மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #53
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
🔸மூலமுதல் ... நாலுமறை பேசுமலை
மேலோட்டமாகப் பார்த்தால், "ஒரு தாய் போன்று, உண்ணாமுலையம்மை நாம் கேட்பதையெல்லாம் தந்திடுவார் என்று நான்மறைகள் கூறுகின்றன." என்ற பொருள் கிடைக்கும். ஆனால், இது சரியா? கேட்பதையெல்லாம் கொடுப்பவர் தாயா? பிள்ளை கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்? அனைத்தும் உணர்ந்த குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இந்தப் பொருளில் பாடியிருக்க வாய்ப்பில்லை.
🔹மூலமுதல் உண்ணாமுலை - எண்ணங்களற்ற நிலையில் உள்ளோர் - பகவான் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள்.
🔹சாலவரம் - சிறந்த வரம் - மெய்யறிவாளர்கள் தங்களை நாடிவருவோருக்கு என்றும் ஈந்தருளும் ஆன்ம அறிவு.
🔹நாலுமறை - முந்தைய வெண்பாவில் பார்த்தது. மறை என்பது உபநிடதங்களைக் குறிக்கும். நாலுமறை பேசும் மலை - உபநிடதங்களிலுள்ள பேருண்மைகளை வழங்கிய மாமுனிவர்கள்.
தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு என்றுமே ஆன்ம அறிவு வழங்கும் மெய்யறிவாளர்கள் (உண்ணாமுலையர்கள்) தாய் போன்றவர்கள் என்று பேருண்மைகளைக் கண்டுணர்ந்த மாமுனிவர்கள் கூறுகிறார்கள் என்று பாடுகிறார் ஆசிரியர்.
🔸பாகம் பிரியாச் சிவஞான வாசமலை
சிவ + ஞானம் - இருப்பு + அறிவு - தன்மையுணர்வு.
#பாகம் #பிரியாள் - உமையன்னை.
பாகம் பிரியாச் சிவஞானம் - நாம் காணும் உலகமும் நாமும் வேறு வேறல்ல.
"முதலில் ஒருவன் தான் உடலல்ல என்பதை தெரிந்து கொள்ளட்டும். பின்னர், எல்லாமும் தானே என்பதை தெரிந்து கொள்ளட்டும்." என்பது பகவானது வாக்கு.
கனவும், அதைக் காண்பவனும் வேறு வேறல்ல. காண்பவனிடம் உள்ளவற்றால் உருவானது தான் கனவு. அவனேதான் அது. இவ்வாறே நனவும். காண்பவை யாவும் நம்முள்ளிருந்து உதிப்பவை. நாம் எதனால் ஆகியிருக்கிறோமோ அதே பொருளால் ஆனது தான் காண்பவையும். காண்பவையும் நாமே. கனவைக் காண்பவனிடமிருந்து பிரிக்கமுடியாது. இவ்வாறே நனவும். காண்பவையே பாகம் பிரியாள்.
கனவும் நனவும் நம் விதிப்படி உதிக்கும், உதிக்காமலிருக்கும். ஆனால், நாம் எப்போதும் நாமாகத்தான் இருக்கிறோம். இந்த உண்மையை உணரவேண்டும்.
கனவு காணும்போது, காண்பவனுக்கு, "தான் கனவு காண்கிறோம்" என்ற அறிவு இருந்தால் போதும். அவன் கனவால் பாதிப்படையமாட்டான். கனவை ரசிப்பான். இவ்வாறே நனவிலும், "காண்பவை தோற்ற மாத்திரமே" என்ற அறிவிருந்தால் போதும். காட்சிகளால் பாதிப்படையமாட்டோம்.
ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும்
ஏதேதும் தானாகா வண்ணம்
தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்
-- திரு நடனானந்தர் 🌺🙏🏽
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
No comments:
Post a Comment