Thursday, November 30, 2023

அடிமுடி காணா அண்ணாமலையார் - உட்பொருள்


🌷 கல்வியாலும் (அன்னம்) (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.

அன்னம் கலைமகளின் ஊர்தியாகும். கலைமகள் கல்விக் கடவுளாவார். எனவே, இங்கு, அன்னம் கல்வியை குறிக்கிறது.

பன்றியானது பெருமாளின் திருவிறக்கங்களில் ஒன்றாகும். பெருமாள் மலர்மகளின் கணவராவார். மலர்மகள் செல்வத்தின் கடவுளாவார். எனவே, இங்கு, பன்றி செல்வத்தை குறிக்கிறது.

🌷 அறிவாலும் (அன்னம்) மனதாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.

சமயக் குறியீடுகளில், அன்னம் கெட்டதிலிருந்து நல்லதை மட்டும் பிரித்தறிவதை குறிக்கும். எனவே, இங்கு, அறிவை குறிக்கிறது.

பன்றியானது சேற்றில் உழலும். இன்னொருவரின் கழிவை உண்ணும். வதவதவென்று குட்டிகள் ஈனும். இவையெல்லாம் மனதிற்கும் பொருந்தும் - மனமே ஒரு சாக்கடை, இன்னொருவரின் சாக்கடையை அறிய விரும்பும், எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். எனவே, இங்கு, பன்றி மனதை குறிக்கிறது.

🌷 இறைவனை உடலுக்குள்ளேயும் (பன்றி) காணமுடியாது; வெளியேயும் (அன்னம்) காணமுடியாது.

அன்னம் பறந்துசெல்லும். வெளிப்புறத்தை குறிக்கும். பன்றி மண்ணை பறிக்கும்; சேற்றை கிளறும். உட்புறத்தை குறிக்கும்.

oOo

கல்வியாலும், செல்வத்தாலும், அறிவாலும் & மனதாலும் இறைவனை உணரமுடியாது. இறைவனை நமக்குள்ளும் தேடமுடியாது. நமக்கு வெளியேயும் தேடமுடியாது. எனில், எப்படித்தான் உணருவது?

பகவான் திரு இரமண மாமுனிவர் கூறும் பதில்: தானாய் இருத்தலே தன்னையறிதலாம்!!

நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக - மட்டுமிருப்பதுதான் இறைவனை உணருவதாகும்! இதையே நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர். நெருப்பு தன்னொளி கொண்டது. நாமும் தன்னொளி பொருந்தியவர்கள். நாம் இருக்கிறோம் என்பதையுணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை.

நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலுக்குதான் தோற்றமும் முடிவுமுண்டு. நமக்கில்லை. இதையே அடிமுடி காணமுடியாத நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, November 28, 2023

மாதம் மும்மாரி பொழியட்டும்!!


இவ்வாழ்த்துரை உண்மையானால், அதாவது, மாதம் மூன்று முறை மழை பெய்தால்... அப்பகுதி சதுப்பு நிலமாகிவிடும்! 😃 மனிதர் வாழத் தகுதியற்றதாகிவிடும்!! எனில், இதன் உட்பொருளென்ன?

மாதம் + 3 மாரி + பொழி + அட்டும் என்று பிரிக்கலாம்.

🔸 மாதம் - புவியின் நகர்வு. பகலவனை புவி சுற்றிவர, மாதங்கள் உருண்டோடும்.

🔸 3 மாரி - இங்கு மாரி என்பது மழையை குறிக்காது. இறப்பை குறிக்கும்! மாரி என்ற சொல்லின் பல பொருட்களுள் ஒன்று இறப்பாகும்.

3 இறப்புகள் - கனவு, நனவு, தூக்கம். ஆரியத்தில், இவற்றை அவஸ்தைகள் என்பர். நமது சமயம் இவற்றை இறப்பாக காண்கிறது.

கனவு, நனவு, தூக்கம் எப்போது வரும்? ஒவ்வொரு நாளும் வரும். எனில்,

கனவு, நனவு, தூக்கம் = 1 நாள்.

🔸 பொழி - கடலருகேயுள்ள சிறு தீவு.

கடல் - மாயை / வையகம் / படைப்பு. 
தீவு - மாயையிலிருந்து மீண்டவர்.

🔸 அட்டும் - நடக்கட்டும். ஆணையிடுதல்.

இப்போது எல்லாவற்றையும் இணைப்போம்:

🌷 மாதம் - காலங்கள் உருண்டோடட்டும் / இயற்கையின் சுழற்சி நிற்காது நடக்கட்டும்.

🌷 மும்மாரி - நாட்கள் உருண்டோடட்டும்.

🌷 பொழி - நீ அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், பார்வையாளனாக மட்டுமிரு.

இன்னும் எளிமையாக்கினால்:

பிறவியுள்ளவரை இயற்கை நன்கு இயங்கட்டும். பிறவி முடிந்த பிறகு, பிறவாமை கிட்டட்டும்.

இவ்வளவுதானே உருப்படியான பிறவியெடுத்த ஒவ்வொருவருக்கும் வேண்டும்?

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஆரியப் படங்காட்டிகளின் கைங்கரியங்களில் சில...



💥 சோழர் காலத்தில் வெகுவாக தண்டிக்கப்பட்டவர்கள் ஆரியப்புருடர்களாம்!

💥 அப்போது இந்த "நஞ்சில்லா, நயவஞ்சகமில்லா & நன்றியுள்ள" கூட்டம் தற்குறிகளாக சுற்றிக் கொண்டிருந்ததாம்!! 😄

💥 ஆதித்த காரிகாலனை கொன்ற... தப்பு தப்பு... அவருக்கு முக்தி கொடுத்தவர்களாம்!!

💥 சங்கரமடம்தான் தமிழக தொல்லியல் துறையின் தலைமையகமாம்!!

oOo

தெலுங்கில் இக்கூட்டத்தை "பாவனவாலு" என்றழைக்கிறார்கள்.

பாவனவாலு - பாவனை செய்பவர்கள் - படம் காட்டுபவர்கள் - படங்காட்டிகள்!! 👌🏽

"நீதியுள்ள" இப்படங்காட்டிக் கூட்டம் மேலெழுந்த பின்னர், நம்மவர்கள் மீண்டும் மேலெழ முடியாமல்போனது. ஒரு வேளை, இவர்களைப் போன்று நம் முன்னோர்கள் "நீதியுள்ளவர்களாக" இருந்திருந்தால், இவர்களால் முன்னேறியிருக்க முடியுமா?

oOo

திரு ஸ்ரீதர ஐயவாள் காலத்தில், இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவ்வளவு வலுவுடனிருந்தனர். அப்போது, தும்மினால் பரிகாரம், இருமினால் பரிகாரம், நின்றால் பரிகாரம், உட்கார்ந்தால் பரிகாரம் என்று செல்வந்தர்களிடமிருந்து கறந்துள்ளனர். அன்றாட இறைவழிபாட்டிற்கும் பல கட்டுப்பாடுகளை, கடினமான நெறிமுறைகளை விதித்துள்ளனர். இவர்களது தொல்லை தாங்காத பலர், பாவாடை மதத்திற்கு மாறியுள்ளனர். இதை தடுக்கவும், இப்பீடைக் கூட்டத்திடமிருந்து நம் சமயத்தை காக்கவும், திரு ஸ்ரீதர ஐயவாள், திரு நாமப்போதேந்திராள் போன்ற பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் நாம சங்கீர்த்தன இயக்கம்!!

பகவான், பாரதியார், உவேசா, பரிதிமாற்கலைஞர் என அவ்வப்போது சில முத்துகள் தோன்றியுள்ளன. மீதமனைத்தும் சொத்தைகள்தாம்!

அவா க்ஷேமா டப்பு பவந்து!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, November 27, 2023

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 நமது தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும். பூம்பாவை பதிகத்தில், "விளக்கீடு காணாமல் சென்றுவிட்டாயே?" என்று பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கிறார் காழியூர் பிள்ளை.

🪔 பரணி விளக்கு

பரணி நாள்மீனன்று காலையில், திரு அண்ணாமலையார் கருவறையிலிருந்து ஒரு விளக்கை வெளியே எடுத்துவந்து, 5 விளக்குகளை ஏற்றுவர். அன்று மாலை, இவ்வைந்து விளக்குகளையும் மீண்டும் ஒரு விளக்காக்கி, கருவறைக்குள் எடுத்துச் செல்வர்.

இதன் பொருள்: படைப்பென்பது ஐம்பொருட்களாகும் (பஞ்சபூதங்கள்). இவ்வைந்தும் உள்ளபொருளிலிருந்து (பரம்பொருள்) தோன்றியவையாகும். படைப்பின் முடிவில், ஐம்பொருட்களும் மீண்டும் தோன்றிய பொருளிலேயே ஒடுங்கிவிடுகின்றன.

🪔 திருக்கார்த்திகை விளக்கு

கார்த்திகை நாள்மீனன்று மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் (ஆரியத்தில், உச்சி) விளக்கேற்றியதும், இல்லங்கள்தோறும் விளக்கேற்றுவர்.

இதன் பொருள்: விளக்குகள் எண்ணற்றவையாக, பல வகையாக இருந்தாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்று, உயிரிகள் கோடான கோடியாக இருந்தாலும், ஊர்வன, பறப்பன, நடப்பன என பலவகையாக இருந்தாலும், அவற்றினுள் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!!

மேற்கண்ட பேருண்மைகளை திரு இடைக்காட்டுச் சித்தரோ, அல்லது, அவருக்கு பின் அங்கு வாழ்ந்த பெருமான்களோ உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கவேண்டும். எனவேதான், இத்திருவிழாவை திருவண்ணாமலையில் மிகச்சிறப்பாகவும், திருவண்ணாமலையை தொடர்புபடுத்தி ஏனைய இடங்களிலும் கொண்டாடுகிறோம்.

oOo

🌷 விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் … ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது!

விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!

🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை விளைவுகள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!

இதற்கு இரண்டு பொருட்கள் உள்ளன:

🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை 

அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, "ஊருக்காக உழை" என்று சொல்லாமல் "கோயிலில் விளக்கேற்று" என்று சொல்லியிருக்கிறார்கள்.

பயன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பயனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.

கடமையை செய். பயனை எதிர்பார்க்காதே. — திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️_

🌷 “சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா” என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதைக் கேட்டிருப்போம்.

சாயங்காலம் – இரவுக்கு முந்தைய – இருள் சூழ்வதற்கு முந்தைய பொழுது. குடும்பத்திற்கு இடர்பொழுது வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஓர் இல்லத்தில், கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான அன்புமிருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் குறைவிருக்குமா?

oOo

ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது தீபாவளி திருநாளோடு (திரு கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்) இணைத்துக்கொண்டார்கள்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, November 21, 2023

மடியிலே கனம் வழியிலே பயம்


(இதற்கு முந்தைய இடுகையில், ஒரு சிறு பகுதியாக எழுதியிருந்ததை, சற்று விரித்து, தனி இடுகையாக மாற்றியிருக்கிறேன். 🙏🏽)

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடியில் - மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்

🔸 கனம் - சுமை - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (சுமைகளுக்கும்) ஆணிவேராகும்.

🔸 வழியில் - வழி+இல்

   - இல் - வீடு - இருப்பிடம் - தற்போதைய நமது வாழ்க்கை
     - எனில், முற்பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - அடுத்த பிறவியின் போது?
       அப்போதும், வழி+இல்-தான்.
     - இல் என்பது கிடைக்கும் பிறவியை குறித்தால், வழி என்பது... பிறவிகள் மாறினாலும் மாறாமலிருக்கும் நம்மை குறிக்கும்!!
     - இதனால்தான், நம்மில் நாமாக இருக்கும் முயற்சியை வழி+பாடு என்கிறோம். பாடு என்பது ஆரியத்தில் அனுபவமாகும். வழியாகிய அனுபவம்!

🔸 மீண்டும், தற்போதைய வழி+இல்-லுக்கு திரும்புவோம்:

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமடைந்து கொண்டுதானிருப்போம்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், சுமை நீங்கவேண்டும். சுமை நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும். அதாவது, வழி+பாடாக (வழி என்ற அனுபவமாக) மட்டும் இருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, November 17, 2023

இரும்பை மாகாளம் & மடியிலே கனம் வழியிலே பயம்


🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 திரு இரும்பை மாகாளம் உடையவர்
🌷 தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்
🌷 இத்திருவுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது திரு கடுவெளி சித்தராவார்.
🌷 இப்பெருமானின் வாழ்வில் நடந்த நிகழ்வொன்றை மேற்கோள் காட்டி பகவான் திரு இரமண மாமுனிவர் பேசியுள்ளார்.

oOo

கருவறைத் திருவுருவின் கீழேயிருப்பது யாரென்று கேட்டால்,

- பெரும்பாலான ஆரியப்பூசாரிகள் குழம்பிப்போவார்கள் ("இவன் என்ன கேட்கிறான்?")

- சிலர் மழுப்பிவிட்டு ("அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!"), அத்திருக்கோயிலின் புனைவுக்கதையை சொல்லி, "அந்த சுவாமிதான் இவர்" என்று சமாளிப்பார்கள்

- வெகுசிலர் திடுக்கிடுவார்கள் / திருட்டுமுழி முழிப்பார்கள் ("இவன் எப்படி கண்டுபிடித்தான்?", "இச்செய்தி எப்படி வெளியே வந்தது?", "இப்போது என்ன செய்வது?"...)

- ஒரு திருக்கோயிலிலிருந்த 50+ வயதான பூசாரி, "ஓகோ, உனக்கு அவ்வளவு தெரியுமா? எனக்கு எவ்வளவு தெரியுமென்று பார்!" என்ற வகையில், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே விடத்தொடங்கினார். 😈 ஜாப் செக்கியூரிட்டி கோவிந்தா-ஆவதைக் கண்டு, பதைபதைத்த அருகிலிருந்த இளம் பூசாரி, "மாமா!!" என்று அதட்டி, அவரை தன்னிலைக்கு திருப்பினார். 🤭

- ஆனால், இரும்பை திருக்கோயிலில் இருந்தவர் மட்டும், எவ்வித கலக்கமின்றி, தயக்கமின்றி, தெளிவாக, உள்ளேயிருப்பது திரு கடுவெளி சித்தரென்று சொன்னார். மடியில் கனமில்லாதவரென்று நினைக்கிறேன். 👏🏽👍🏽🙏🏽

oOo

மடியிலே கனம் வழியிலே பயம்

இப்பழமொழியின் புறப்பொருள் அனைவரும் அறிந்ததே. இதன் உட்பொருளை பார்ப்போம்.

🔸 மடி+இல் - மடித்து வைக்கக்கூடிய வீடு - கூடாரம் - நமது தலைக்கு சமம்
🔸 கனம் - செருக்கு - நான் இவ்வுடலென்ற தவறான எண்ணம். இவ்வெண்ணமே எல்லாவகையான பற்றுகளுக்கும் (கனங்களுக்கும்) ஆணிவேராகும்.
🔸 வழி - அன்றாட வாழ்க்கை

நம்மை நாம் உடலாக காணும்வரை, வாழ்க்கையை கண்டு அச்சமிருந்து கொண்டுதானிருக்கும்:

- இன்று தொழில் நன்றாக நடக்குமா?
- நமது வேலை நிலைக்குமா?
- கடன் கிடைக்குமா?
- கொடுத்த கடன் திரும்பவருமா?
- பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையுமா?
...

அச்சம் நீங்கவேண்டுமெனில், கனம் நீங்கவேண்டும். கனம் நீங்கவேண்டுமெனில் நமதுண்மையை நாம் உணரவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 13, 2023

தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!


🌷 திருவாரூரில் பிறக்க விடுதலை
🌷 தில்லையை காண விடுதலை
🌷 காசியில் இறக்க விடுதலை
🌷 திருவருணையை நினைக்க விடுதலை

மேலுள்ள புகழ்பெற்ற வரிகளின் பொருள்: மெய்யறிவு பெறுதல்!

இது போன்றதுதான் இணைப்புப் படத்திலுள்ள 5 வரிகள். வெவ்வேறு உருவகங்களாக இருந்தாலும் அவை மெய்யறிவு பெறுதலையே குறிப்பிடுகின்றன.

1. கண்ணபிரான் நரகாசுரனை கொன்றார்

🌷 நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்.

கண்ணபிரான் - 5,125 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரியரென்றும் கொள்ளலாம். அல்லது, நம் கண் முன்னே விரியும் வையகமென்றும் கொள்ளலாம். வையகத்தில் நாம் கண்ட / கேட்ட ஏதோவொன்று நமக்கு மெய்யறிவை கொடுக்கிறதென்று பொருள் கொள்ளலாம்.

(இணைப்புப் படத்திலுள்ள சொற்றொடர்களை எழுதியவர்கள் வைணவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை காண்பவனை விட காணப்படுவதே மேலானதாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பொருள் காணவேண்டும்.)

2. பாண்டவர்கள் 12 ஆண்டு கால காட்டு வாழ்விலிருந்து வெளிப்பட்டார்கள்

🌷 காடு - வையகம்
🌷 பாண்டவர்கள் - 5 பேர் - 5 புலன்கள்

மெய்யறிவு அடையும்வரை வையகத்திலிருந்து புலன்கள் வழியாக பெறப்படும் தரவுகளால் மனம் கட்டுண்டு கிடக்கும். மெய்யறிவு அடைந்த பிறகும், கண்கள் காணும், காதுகள் கேட்கும்... ஆனால், பாதிப்பிருக்காது. இதையே, "காட்டிலிருந்து புலன்கள் விடுபட்டன" என்ற உருவகப் படுத்தியுள்ளனர்.

3. இராமபிரான், இலக்குவன் & சீதையன்னை அயோத்திக்கு திரும்பினர்

🌷 இராமபிரான் - இருள். வைணவர்களுக்கு இருளே பெரிது. எனவே, முதலில் இடம் பெறுகிறது.
🌷 இலக்குவன் - ஒளி
🌷 சீதையன்னை - குளுமை
🌷 அயோத்தி - போர் நடக்காத இடம்

வையகம் என்பது போர் (அன்றாட வாழ்க்கை) நடக்குமிடம். இதற்கு எதிரான திருநீற்று நிலையென்பது போர் நடக்காத இடம் (அயோத்தி - அ+யுத்தா). அந்நிலைக்கு திரும்பும்போது, நாமிருப்போம் (ஒளி - இலக்குவன்); வெறுமையிருக்கும் (இருள்); ஜிஎஸ்டி-சூழ் வையகத்திலிருந்து தப்பினோம் என்ற குழுமையுமிருக்கும் (சீதை).

4. மன்னர் மகாபலியை ஒழித்து, அன்னை இலக்குமியை மீட்டார் குறளன் பெருமாள்

🌷 குறளன் பெருமாள் - வாமனர் - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற சின்னஞ்சிறு அறிவுரை.

🌷 மகாபலி - "நான் இன்னார்" என்ற நமது தனித்தன்மை

🌷 இலக்குமி - மெய்யறிவு

மெய்யாசிரியரின் அறிவுரையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நமது தனித்தன்மை அழியும். மெய்யறிவு தானாக வெளிப்படும். இதையே மகாபலியை (நமது தனித்தன்மை) அழித்து, அன்னையை (மெய்யறிவு) மீட்டார் குறளன் பெருமாள் (அறிவுரை) என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

5. அன்னை இலக்குமி தோன்றிய நாள்

மெய்யறிவு தோன்றிய நாள்.

oOo

ஆக, உருவகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையுணர்த்தும் பொருள் ஒன்றுதான்: தீபாவளி திருநாள் என்பது மெய்யறிவு கிடைத்த நாளாகும்!

🔸 யாருக்கு மெய்யறிவு கிடைத்த நாள்?

5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணன் என்ற ஆரியப் பெருமானுக்கு மெய்யறிவு கிடைத்த நாள்.

🔸 இத்திருநாளுக்கும் வைணவத்திற்கும் தொடர்புண்டா?

சிறிதளவு கூட கிடையாது. வைணவம் மெய்யறிவுக்கு எதிரானது. தீபாவளித் திருநாளோ மெய்யறிவைப் போற்றுவது. மேலும், கண்ணபிரான் வாழ்ந்த காலத்தில் வைணவமே கிடையாது!

🔸 எனில், ஏன் அனைத்து உருவகங்களும் வைணவர்களுடையதாக உள்ளன?

கண்ணபிரான் ஓர் ஆரியர் என்பதைத்தவிர வேறு பதில் கிடையாது.

எவ்வாறு அரேபியர்களை குறிமதத்தான்கள் கொண்டாடுகிறார்களோ, ஐரோப்பியர்களை எம்எல்எம் மதத்தினர் கொண்டாடுகிறார்களோ, அவ்வாறே கண்ணபிரானை ஆரியர்கள் கொண்டாடுகிறார்கள். ("அவரு எங்க ஆளு!")

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, November 11, 2023

அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!


💦👕🍥💥🎉🎊🪔

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 சிவபெருமானின் திருவுருவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின் உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ணபிரான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ணபிரான் நடத்திய போராக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலை நாயக்கராவார். நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் வைணவம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-வைணவர். அவரை வழி நடத்தியவர்களோ வடக்கத்திய பௌத்த-வைணவர்கள். அப்போதிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-சைவர்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திருஞானசம்பந்தப் பெருமான் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு வைணவத் திருவிழாவிற்குள் சைவக்கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. பிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ணபிரானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo


ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் திரு இரமண மாமுனிவர் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? "இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 9, 2023

கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்


கேதார கௌரி விரதம் - சிறு விளக்கம்:

🌷 கேதாரம் - நிலம்

🌷 கௌரி - நல்ல / சிறந்த ஒளி

🌷 விரதம் - விலகியிருத்தல்

🔸 நல்ல நிலத்தில் என்ன செய்வார்கள்?

உழுது, செம்மையாக்கி, பயிர் செய்து, நல்ல விளைச்சல் பார்ப்பார்கள். இதுபோன்று, "என்னை செம்மையாக்கி, நல்லெண்ணங்களை பயிர்செய்து, நல்விளைவுகளை அறுவடை செய்துகொள், இறைவா!" என்று இறைஞ்சுவதுதான் இந்நோன்பின் நோக்கமாகும்!

🔸 அடுத்து, விரதமென்றால் விலகியிருத்தலென்று பார்த்தோம். எதிலிருந்து விலகியிருத்தல்?

படைப்பிலிருந்து விலகியிருத்தல்.

🔸 அடுத்து, படைப்பு என்றாலென்ன?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமதுடல் மற்றும் நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சி. அதாவது, தோன்றி மறையும் யாவும் படைப்பாகும்!

🔸 மேற்சொன்னவற்றையெல்லாம் விலக்கிவிட்டால், மீதமென்ன இருக்கும்?

"நான்" என்ற தன்மையுணர்வு மட்டும் மீதமிருக்கும்! வகை வகையாக பெயர்களை வைத்துக் கொண்டாலும், இந்நிலையை அடைவதுதான் எல்லா விரதங்களின் நோக்கமாகும். விரதமென்ற ஆரியச்சொல்லுக்கு சமமான தமிழ் சொல் "நோன்பு" ஆகும்.

oOo

அடுத்து, கேதார்நாத் என்ற பெயரின் உட்பொருளை சற்று சிந்திப்போம்.

கேதார்நாத் -> கேதாரம் + நாதன் -> நிலம் + தலைவன்.

🔸 எந்த நிலத்தின் தலைவன்?

வையகம் எனும் நிலத்தின் தலைவன்.

🔸 நிலத்தில் என்னென்ன நிகழ்கின்றன?

செடி கொடிகள் முளைக்கின்றன. அவற்றை பல்லுயிரிகள் உண்கின்றன. அவற்றை வேறுயிரிகள் உண்கின்றன. பிறகு, உயிரிகள் இறக்கின்றன. அவற்றின் உடல்கள் மண்ணோடு மண்ணாகின்றன. மீண்டும் அடுத்த சுழற்சி தொடங்குகிறது. இதற்கு சமமான நிகழ்வுகள்தாம் வையகத்தில் நிகழ்கின்றன.

பிறத்தல், வளர்தல், வாழ்தல், இறத்தல் என்ற சுழற்சி தொடர்ந்தவண்ணம் இருப்பதால், வையகம் எனும் அன்னையை நிலமாக கணக்கிட்டு, இவ்வையகம் தோன்றி, இருந்து, மறைய இடங்கொடுத்திருக்கும் உள்ளபொருளை (சிவத்தை) தலைவனாக கணக்கிட்டுள்ளனர். அந்த சிவமாக சமைந்த ஒரு பெருமான் குடியிருக்கும் (ஆரியத்தில், சமாதியாகியிருக்கும்) இடமே கேதார்நாத் ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 6, 2023

திரு மாகறல் பெருமான் - பெயர் விளக்கம்


(மாகறல், காஞ்சிபுரம் - திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயில்)

கறல் - விறகு / கட்டை
மாகறல் - பெருங்கட்டை / சிறந்த விறகு

மெய்யறிவாளர்கள் என்பவர்கள் வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, முனைப்பற்று அப்படியேயிருப்பார்கள். அப்படிப்பட்ட மெய்யறிவாளர்களுள் தலைசிறந்தவர் இவ்வுடையவருக்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் என்பது பொருளாகும்.

இதே பொருளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் தாணு (ஸ்தாணு) என்ற ஆரியப்பெயருமாகும்.

இவருக்கு அடைக்கலங்காத்தப் பெருமான் என்ற பெயருமிருக்கிறது.

அடைக்கலம் - புகலிடம் - பாதுகாப்பான இடம். எது அப்படிப்பட்ட இடம்? அவர் அடைந்திருக்கும் திருநீற்று நிலையே அப்படிப்பட்ட இடமாகும்! அடைக்கலங்காத்தவர் எனில்...

- தனது நிலையை காத்துக் கொண்டவர்
- தனது நிலையை விடாப்பிடியாக பற்றிக் கொண்டவர்
- தனது நிலையில் உறுதியாக இருந்தவர் 

என பொருள் கொள்ளலாம். இப்பொருளும், மாகறல் பெருமான் என்ற பெயரின் பொருளும் ஒன்றுதான்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, November 5, 2023

ஒரு சொலவடைக்குள் நம் சமயம் மொத்தமும் அடக்கம்!! 😍


அண்மையில், பின்வரும் பழமொழி / சொலவடை கிடைத்தது:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அறியாதன விலகும்
காட்டை திருத்த வயல்
மலையை திருத்த வீடு

இது முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்ததாகும்! மிகவும் பண்பட்ட ஒருவரே இதை எழுதியிருக்கமுடியும்.

🌷 காட்டை திருத்த வயல்

ஒரு பகுதி காடாக இருக்குமானால், அதனால் மனிதர்களுக்கு பயனில்லை. அக்காட்டை சீர்திருத்தி, வயலாக மாற்றினால், குடியானவன் முதல் அரசன் வரை எல்லோருக்கும் பயனளிக்கும். (இன்று, காட்டை அழிப்பது குற்றமாகும் / தவறாகும். இதை அக்கால கண்ணோட்டத்தில் காணவேண்டும். தொண்டை மண்டலக் காடுகளை வெட்டி, சீர்திருத்தி வயல் நிலங்களாக மாற்றியதால்தான், கரிகாலச் சோழருக்கு "காடுவெட்டி" என்ற பட்டப்பெயர் சேர்ந்தது.)

மெய்யியலில், காடு என்பது வையகத்தை குறிக்கும். வையகம் என்பது மக்கள் திரள். பண்படாத மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? அசல் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதிகளை (கொடிய காடுகளை) போன்றிருக்கும். இதுவே, பண்பட்ட மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? நிலத்தை உழுது, பண்படுத்தி, விதைநேர்த்தி செய்து, நேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை இட்டு, சரியான நேரத்தில் நீர் பாய்ச்சி, களையெடுத்த நெல் வயலைப் போன்றிருக்கும்!!

🌷 மலையை திருத்த வீடு

மனித உடலில் மலையென்பது தலையை குறிக்கும். ஐம்புலன்களில் 4 புலன்கள் தலையிலுள்ளன. விழிப்பு நேரத்தில் நாம் இயங்குவது தலையிலிருந்துதான். எல்லா எண்ணங்களும் தோன்றுவது தலைக்குள்தான். மனமானது விழிப்பு நேரத்தில் தலையிலிருந்து செயல்படுவதாக கணக்கு (உறக்கத்தில், அது இதயத்திற்குள் ஒடுங்கிவிடுகிறது).

மலையை திருத்த -> தலையை திருத்த -> மனதை திருத்த -> வீடுபேறு கிட்டும்.

🌷 அறியாதெனவெல்லாம் நிலையானவை

தற்போது, நம் கண் முன்னே விரியும் வையகத்தை நிலையானதாகவும், நம்மை நாம் நிலையற்றதாகவும் காண்கிறோம். ஆனால், நாம்தான் நிலையான பொருள்! அசைவும், அழிவும் நமக்கில்லை. இதை நாம் உணர்வதில்லை. இதையே, "அறியாதனவெல்லாம் நிலையானவை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

🌷 அறியும்தோறும், அறியாதன விலகும்

🔸 அறியும்தோறும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது.

🔸 அறியாதன விலகும் - வெகுநேரம், இச்சொற்றொடர் பொருந்தி வராமல், தகராறு செய்து கொண்டிருந்தது. பின்னர், "அறி" என்பதை "அரி" என்று மாற்றிப்பார்த்தேன். பொருந்திவிட்டது!

அரி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. இங்கு பெருமாள் & வண்டு ஆகிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில், பெருமாள்.

பெருமாளுக்கு ஆரியத்தில் ஹரி என்றொரு பெயருண்டு. இந்த ஹரி தமிழில் அரி என்று மாறும்.

பெருமாள் என்பதென்ன? நம்மை தவிர மீதமனைத்தும். மனம், உடல் & வையகக் காட்சிகள் யாவும் பெருமாளாகும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனம், உடல் & வையகக் காட்சிகள் விலகிப்போகும். அதாவது, அவற்றின் உண்மைத்தன்மையை நாம் உணர்ந்துகொள்வதால், அவற்றினால் பாதிப்படையமாட்டோம் என்பது பொருளாகும்.

அடுத்தது, வண்டு.

மெய்யியலில், வண்டு என்பது மனதைக் குறிக்கும். ஏனெனில், வண்டிற்கு ஐந்து கண்களுள்ளன. ஐந்து கண்கள் = ஐம்புலன்கள். ஐம்புலன்களின் வழியாக இயங்குவது... மனமாகும். வண்டானது ஒரு பூவில் நிற்காது. ஒவ்வொரு பூவாக தாவிக்கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனமும் ஓர் எண்ணத்தில் நிற்காது. எண்ணம் விட்டு எண்ணம் தாவிக்கொண்டேயிருக்கும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனமானது அதன் வலுவை இழந்துவிடும். ஓயாமல் எண்ணங்களை தோற்றுவித்து, நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருந்த மனமானது, அதன் வலுவை இழந்து, ஒடுங்கிவிடும்.

இவ்வகையில், பெருமாள் & வண்டு ஆகிய இரு சொற்களுமே ஒரே பொருளைதான் கொடுக்கின்றன!

இனி, எழுத்துப்பிழை இல்லாத பழமொழியை / சொலவடையை மீண்டுமொரு முறை பார்ப்போம்:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அரியாதன விலகும்
காட்டை திருத்த வயல் 
மலையை திருத்த வீடு

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻