Thursday, August 27, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #63 - அடி முடி காணா அண்ணாமலையார் - சிறு விளக்கம்

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மீண்டும் ஒரு முறை திருவண்ணாமலை தலவரலாற்றில் வரும் "அடி முடி காணா அண்ணாமலையார்" படலத்தைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். (அன்னம் - நான்முகன், கோலம் - பன்றி - பெருமாள்)

"நான்முகனாலும் மாயோனாலும் இறைவனைக் காணமுடியவில்லை" எனும் உவமையைக் கொண்டு 2 பொருள்களைப் பெறுவர்:

1. கல்வியாலும் (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் மெய்யறிவைப் பெறமுடியாது

2. புத்தியாலும் ஆணவத்தாலும் இறைவனை உணரமுடியாது

உவமையில் வரும் மேல் - கீழ் என்பதை வெளி - உள் என்று மாற்றிக்கொண்டால் இன்னொரு பொருளும் கிடைக்கும்.

பூமி என்பது மண். மண் என்பது நம் உடல். "பெருமாள் பூமிக்குள் சென்று தேடினார்" என்பது நாம் நமக்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். நான்முகன், பெருமாள் சென்ற திசைக்கு எதிரில் சென்றிருப்பார். எனில், உடலுக்கு வெளிப்புறம் என்று பொருள். இது, நாம் உலகிற்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். இருவரும் தோற்றார்கள். அதாவது, இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. பிறகு, எவ்வாறு இறைவனை அடைவது?

உவமையில் மீதமிருக்கும் கதாபாத்திரமான சிவபெருமான் வழிகாட்டுகிறார். தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு நெருப்புத் தூணாக நின்றிருப்பார். இறைவனை அடைய நாம் செய்யவேண்டியது தேடுவதல்ல. இருத்தல்!! நாமாக - தன்மையுணர்வாக - இருக்கவேண்டும். "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பது பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 வாக்கு.

உவமை உணர்த்தும் மூன்றாவது பொருள்: இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. இறைநிலையை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாமாக இருத்தலே!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment