தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #54
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
🔸தொல்நாவல் ... வந்தமலை
பழமையான திருநாவலூரில் பிறந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 அவர் தம் முதல் மனைவியார் பரவை நாச்சியாரிடம் பகவான் 🌺🙏🏽 போன்ற ஒரு மெய்யறிவாளர் தூது போய்வந்த வரலாறு. ஏற்கனவே சற்று விரிவாகப் பார்த்திருக்கிறோம். "சிவபெருமான் தூது போய் வந்தார்" என்றதும், சடைமுடி, பிறைநிலவில் ஆரம்பித்து கால்களில் கழல் பூட்டிய ஒரு உருவம் தான் நம் நினைவுக்கு வரும்படி செய்துவிட்டார்கள்! இது தவறு.
தன் இருப்புணர்வில் நிலைபெற்ற அனைவருமே சிவபரம்பொருள் தான். ஆறுகள் பலவாக இருக்கலாம். கடலில் கலந்த பின்னர் அனைத்திற்கும் கடல் என்று ஒரு பெயர் தான். நீர்குமிழிகள் பலவிதமாக இருக்கலாம். அவை வெடித்த பின் இருப்பது ஒரே நீர்நிலைதான். இது போன்றே சீவர்களும் சிவமும். சீவர்கள் பலவாகத் தோன்றலாம். அவர்கள் காணும் காட்சிகளும் பலவாகத் தோன்றலாம். ஆனால், எல்லாம் "அடங்கிய" பின் (மெய்யறிவு பெற்ற பின்) இருப்பது ஒரு சிவபரம்பொருள்தான். இதனால் தான், அருணை, கூடல், நெல்லை போன்ற பழம்பெரும் திருத்தலங்களில் சமாதியாகி இருக்கும் மாமுனிவர்களை அண்ணாமலையார், சொக்கநாதர், நெல்லையப்பர் என்று தனித்தனியாக அழைத்தாலும் பொதுவாக சிவபெருமான் என்றே அழைத்தனர் நம் முன்னோர்.
மேற்கண்ட "#அடங்கு" என்ற சொல்லைப் பற்றி: தமிழில் வேடிக்கையாக "#அடங்குடா" என்பார்கள். அதிகம் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் சொல்லாக இன்று விளங்குகிறது. ஆனால், இதன் வேர் ஆன்மிகத்தில் உள்ளது. நம்மை (நமது கவன ஆற்றலை) நாம் வெளிவிட்டால் தான் உலகம். அடங்கியிருந்தால் - அடக்கிக் கொண்டிருந்தால் - நமது கவன ஆற்றலை நம் இருப்புணர்வின் மீதே வைத்துக் கொண்டிருந்தால் - எல்லாம் சிவமயம் தான். "மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்" என்பது பகவானது வாக்கு. அடங்கு எனில் தன்மையுணர்வில் அடங்குதல்!!
தமிழ் ஆன்மிக மொழி என்பதையுணர இன்னொரு எடுத்துக்காட்டு: மேற்சொன்னது போன்றே, அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்களைக் கண்டு பெரியவர்கள், "செத்த நேரம் #சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே?" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். படித்தவர் முதல் பாமரர் வரை பயன்படுத்தும் சொற்றொடர் இது. உலகில் வேறெங்கும் இப்படியொரு வசைவுச் சொற்றொடர் இருக்காது. வேறெந்த தெய்வத்தைக் கொண்டும் இருக்காது. இன்று இது வெறும் சொற்றொடர். ஆனால், அன்று, இவ்வாறு திட்டியவருக்கும், திட்டுப் பெற்றவருக்கும் "சிவம் என்றால் என்ன?", "சிவமாய் கிடப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருந்ததால் தான் அவ்வாறு திட்டமுடிந்தது, திட்டை ஏற்க முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும்!!
இவையெல்லாம் நம் அன்னைத்தமிழில் எவ்வளவு தூரம் ஆன்மிகம் கலந்திருக்கிறது என்பதற்கும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவுத் தாகம் கொண்டவர்கள் என்பதற்கும், ஆதிசைவமே நமது சமயம் என்பதற்கும், சிவபரம்பொருளே நாம் போற்றிய தெய்வம் என்பதற்கும் சிறு எடுத்துக்காட்டுகள்.
🔸நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை
இறைவன் நமக்கு வழங்கும் அறிவும், பொருளும் மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வதற்காக, மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதற்காக என்கிறார் ஆசிரியர். இதில் பொருளைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், நியாயம், தர்மம், கடமை, சமூக அநீதி, மக்களாட்சி, கல்வி, மருத்துவம் என பல பெயர்களால் நம்மிடமிருப்பதை பறித்துக் கொள்ள குடும்பம், உறவினர், சமூகம், மாநில அரசு, நடுவண் அரசு, பரங்கியர்கள் (எதிர்காலத்தில் சீனர்கள்) என பல அமைப்புகள் உள்ளன. தனியாகப் பகிர்ந்து கொண்டு நமக்கு நாமே பட்டைநாமம் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. 😁
🔸மன்மதனைக் காய்ந்தமலை
சிவபெருமான் மன்மதனை எரித்த கதை.
ஒரு எடுத்துக்காட்டு. எந்நேரமும் பகவானது அறிவுரைகளைப் படித்துக் கொண்டும், அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் ஒரு தீவிர அன்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம், வேறொரு மாமுனிவரின் அறிவுரையைப் படிக்கிறார். படித்ததும் சமாதியடைந்துவிடுகிறார். ஆனால், அவரது வினைத்தொகுதி இன்னமும் முழுவதும் தீரவில்லை. ஆகையால், அவரால் அந்நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. சமாதியில் இருக்க வேண்டிய காலம் முடிந்ததும், மாயை தனது வேலையைக் காட்டும்.
"பகவானின் அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். இப்படி வேறாரு பெருமானின் அறிவுரையால் வந்திருப்பது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?" என்று தூபம் போடும். இவரும், தான் ஏமாற்றப்படுவது அறியாமல், "ஆம். இதுவும் சரிதான். பகவானது அறிவுரைகளால் மீண்டும் இங்கு வந்து சேருவோம்." என்று எண்ணிக் கொண்டு புறமுகமாகிவிடுகிறார். இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அடுத்த முறை, வினைத்தொகுதி முழுவதும் தீர்ந்து, மீண்டும் சமாதியடைகிறார். இம்முறை மாயை தனது வேலையைக் காட்டினாலும் ஏமாறமாட்டார், கண்டுகொள்ளமாட்டார். பற்றிக்கொள்வதற்கு ஒருவரும் இல்லாததால் எழுந்த மாயை அடங்கிவிடும்.
முதல் முறை, நமது அன்பரை புறமுகப்படுத்திய இறையாற்றலை சைவத்தில் #சிவகாமி, #காமாட்சி என்றும், வைணவத்தில் வெண்ணெய் திருடிய #கண்ணன் என்றும் அழைப்பர்! அடுத்த முறை, அன்பரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அடங்கிய இறையாற்றலே #மன்மதன் எனப்படும். ஒதுக்கித் தள்ளப்பட்ட செயலே மன்மதனை எரித்ததாகும் (#காம #தகனம்)!!
(நம் நாட்டில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. ஒருவர் பெண்ணாக பார்த்ததை இன்னொருவர் ஆணாக பார்த்திருக்கிறார். மற்றொருவர் அதை ஆண்-பெண் (மன்மதன்-ரதி) என்று மேற்கொண்டு பிரித்திருக்கிறார். இவை எல்லாம் பிற்காலத்தில் இணைந்து, ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டன. "மன்மதன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?" என்று சிந்தித்தால் போதும். "ஏன் மன்மதன்-ரதி என்று பிரித்தார்கள்?" என்று சிந்தித்தால் ஓரளவிற்கு மேல் பதில் கிடைக்காது. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் மனிதனின் ஆணவம், சுயநலம் மற்றும் தேவை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது.)
🔸கூடலில் சங்கத்தாருடன் தமிழை ஆய்ந்தமலை
கடல் கொண்ட தென்மதுரையில் நடந்த #முதல் #தமிழ் #சங்கம் சிவபெருமானின் தலைமையில் நடந்த வரலாறு.
சிவபெருமான் என்பது தன்னையுணர்ந்த மெய்யறிவாளரைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். ஆணவம் சிறிதுமற்ற, பொய் சொல்ல தேவையற்ற, மனிதப்பிறவியின் நோக்கமறிந்த இத்தகையோர் உருவாக்கிய மொழி என்பதால் தான் நம் அன்னைக்கு நிறைமொழி என்று பெயர்!!
இப்பெருமான்கள் நமது மொழியை மட்டுமல்ல, நமது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம், மருந்து, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் என அனைத்தையும் உருவாக்கி/சீர்செய்து கொடுத்தவர்கள். ஆரியத்தில் சத்ய யுகம் என்று ஒரு காலப் பகுதிக்கு பெயரிட்டிருப்பார்கள். இக்காலத்தில் பிராமணர்கள் ஆண்டார்கள் என்பார்கள் (பிராமணர் - பிரம்மத்தை அறிந்தவர் / பிரம்மமாய் இருப்பவர் - மெய்யறிவாளர்கள்). இது, அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா-ரஷ்யா) நடந்ததோ இல்லையோ, நமது புண்ணிய பூமியில் நடந்துள்ளது.
அன்று சிவபெருமானை ஆட்சியில் வைத்த நாம், இன்று கொள்ளையர்களை ஆட்சியில் வைத்திருக்கிறோம்! 😔 காலம் மாறும். என்றும் வாய்மையே வெல்லும்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
No comments:
Post a Comment