Saturday, August 15, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #60 - செறிவு, விள்ளு, யாது - விளக்கம்

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கள்ளப் புலவேடர் ... கருத்துமலை

ஐம்புலன்களை அடக்கி, பக்குவமடைந்து, உலகம் எனும் மாயையிலிருந்து தெளிந்தோர் நிலைபெறுவதற்காக (செறிவாக - திண்ணியராக - திடமாக - அசைவற்று நிற்க) மலர்ந்த பெருமான்.

எப்போது நிலைபெறுவோம்? நாம் யாரென்று உணர்ந்த பிறகு. எப்போது நாம் யாரென்று உணர்வோம்? உலக காட்சி நீங்கிய பிறகு. இந்த உலக காட்சி நீங்குதலையே "விள்ள" (மலர்ந்த) என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். உலக காட்சிகள் நீங்குவது என்பது கிட்டதட்ட ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கழட்டுவது போலிருக்கும். (இதை வைத்தே திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கத்து மூலவரின் கீழ் சமாதியாகி இருப்பவர்) "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கவேண்டும் என்பது என் கருத்து)

🔸யாது இருக்கக் ... மருத்துமலை

யாது என்ற சொல் ஐயம், மயக்கம் மற்றும் நினைவு போன்ற பொருட்களில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாரென்று ஐயமற தெரிந்துகொள்ளாத வரை, உலக காட்சிகளைக் கண்டு மயங்கும் வரை (உண்மையென்று நம்பும் வரை), பழவினைகள் மீதமுள்ள வரை உடல் & உலக காட்சிகள் தோன்றிக்கொண்டுதானிருக்கும்.

காட்சிகள் தோன்றுவது எதற்காக? ஒரு முறை பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽 இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "காண்பான் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார்!! 👌🏽👏🏽

இவ்வகையில், காட்சிகளின் தோற்றம் என்பது நாம் நம்மை உணர்வதற்காக, அதில் நிலைபெறுவதற்காக, பிறப்பறுப்பதற்காக. பிறப்பு எனும் நோயை, காட்சிகளின் மூலம் குணப்படுத்துவதால் இறைவனை தெய்வ மருத்துவன் என்றழைக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment