சண்ட விடத்தைச் சகம்இறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியும் அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #51
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
🔸சண்ட விடத்தைச் சகம் இறந்து போகாமல்
பாற்கடலைக் கடையும் போது வெளிப்பட்டக் கொடிய நஞ்சை, உலகம் அழியாதிருக்கும் பொருட்டு சிவபெருமான் அருந்திய கதை.
ஏற்கனவே இக்கதையை விளக்கமாக பார்த்திருக்கிறோம் (நிர்விகற்ப சமாதி - சகஜ சமாதி, மூத்தவள் - இளையவள்). இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல் (தவமியற்றுதல்) / ஆன்ம போராட்டம். இதன் இறுதியில் தான் மெய்யறிவு கிடைக்கும். இந்த மெய்யறிவு நப்பின்னை, இளையவள், சின்னாயி, லட்சுமி என பலவாறு அழைக்கப்படும். இதற்கு முன்னர், அவரவர் வினைப்பயனின் படி, பலவித அறிவு வெளிப்படும் (எ.கா.: மற்றவர் மனதை படிப்பது, வெகு தூரத்தில் நடப்பதைக் காண்பது, விரும்பிய இடங்களுக்கு உடனடியாக சென்று வருவது). இவையனைத்தும் மூத்தவள், மூத்தாயி, மூதேவி, ஜேஷ்டா தேவி என பலவாறு அழைக்கப்படும். இவையே கொடிய ஆலகால நஞ்சு. நூல்கள், சிலைகள், ஓவியங்கள், கதைகள் என பல வழிகளில் மெய்யறிவைப் பற்றி பதிவு செய்த மெய்யறிவாளர்கள், அவ்வாறே இக்கொடிய நஞ்சைப் பற்றியும் பதிவு செய்திருந்தால் இந்நேரம் உலகம் என்னவாகியிருக்கும்?
அக்காலத்தில் மை போடுபவர்கள், கண்கட்டு வித்தைக் காட்டுபவர்கள் என்று மோசமான பேர்வழிகள் ஆங்காங்கே இருந்தனர். இவர்களெல்லாம் மேற்சொன்ன நஞ்சிலிருந்து சில துளிகளைப் பருகியவர்கள். சில துளிகளே இப்படிப்பட்டவர்களை உருவாக்கினால்... எனவே தான், இவற்றைப் பற்றி வெளியே சொல்லாமல், தங்களுக்குள்ளேயே இருத்திக்கொண்டார்கள் மெய்யறிவாளர்கள். இதுவே உலகத்தைக் காக்க சிவபெருமான் (மெய்யறிவாளர்) நஞ்சை அருந்தியதாக சொல்லப்பட்டது. (இது சரி. இப்போது அந்த மை போடும் கூட்டமும், கண்கட்டு வித்தைக் காட்டும் கூட்டமெல்லாம் எங்கே போயிற்று? கல்வி, ஊடகம் மற்றும் திரைத் துறைகளை ஊடுருவியுள்ளது!! 😉)
🔸மெய் முழுதும் பால்வெள்ளை நீற்றை அணியும்
நம் உடல் முதல் நாம் காணும் உலகம் வரை அனைத்தும் இருப்பற்றவை. திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. எரிந்து உருக்கலையாமல் இருக்கும் சாம்பல் போன்றவை. மொத்த உலகமும் இப்படி எரிந்து, உருக்கலையாமல் இருந்தால்... சுடுகாடு!! எனவேதான், "சிவபெருமான் சுடுகாட்டில் வசிப்பவர்" என்றழைக்கப்படுகிறார். அவர், "இவ்வுலகம் பொய்" என்ற பேருண்மையை (விபூதி/திருநீறு/சாம்பல்) என்றும் தன் நினைவில் நிறுத்தியிருக்கிறார் (பூசியிருக்கிறார்).
(இந்த உவமை புரியாமல், சுடுகாட்டில் நடுநிசியில் வடக்கிருந்து மனநலத்தையும் உடல் நலத்தையும் இழந்தோர் பலர்!! இது போன்று, குப்பைத்தாள்களை எரித்து கிடைக்கும் சாம்பலுடன் வாசனை வேதிப் பொருட்களை சேர்த்து, "ஸ்பெஷல் அபிஷேக விபூதி" என்று பட்டை நாமம் போட்டு விற்கப்படும் குப்பையை வாங்கி, உடல் முழுவதும் பூசிக்கொண்டு ஏமாறுவோரும் உண்டு! ஏமாற்றுவோரும் உண்டு!!)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
No comments:
Post a Comment