Wednesday, May 31, 2023

திருமலை நடைபயணம் & பழனி காவடி - சிறு விளக்கம்


அடியார்கள் திருமலைக்கு மேற்கொள்ளும் நடைப்பயணத்தையும் & பழனி முருகப் பெருமானுக்காக எடுக்கும் காவடியையும் ஒரு பகுத்தறிவுவியாதி கிண்டல் செய்து பேசினார். அவருக்கு நான் அனுப்பிய விளக்கங்களை தொகுத்து இந்த இடுகையாக மாற்றியிருக்கிறேன்.

oOo

முதலில், உங்களது தாயாரின் இறப்பை பற்றி சற்று பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட நாள் வரை அவர் உயிருடனிருந்தார். அடுத்த நாள் அவர் இறந்துவிட்டார். இறந்தநாளுக்கு முதல் நாள்வரை, எதையெல்லாம் வைத்து நீங்கள் அம்மா என்று அழைத்தீர்களோ, அவையெல்லாம் அன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், இப்போது அதை அம்மா என்று நீங்கள் அழைக்கவில்லை. அதிலிருந்து நீங்கிய ஏதோ ஒன்றுதான் அம்மாவாகிறது. எனில், அம்மா என்பது எது / யார்?

இப்போது, இதே ஏரணத்தை (Logic) நமக்கும் பொருத்திப் பார்த்தால், நாம் இவ்வுடல் அல்ல என்பது உறுதியாகும். எனில், நாம் யார்?

இந்த கேள்விக்கு விடை காண நம் மாமுனிவர்கள், மெய்யறிவாளர்கள், சான்றோர்கள் வகுத்துக் கொடுத்த பாதைகளில் இரண்டுதாம்: திருமலைக்கு நடைபயணம் மற்றும் பழனிக்கு காவடி தூக்குதல்.

🔸 திருமலைக்கு நடைபயணம்


இவ்வகையான பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டுமென்று பகவான் திரு இரமண மாமுனிவர் அருளியிருக்கிறார்: கருவுற்று நிறைமாதமாக உள்ள ஒரு பேரரசி நடைபயில்வதை போன்று பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் என்னவாகும்?

ஒரு சமயத்தில் நமதுடல் மரத்துப்போகும். ஆனால், நாம் (நமது தன்மையுணர்வு) மரத்துப்போகமாட்டோம். இப்போது நம்மை நாம் தெளிவாக உணரமுடியும்.

இவ்வாறு உணருவதால் என்ன பயன்?

பிறவியறுப்போம். இதையே வீடுபேறு, நிலைபேறு, மோட்சம் (ஆரியம்) என்று பலவாறு அழைக்கிறோம்.

இங்கு, அன்னைத்தமிழின் மேன்மையை உணரமுடியும்: பிறவி என்ற சொல்லைப் பற்றி சற்று சிந்திக்கவும். நாம் நாமாக இல்லாமல் "பிறவாக" (மனிதனாக, விலங்காக, பறவையாக...) ஆவதற்கு பெயர்தான் "பிறவி"!!

🔸 பழனிக்கு காவடி தூக்குதல்


காவடி எப்படியிருக்கும், அதை எப்படி தூக்குவர் என்பது தாங்கள் அறிந்ததே. சிலர் மட்டும், அவ்வப்போது, காவடிகளை தங்களது தோள்பட்டைகளில் வைத்து சுழற்றுவர்.

> காவடி - நமதுடல்

> காவடியின் இருபுறமும் சொருகியுள்ள மயிற்பீலிகள் - முன்வினை & வருவினைப் பயன்கள்

> காவடியை தூக்குதல் - உடலை தாங்குவது நாமே

> காவடியை சுழற்றுதல் - உடலை இயக்குவது நாமே

> காவடியை எதுவரை தூக்குகின்றனர்?

முருகப்பெருமானை காணும்வரை. அல்லது, திருக்கோயிலை அடையும்வரை.

> முருகப்பெருமான் என்பது எது?

என்றும் மாறாத, அழியாத, தன்னொளி கொண்ட நாமே உள்ளபொருள் என்ற அறிவு. அதாவது, மெய்யறிவு.

> உடலை எதுவரை தாங்குகிறோம் / இயக்குகிறோம்?

நாம் இவ்வுடல் என்ற தவறான அறிவு இருக்கும்வரை. அதாவது, மெய்யறிவு கிடைக்கும்வரை. இதுவே, "முருகப்பெருமானை காணும்வரை காவடி தூக்குதல்" என்ற சடங்கின் பொருளாகும்.

கடந்த 700+ ஆண்டுகளாக நடந்த அரசியல் படையெடுப்புகள், 2,000+ ஆண்டுகளாக தமிழகத்தின் மீது நடந்த இன & மத படையெடுப்புகள், கடந்த 60 ஆண்டுகளாக நடக்கும் தரமற்றவர்களின் ஆட்சி ... என பலவற்றால் தரமிழந்து போனோம். குறிக்கோள் தவறிப்போனோம்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து..." என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும். இவ்வாறே, செய்யும் சடங்குகளின் உட்பொருள் உணர்ந்து செய்தால் மேன்மை அடையலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Monday, May 29, 2023

செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்


செங்கோலில் இடம்பெற்றிருக்கும் 3 சின்னங்கள்: விடை, அன்னை மலர்மகள் & மேலெழும் கொடி.

🔸 விடை

- அயராத உழைப்பின் அடையாளம்
- தன் தலைவன் இட்ட பணியை, பயன் கருதாமல், செய்து முடிக்கும்
- தனது கழிவுகளால் நிலத்தை வளப்படுத்தும்

இங்ஙனமே, ஒரு மன்னவன், தனது கடமைகளை (இறைவன் இட்ட பணிகளை) பயன் கருதாமல், செய்து முடிக்கவேண்டும்; அயராது உழைக்கவேண்டும். தனது சொல் & செயலால் (கழிவுகளால்) தனது நாட்டை மேம்படுத்தவேண்டும்.

🔸 அன்னை மலர்மகள்

மெய்யறிவைக் குறிக்கிறார்.

நம்மை நாம் அழியும் உடலாக காணும்வரை ஆசைகளுக்கு முடிவிருக்காது. ஆசை -> சுயநலம் -> அநீதி -> குற்றங்கள்... என பெருகிக்கொண்டேப்போகும்.

எப்போது "நாமே அழியாப் பரம்பொருள்" என்ற நமதுண்மையை உணர்கிறோமோ, அப்போது யாவும் கட்டுக்குள் வரும்; அல்லது, அற்றுப்போகும்.

🔸 மேலெழும் கொடி

அளப்பரிய ஆற்றல்.

ஒரு மன்னவன், எக்கணமும் மக்களின் துயர்துடைக்க, நாட்டுநலனை காக்க அணியமாக (தயாராக) இருக்கவேண்டும். இதற்கு வற்றாத ஆற்றல் வேண்டும்.

மேற்சொன்ன தன்மைகளை உடைய மன்னவன் ஆளும் நாட்டில், அப்படிப்பட்ட மன்னவனை பின்பற்றி வாழும் மக்கள் நிறைந்த நாட்டில் எதற்கு குறைவிருக்கும்?

(தெருமாக்களுக்கு, திராவிடியாள்களுக்கு, பகுத்தறிவுவியாதிகளுக்கு, மெக்காலே -மண்டையர்களுக்கு குறைவிருக்கும்! 😁)

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Monday, May 22, 2023

வாரம், திதி, நட்சத்திரம், யோகம் & கரணம் சொல்வதின் உட்பொருள்


🔸 வாரம் சொன்னால் வாழ்நாள் வளரும்
🔸 திதி சொன்னால் செல்வம் பெருகும்
🔸 நட்சத்திரம் சொன்னால் தீவினை போகும்
🔸 யோகம் சொன்னால் நோய் நீங்கும்
🔸 கரணம் சொன்னால் நினைத்தது நடக்கும்

சோதிடர்கள் மட்டுமல்லாது, பஞ்சாங்கம் புரட்டும் பழக்கமுள்ளவர்களும் அறிந்திருக்கும் இந்த வரிகளின் உட்பொருளை சற்று பார்ப்போம்.

🔸 வாரம் - வாழ்நாள்

வாரம் என்பது 7 நாட்களை குறிக்கும். 7 என்பது எலும்பு, தசை முதலான 7 பொருட்களை குறிக்கும். இந்த 7 பொருட்கள் நமதுடலை குறிக்கும்!

உடலை பேணினால் நோய் நொடி
இல்லாமல், நீண்ட நாட்கள் வாழலாம்!!

🔸 திதி - செல்வம்

திதி என்பது பகலவனுக்கும், நிலவுக்கும் இடையேயான இடைவெளியாகும்.

> பகலவன் - உள்ளபொருள் / பரம்பொருள்
> நிலவு - மனம்
> செல்வம் - மெய்யறிவு (ஆரியத்தில், ஞானம்)

மனதை எவ்வளவுதூரம் உள்ளபொருளுக்கு அருகில் கொண்டு செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நமது மெய்யறிவு பெருகும்.

(விளக்குவதற்காக இப்படி எழுதியிருக்கிறேன். உண்மையில், உள்ளபொருளை விட்டு எக்கணமும் விலகமுடியாது. நீரிலிருக்கும் மின் நீரைவிட்டு விலகமுடியுமா? அல்லது, நீருக்கு அருகில் செல்லமுடியுமா?)

🔸 நட்சத்திரம் - தீவினை

விண்மீன் (ஆரியத்தில், நட்சத்திரம்) தன்னொளி கொண்டதாகும். இதற்கு சமமாக நம்மிடமிருப்பது நமது தன்மையுணர்வாகும். நாம் இருக்கிறோம் என்பதை உணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை. இந்த நான் என்ற தன்மையுணர்வைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நமது தீவினைகள் குறைந்து கொண்டே வரும். இறுதியில், நிலைபேறு / வீடுபேறு கிட்டும்.

நமது தன்மையுணர்வின் இன்னொரு பெயர் - உள்ளபொருள்!

🔸 யோகம் - நோய்

யோகம் எனில் இணைப்பு / இணைவது ஆகும்.

> தன்மையுணர்வு - உள்ளபொருள்
> மனம் - சீவன்
> "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் - நோய்

மனதை தன்மையுணர்வில் தொடர்ந்து பொருத்திக் கொண்டிருந்தால், உடலல்லாத நம்மை உடலாக கருதும் நோயின் தாக்கம் குறைந்து கொண்டேவந்து, இறுதியில் நீங்கிவிடும்.

🔸 கரணம் - நினைத்தது நடக்கும்

கரணம் என்பது ஐம்பொறிகளையும் குறிக்கும்; அந்தக்கரணம் என்று ஆரியத்தில் அழைக்கப்படும் மனதையும் குறிக்கும். மனமென்றால் என்னவென்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், மனம் அழிந்துபோய் நாம் நாமாக இருப்போம். இதன் பிறகே, "இவ்வளவு காலமும், நம் முன்னே நடந்த யாவும், முற்பிறவிகளில் நாம் நினைத்தவையே (விரும்பியவை / வெறுத்தவை)" என்பதை உணருவோம்!

சோதிடம் என்பதே ஒளியை பற்றிய ஆராய்ச்சிதான்! நம் கண் முன்னே விரியும் உலகம், ஏன் இவ்வாறு விரிகிறது என்று நம் முன்னோர் சிந்தித்ததின் விளைவே சோதிடமாகும்!!

oOo

இப்போது ஒரு கேள்வியெழலாம்: இந்த விளக்கமெல்லாம் சரி. மெய்யியலை கொண்டுபோய் சோதிடத்திற்குள் ஏன் நுழைத்தார்கள்?

சோதிடத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிற்கு பின்னும் நீண்ட வரலாறு இருக்கிறது. கணக்கிலடங்காத பல பெரியவர்களின் பன்நெடுங்கால உழைப்பே இன்றைய சோதிடத்தின் அடித்தளமாகும். MB, GB, TB, ZB என்று எவ்வளவு பெரிய தரவாக இருந்தாலும், இன்று பாதுகாப்பாக, பல வகைகளில், பல இடங்களில் சேமித்து வைக்கமுடியும். அன்று இத்தகைய சூழ்நிலையில்லை. எனவே, நம் முன்னோர்கள் மனிதர்களை சேமிப்பகமாக பயன்படுத்தியுள்ளனர்!

"அடேய், மனிதா, எதிர்கால தலைமுறையினருக்காக, இதை நினைவில் வைத்திரு" என்றால் யார் நினைவில் வைத்திருப்பார்கள்? 😏 எனவே, இதை சொன்னால் வாழ்நாள் வளரும், அதை சொன்னால் செல்வம் பெருகும் என்று கதைவிட்டுள்ளனர்! 😃

கனிந்த மரம் கல்லடி படும் என்ற பழமொழிக்கேற்ப, அழியாச் செல்வமும், அழியும் செல்வமும் நிறைந்திருந்த நம் பாரதம் கண்ட படையெடுப்புகள் எண்ணிலடங்காது. இவற்றுடன், அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் வேறு! (முதலாம் நரசிம்ம பல்லவரின் காலத்தில், 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழை பொய்த்துள்ளது!!) இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பெரியவர்கள் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்துகளை எவ்வாறு பாதுகாப்பது?" என்று நம் முன்னோர்கள் சிந்தத்தின் விளைவே "மக்களை சேமிப்பகமாக பயன்படுத்தலாம்" என்ற நுட்பம்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼