Monday, July 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #55: ஊனமலை - சிறு விளக்கம்

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொண்டருடை ஊனமலை

தொண்டர்களை உடைய குறையுள்ள மலை!! ஊன என்பதற்கு "ஐம்பூதங்களால் ஆன", "குறையுள்ள" என சில பொருள்கள் உண்டு. இங்கு "குறையுள்ள" என்பதே பொருத்தமாகும். எப்படி?

இவ்வளவு அருமையும், பெருமையும், தொன்மையும், வல்லமையும் கொண்டு மெய்யறிவு வடிவாய்த் திகழும் அண்ணாமலையாருக்கு தொண்டர்கள் இருக்கலாமா? தொண்டர்கள் எனில் (இங்கு) மெய்யறிவு பெறாதவர்கள். அண்ணாமலையாரின் பெருமை என்ன? அவரை நினைத்தவுடன் விடுதலை அளிப்பது. அவரது தொண்டர்கள் அவரை நினைக்காமல் இருப்பார்களா? அப்படி தன்னை நினைத்தவர்களை, நினைத்த கணம் அவர்களது தளைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டுமல்லவா? அப்படி விடுவித்திருந்தால் இன்னும் தொண்டர்கள் இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். எனவே, அண்ணாமலையார் குறையுள்ளவர் ஆகிறார்! குறையுள்ள மலை = ஊனமலை!!

இந்த குறையைப் போக்கிக்கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும்? தனது தொண்டர்களின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்காகவே - தனது தொண்டர்களின் பற்றறுக்கவே - குகை நமச்சிவாயராக 🌺🙏🏽 வடிவெடுத்தாராம்!! பற்றறுக்க ஓம்நமச்சிவாய குரு ஆனமலை!!! 😊

("இளநீரை ஒத்த ஆற்றுநீரில் துள்ளி விளையாடும் வாளைமீன்களால் தெறிக்கும் நீர் துளிகள் பகலவனின் தேரோட்டியான அருணன் மீது போய் விழுந்தன" என்று ஒரு புனைவுரை உண்டு. இதிலுள்ள கற்பனைத்திறன் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். இது போன்றொரு புனைவுரை தான் எனது விளக்கம். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment