Tuesday, October 31, 2023

பரிகாரம் - சிறு விளக்கம்


(எனக்குத் தெரிந்த பெரியவரொருவர் பரிகாரத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும், தனது பெற்றோர் செய்த பரிகாரத்தினால்தான் தான் பிறந்ததாகவும் சொன்னார். அவருக்கு நான் கொடுத்த பதிலே இவ்விடுகையாகும்.)

பரிகாரம் பற்றி அடியேனுக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

பரிஹார என்ற ஆரியச்சொல்லின் தமிழாக்கமே பரிகாரம் ஆகும். இச்சொல்லிற்கு "ஒதுக்கி வைப்பது", "தள்ளி வைப்பது", "விட்டு விடுவது" என்று பொருள் கொண்டு, எதையெதையோ செய்கிறார்கள். இவையனைத்தும் தவறாகும்!

பரிஹார - பரி + ஹார - சுற்றி + நகை / காப்பு. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு வளையம் என்று பொருள் கொள்ளலாம். நடைமுறை என்று வரும்போது, இந்த பாதுகாப்பு வளையத்தை தாங்குதிறன் என்று மாற்றிக்கொள்ளலாம்.

பழமையான திருக்கோயில்களுக்கு சென்றுவருவதினாலும், முதிர்ந்த சமயப் பெரியவர்களிடம் வாழ்த்துகளை பெறுவதினாலும், கொடுப்பினை இருப்பின், தேவையான தாங்குதிறன் கிடைக்கலாம். ஆனால், வருவதை மாற்றவோ / தடுக்கவோ முடியாது. அப்படியொரு கோயிலுக்கு சென்று வந்தபின், அல்லது, ஒரு பெரியவரிடம் வாழ்த்து பெற்றபின், நமது இடர் களைகிறதெனில், அதுவும் கொடுப்பினையில் இருக்கவேண்டும். இல்லையெனில், நிகழாது.

தங்களது பெற்றோர் திருப்புல்லாணிக்கு சென்றதும், அங்கு ஒரு சிங்களவரை சந்தித்ததும், அவர் தங்களது பிறப்பை முன்கூட்டியே தெரிவித்ததும் தங்களது பெற்றோரின் கொடுப்பினையில் இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெய்யறிவு அடைந்தபின் பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் அறிவுரை:

அவரவர் பிராரப்தம் பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாய் இருக்கை நன்று.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, October 24, 2023

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!


அன்னையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

அன்னையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, அன்னையின் திருவுருவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 அன்னையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 அன்னப்பறவை - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளும் பகுத்தறிவு.

🌷 மயில் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு சமம்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - அசைவது / மாறிக்கொண்டேயிருப்பது - வையகத்தை குறிக்கும். நாம் கற்கும் யாவும் வையகத்திலிருந்து கிடைத்தவையே.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை.

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 அன்னையின் கணவரான நான்முகன் - நான்கு திசைகளை குறிக்கும். அத்திசைகளிலிருந்து வரும் செய்திகளையும், தரவுகளையும் குறிக்கும்.

oOo

மெய்யியலில் பெண்ணுருவமும், நீர்நிலையும் நிலையற்றதை குறிக்கும். எனில், நிலையற்ற வையகத்திலிருந்து பெறப்படும் நிலையற்ற அறிவை நாமகள் குறிக்கிறார் என்று கொள்ளலாம். எனில், நிலையான அறிவு என்பதெது? அது எங்கிருந்து கிடைக்கிறது? யார் தருகிறார்கள்? இது பற்றி வேறோர் இடுகையில் அலசுவோம். 🙏🏽

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 22, 2023

தட்சிண கயிலாயமா? உத்திர திருவண்ணாமலையா?


👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்
👊🏽 பாரதத்தின் டெட்ராயிட்
👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

சமுத்திர குப்தர் வாழ்ந்தது 4ஆம் நூற்றாண்டில். நெப்போலியன் வாழ்ந்தது 18ஆம் நூற்றாண்டில். சமுத்திர குப்தர் ஒரு பேரரசர். நெப்போலியன் ஒரு சிற்றரசன். சமுத்திர குப்தர் வெற்றிவாகை சூடியவர். நெப்போலியன் தோற்று மடிந்தவன். இவ்வளவு வேறுபாடுகளிருந்தும், நயவஞ்சக வெள்ளையர்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நம்மை தாழ்த்துவதற்காகவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் சமுத்திர குப்தரை நெப்போலியனோடு ஒப்பிட்டு சிறுமைபடுத்தியிருப்பார்கள்.

இதுபோன்றொரு நயவஞ்சக செயல்தான் திருவருணையை "தட்சிண கயிலாயம்" என்றழைப்பதாகும்!! 👊🏽👊🏽

💥 திருக்கயிலாயத்தின் வயது இலட்சங்களில். திருவருணையின் வயது கோடிகளில்.

💥 புவிப்பந்தின் வயதில் மூன்றிலொரு பங்கு வயதுடையது திருவருணை. ஒப்பிடுகையில், திருக்கயிலாயமோ அண்மையில் தோன்றியது. 

💥 இருவிடங்களிலும் பல பெருமான்கள் வடக்கிருந்து (ஆரியத்தில், தவமிருந்து) திருநீற்று நிலையை (ஆரியத்தில், சமாதி) அடைந்துள்ளனர். ஆனாலும், "அடிக்கொரு இலிங்கம்" என்ற புகழ் திருவருணைக்குத்தான் உண்டு (அத்தனை பெருமான்கள் திருநீற்று நிலையிலுள்ளனர் என்பது பொருளாகும்!).

💥 இயக்கமற்ற உள்ளபொருளுக்கு (சிவம்) வலப்புறத்தையும், எண்ணங்கள் & காட்சிகளை தோற்றுவிக்கும் ஆற்றலுக்கு (அன்னை) இடப்புறத்தையும் ஒதுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது திருவருணையில்தான்!

🙏🏽 "திருக்கயிலாயம் சிவன் குடியிருக்கும் இடம் மட்டுமே. திருவண்ணாமலையோ சிவனேயாவார்!" என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்காகும்.

🙏🏽 செயற்கரிய செயல்கள் புரிந்து, தம்மை நாடி வந்த திரு காரைக்கால் அம்மையாரையும், திரு அப்பர் பெருமானையும் தமிழகத்திற்கே திருப்பியனுப்பி வைத்து, திருவாலங்காட்டிலும், திருவையாறிலும் குடியிருக்கும் பெருமான்களை சிறப்பித்தனர் அன்று திருக்கயிலையில் உடல் தாங்கியிருந்த பெருமான்கள்.

ஆனால், வயிற்றுப் பிழைப்பிற்காகவும், குறி மதத்தான்களிடமிருந்து உயிர் தப்புவதற்காகவும் இங்கு வந்து தஞ்சமடைந்த புல்லுருவிகள், காரியம் செய்யப்பட வேண்டிய ஆரியத்தையும், சிறு பிள்ளைகள் வைத்து விளையாட வேண்டிய உயிரற்ற பொம்மைகளையும், நெருப்புக்குழிகளையும் வைத்துக்கொண்டு, "தட்சிண கயிலாயம்", "தட்சிண கங்கை" என்று வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை சிறுமை படுத்திக்கொண்டிருக்கின்றன!!! 👊🏽👊🏽👊🏽🤬😡

திருக்கயிலாயத்தை திருக்கயிலாயமாக பார்ப்போம். திருவருணையை திருவருணையாக பார்ப்போம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, October 13, 2023

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?


👆🏽 பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட ஒரு பொன் மொழி.


அப்பொன்மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு 👆🏽.

ஆங்கில மொழி பெயர்ப்பில் ஆரியம் கலக்காதபோது, தமிழில் மட்டும் ஏன் ஆரியம் கலந்திருக்கவேண்டும்?

கேட்டால், பகவான் அப்படித்தான் பேசினார் என்பார்கள். பிறப்பால் மட்டுமே பகவான் ஆரியராவார். மனதளவில் அவர் தமிழராவார். திருநெறிய தமிழை அவர் விரும்பினார் என்பதற்கு அவர் வாழ்விலிருந்தே பல சான்றுகளை கொடுக்கமுடியும். அவர் வளர்ந்த & வாழ்ந்த சூழ்நிலையால் ஆரியம் கலந்து பேசினார். இரண்டன்மையை (ஆரியத்தில், அத்வைதம்) பற்றிய தூயத்தமிழ் நூல் இல்லையென்ற குறையை போக்கியவர். ஆரியத்தை கலந்து அன்னைத்தமிழை குறையாக்கும் பணியை தெரிந்து செய்திருக்கமாட்டார்.

இன்று பகவான் உடல் தாங்கியிருந்து, அவரிடம் நாம், "பகவானே, தாங்கள் இப்படி பேசினால் எங்களுக்கு சரியாக புரிவதில்லை. தயவு செய்து, ஆரியம் கலக்காமல் விளக்க வேண்டுகிறோம்." என்று வேண்டினால், மகிழ்ச்சியுடன் தூயத்தமிழில் விளக்குவார்; அல்லது, முயற்சியாவது செய்வாரென்று உறுதியாகக் கூறலாம்.

oOo

பகவானின் பொன்மொழி என்றுமுள தென்தமிழில் - சற்று விரிவாக:

மனமானது நமது தன்மையுணர்வில் ஒருமுகப்பட்டிருக்கவேண்டும். எண்ணங்கள் எழுந்து, மனதின் ஒருமுகம் சிதறுமானால், "அந்த எண்ணங்கள் யாருக்காக தோன்றின?" என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதால், எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும்; மனமும் மீண்டும் தனது வேரான தன்மையுணர்விற்கு திரும்பிவிடும்.

சற்று சுருக்கி:

மனதின் ஒருமுகம் சிதறுமானால், ஏன் சிதறியதென்று ஆராய வேண்டும். இப்படி ஆராய்வதால், அது தனது வேரில் ஒடுங்கிவிடும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, October 4, 2023

நாகபஞ்சமி - புனைவுக்கதையும் உட்பொருளும்


🔸 புனைவுக்கதை:

அர்ஜூனனின் பேரனான மன்னர் பரிட்சித்து, தட்சகன் என்ற பாம்பு கடித்து இறந்துவிட, அவரது மகன் ஜனமேஜயன், 7 நாட்களுக்குள் அந்த பாம்பை கொல்ல உறுதி பூண்டு, "பாம்பு வேள்வி" நடத்துகிறார். பார் எங்குமிருக்கும் பாம்புகள் தாமாக வந்து வேள்வித்தீயில் விழுந்து மாண்டுபோகின்றன. மீதமிருப்பது தட்சகன் மட்டுமே. அப்பாம்பு இந்திரனின் அரியணையை இறுகப் பற்றிக்கொண்டுவிடுகிறது. இதையறிந்த வேள்வி நடத்துவோர், முன்னைவிட மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துகின்றனர். ஒரு சமயத்தில், இந்திரனின் அரியணை ஆட்டம் காணத் தொடங்குகிறது. இது கண்ட இமையார் (ஆரியத்தில், தேவர்) மானசாதேவி என்ற பாம்புகளின் கடவுளை வேண்டுகிறார்கள். அவர் தனது மகனான ஆஸ்திக முனிவரை ஜனமேஜயனிடம் அனுப்பி, வேள்வியை நிறுத்தச் செய்கிறார்.

🔸 உட்பொருள்:

🌷 ஜனமேஜயன் - மெய்யறிவு தேடி, வடக்கிருப்பவர் (ஆரியத்தில், தவமிருப்பவர்)

🌷 வேள்விக்குழி - நமதுடல்

🌷 வேள்வித்தீ - நான் எனும் நமது தன்மையுணர்வு

🌷 வேள்வி செய்யும் முனிவர்கள் - மெய்யாசிரியர்களின் அறிவுரைகள். "மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துதல்" எனில் அவ்வறிவுரைகளை முனைப்புடன், இடைவிடாது சிந்தித்தல் & கடைபிடித்தலாகும்.

🌷 தீயில் வந்துவிழும் பாம்புகள் - எண்ணங்கள், தளைகள், பற்றுகள். எண்ணங்கள் தாமாகத் தோன்றுகின்றன என்பதை குறிக்கவே, பாம்புகள் தாமாக வந்து தீயில் விழுந்தனவென்று உருவகப்படுத்தியுள்ளனர்.

🌷 தட்சகன் எனும் பாம்புகளின் தலைவன் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணம். இவ்வெண்ணமே மற்றெல்லா எண்ணங்களுக்கும், பற்றுகளுக்கும் அடிப்படையாவதால், இதை பாம்புகளின் தலைவனாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🌷 இறுதியாக வரும் ஆஸ்திக முனிவர் - "நீயே உள்ளபொருள்" என்ற வாலறிவு / மெய்யறிவு. இவ்வறிவு கிடைத்ததும் எல்லாம் நின்று போகும். இதையே ஆஸ்திக முனிவர் வேள்வியை தடுத்து நிறுத்தினார் என்று பதிவு செய்துள்ளனர்.

oOo

👎🏽 பாம்புகள் எனில் எண்ணங்கள், தளைகள் & பற்றுகள் என்று முன்னமே பார்த்தோம். எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? மனதிலிருந்து. எனில், பாம்புகளின் தலைவி = மானசாதேவி = மனம் = மாயை / பெருமாள்!

மானசாதேவியை வேண்ட, அதாவது, மனதை வேண்ட மெய்யறிவு (ஆஸ்திக முனிவர்) கிடைக்குமென்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்!! இது முற்றிலும் தவறாகும். (சிங்கம் திரைப்படத்தில், லாரியை கடத்திக் கொண்டுவரும் கிட்நாப் சிங்கிடம், மோட்டார் வண்டியை கொடுத்துனுப்பிவிட்டு, அவர் கொண்டுபோய் சேர்த்துவிடுவார் என்று ஏட்டு எரிமலை நம்புவதற்கு சமமாகும். 😃)

அடைந்து கிடக்கும் ஓர் அறையில், இடத்தை உருவாக்க, அவ்விடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் பொருட்களை அகற்றினால் போதும். இங்ஙனமே, நம் மனதை அடைத்துக்கொண்டிருக்கும் பற்றுகளை, தளைகளை ஒழித்தால் போதும். நம்மை பற்றிய அறிவு - மெய்யறிவு - தானாக ஒளிரும். அதாவது, மானசாதேவியை (மனதை) விட்டொழிக்கவேண்டும்! அவரிடம் வேண்டக்கூடாது!!

👎🏽 "முன்னைவிட மிகுந்த முனைப்புடன் செய்யப்பட்ட வேள்வியால் இந்திரனின் அரியணையே ஆட்டங்கண்டது. அச்சமடைந்த இமையார் மானசாதேவியை வணங்கினர்."

இப்பகுதியை ஆராயத் தேவையேயில்லை. ஆரியப் பூசாரிகளையும், அவர்களது விருப்பத் தொழிலான வேள்வி செய்தலையும் உயர்த்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டப் பகுதியாகும்.

oOo

மொத்தத்தில், இந்த புனைவுக்கதையிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி: முனைப்புடன், நம்பிக்கையுடன் & இடைவிடாது வடக்கிருந்தால் மெய்யறிவு பெறலாம்!!

oOo

அடுத்து, ஜனமேஜயனின் தந்தையை பற்றி சற்று பார்ப்போம்.

ஜனமேஜயனின் தந்தை பரிட்சித்து மன்னர், பாம்புக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, குறிப்பிட்ட காலம் கடக்கும்வரை, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரமான கட்டிடத்தில் உண்ணாநோன்பிருப்பார். ஆனால், காலம் கடப்பதற்குள், தான் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக எண்ணி, ஒரு பழத்தை உண்ணத் தொடங்குவார். அதற்குள்ளிருந்த தட்சகன் அவரை கடித்துவிட, மாண்டு போவார்.

🌷 உயரமான கட்டிடம் - நமதுடல்

🌷 பாதுகாக்கப்பட்ட கட்டிடத்திலிருந்தார் - புலன்களை வென்றிருந்தார்

🌷 உண்ணாநோன்பிருந்தார் - மனதில் தோன்றும் எண்ணங்களையும், கண் முன்னே விரியும் காட்சிகளையும் ஒதுக்கித் தள்ளினார்

🌷 பழத்தை உண்ணுதல் - ஆசைக்கு இடங்கொடுத்தல் / மனதின் எழுச்சிக்கு இடங்கொடுத்தல் / தன்மையுணர்விலிருந்து விலகுதல்

🌷 தட்சகன் கடித்தல் - உடல்-வையகச் சிறையின் தொடக்கமான "நான் இவ்வுடல்" என்ற தப்பெண்ணத்திற்கு இடங்கொடுத்தல்

மொத்தத்தில், இப்புனைவுக்கதை தரும் செய்தி: புலன்களை வென்று, எவ்வளவு கடுமையாக வடக்கிருந்து, மெய்யறிவு பெற்றிருந்தாலும் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் அவ்வளவுதான்... கோவிந்தா!! உடல்-வையகச் சிறைக்குள் மீண்டும் சிக்கிக்கொள்வோம்.

oOo

🌷 நாக சதுர்த்தி - மனதை போற்றும் திருநாள்

🌷 கருட பஞ்சமி - அறிவை போற்றும் திருநாள்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻