளியுடலார் ஆவார். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் நிலைபேற்றினை அடைந்ததால் இவர் சுயம்புத் திருமேனி உடையவராகிறார்.

🔸தொல்லைமறை பாடுமலை

தொல்லைமறை - பழமையான ஆரிய மறை நூல்கள். அணு, பிண்டம், அண்டம் என எல்லாவற்றின் தோற்றம், இயக்கம், மறைவு பற்றி, பன்னெடுங்காலமாக, நமது மாமுனிவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட தகவல்களை மறைத்து வைத்திருக்கும் தொகுப்பு. ஒரு எடுத்துக்காட்டு. காஷ்யப முனிவர் எல்லா உயிர்களுக்கும் தந்தை என்று பதிவு செய்திருப்பார்கள். இதன் உண்மையான பொருள் ஈரப்பதமே (காஷ்யபர்) உயிர்கள் தோன்றுவதற்கு அடிப்படை என்பதாகும்!! மேற்கத்திய அ'ழி'வியல் கடந்த 300 ஆண்டுகளில் "கண்டுபிடித்த" கோட்பாடுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் மாமுனிவர்கள் கண்டுணர்ந்துள்ளனர். 💪🏽

திருமறைகளுக்குள் பல பகுதிகள் அடங்கியிருந்தாலும், அவற்றிற்கு மங்காத புகழ் சேர்ப்பது ஆன்ம அறிவியலைப் பற்றிய உபநிடதங்களே. இந்த வெண்பா பாடலில் "மறை" என்ற சொல்லின் மூலம் ஆசிரியர் குறிப்பது இந்த உபநிடதங்களைத் தான்!

ஏனெனில், இதன் பின்னர் "பாடும்" என்று தான் பாடியிருக்கிறாரே தவிர "பாடிய" என்று பாடவில்லை. பாடும் என்ற சொல் நிகழ்காலத்தையும் குறிக்கும்; எதிர்காலத்தையும் குறிக்கும். முன்னொரு காலத்தில் தனக்குள் மூழ்கிய ஒரு மாமுனிவர் "நீயே அது" (தத்வமஸி) என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரமண மாமுனிவர் "தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்ற முத்தையெடுத்துக் கொடுத்தார். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, தனக்குள் மூழ்கும் ஒரு மாமுனிவர் இதே போன்றொரு முத்தைத்தான் வெளிக் கொணருவார். எனவே தான் "பாடும் மலை" என்று பாடினார் ஆசிரியர்.

தொல்லை மறை பாடும் மலை - என்றும் ஆன்மாவை/மெய்ப்பொருளை/நிலைப்பேற்றைப் பற்றியே பாடும் சிவம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, June 30, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு பாடல் #51 - நஞ்சுண்டகண்டன், திருநீறு - சிறு விளக்கம்

சண்ட விடத்தைச் சகம்இறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியும் அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #51

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸சண்ட விடத்தைச் சகம் இறந்து போகாமல்

பாற்கடலைக் கடையும் போது வெளிப்பட்டக் கொடிய நஞ்சை, உலகம் அழியாதிருக்கும் பொருட்டு சிவபெருமான் அருந்திய கதை.

ஏற்கனவே இக்கதையை விளக்கமாக பார்த்திருக்கிறோம் (நிர்விகற்ப சமாதி - சகஜ சமாதி, மூத்தவள் - இளையவள்). இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல் (தவமியற்றுதல்) / ஆன்ம போராட்டம். இதன் இறுதியில் தான் மெய்யறிவு கிடைக்கும். இந்த மெய்யறிவு நப்பின்னை, இளையவள், சின்னாயி, லட்சுமி என பலவாறு அழைக்கப்படும். இதற்கு முன்னர், அவரவர் வினைப்பயனின் படி, பலவித அறிவு வெளிப்படும் (எ.கா.: மற்றவர் மனதை படிப்பது, வெகு தூரத்தில் நடப்பதைக் காண்பது, விரும்பிய இடங்களுக்கு உடனடியாக சென்று வருவது). இவையனைத்தும் மூத்தவள், மூத்தாயி, மூதேவி, ஜேஷ்டா தேவி என பலவாறு அழைக்கப்படும். இவையே கொடிய ஆலகால நஞ்சு. நூல்கள், சிலைகள், ஓவியங்கள், கதைகள் என பல வழிகளில் மெய்யறிவைப் பற்றி பதிவு செய்த மெய்யறிவாளர்கள், அவ்வாறே இக்கொடிய நஞ்சைப் பற்றியும் பதிவு செய்திருந்தால் இந்நேரம் உலகம் என்னவாகியிருக்கும்?

அக்காலத்தில் மை போடுபவர்கள், கண்கட்டு வித்தைக் காட்டுபவர்கள் என்று மோசமான பேர்வழிகள் ஆங்காங்கே இருந்தனர். இவர்களெல்லாம் மேற்சொன்ன நஞ்சிலிருந்து சில துளிகளைப் பருகியவர்கள். சில துளிகளே இப்படிப்பட்டவர்களை உருவாக்கினால்... எனவே தான், இவற்றைப் பற்றி வெளியே சொல்லாமல், தங்களுக்குள்ளேயே இருத்திக்கொண்டார்கள் மெய்யறிவாளர்கள். இதுவே உலகத்தைக் காக்க சிவபெருமான் (மெய்யறிவாளர்) நஞ்சை அருந்தியதாக சொல்லப்பட்டது. (இது சரி. இப்போது அந்த மை போடும் கூட்டமும், கண்கட்டு வித்தைக் காட்டும் கூட்டமெல்லாம் எங்கே போயிற்று? கல்வி, ஊடகம் மற்றும் திரைத் துறைகளை ஊடுருவியுள்ளது!! 😉)

🔸மெய் முழுதும் பால்வெள்ளை நீற்றை அணியும்

நம் உடல் முதல் நாம் காணும் உலகம் வரை அனைத்தும் இருப்பற்றவை. திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. எரிந்து உருக்கலையாமல் இருக்கும் சாம்பல் போன்றவை. மொத்த உலகமும் இப்படி எரிந்து, உருக்கலையாமல் இருந்தால்... சுடுகாடு!! எனவேதான், "சிவபெருமான் சுடுகாட்டில் வசிப்பவர்" என்றழைக்கப்படுகிறார். அவர், "இவ்வுலகம் பொய்" என்ற பேருண்மையை (விபூதி/திருநீறு/சாம்பல்) என்றும் தன் நினைவில் நிறுத்தியிருக்கிறார் (பூசியிருக்கிறார்).

(இந்த உவமை புரியாமல், சுடுகாட்டில் நடுநிசியில் வடக்கிருந்து மனநலத்தையும் உடல் நலத்தையும் இழந்தோர் பலர்!! இது போன்று, குப்பைத்தாள்களை எரித்து கிடைக்கும் சாம்பலுடன் வாசனை வேதிப் பொருட்களை சேர்த்து, "ஸ்பெஷல் அபிஷேக விபூதி" என்று பட்டை நாமம் போட்டு விற்கப்படும் குப்பையை வாங்கி, உடல் முழுவதும் பூசிக்கொண்டு ஏமாறுவோரும் உண்டு! ஏமாற்றுவோரும் உண்டு!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽