Friday, August 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment