Monday, May 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #28: வாலமதி, வாலறிவு, வாலறிவன் - சிறு விளக்கம்

வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #28

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸சீல முனிவோர்கள் செறியும் மலை - ஒழுக்கம் நிறைந்த துறவியர்களால் நிறைந்த மலை. ஒழுக்கம் எனில் ஒழுங்கு, நல்லொழுக்கம் போன்ற பொதுவான பொருள்கள் அல்ல. "விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்" என்று பகவான் 🌺🙏🏽 பாடியது போன்ற ஒழுகலாறு! நான் என்ற தன்மையுணர்வை விட்டுவிட்டுக் கருதாமல், ஆற்றின் ஓட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியை போல், விடாது கருதுபவர்கள் என்று பொருள்!!

🔸காலம் கடந்த மலை - நேரம், இடம் போன்ற யோசனைகள் எல்லாம் நமக்கே. இறைவனுக்கு அல்ல. அவர் எல்லாவற்றையும் தாண்டியவர். என்றும் இருப்பவர்.

🔸காலனைக் காலாலே அடர்ந்த மலை - திருக்கடவூர் மார்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽 வரலாறு. மரண பயம் போக்குதல். எனில், மெய்யறிவு வழங்குதல்.

🔸வால மதியை மவுலியின் மேல் வைத்த மலை - பிறைநிலவை தனது முடிமேல் வைத்திருப்பவர். சிவபெருமானின் (மெய்யறிவாளர்களின்) அடையாளங்களில் ஒன்று. #வாலமதி, #வாலறிவு, #வாலறிவன் ("கற்றதனால் ஆய பயனெனன்..." - திருக்குறள், திருவள்ளுவ நாயனார் 🌺🙏🏽) எல்லாம் அவர்களது உள்ள நிலையைக் குறிக்கும் சொற்களாகும். அது என்ன நிலை?

வா என்பது வெளியே வருவதைக் குறிக்கும். வால் என்பது ஒன்றிலிருந்து முளைத்த இன்னொன்றைக் குறிக்கும். முளைத்தது இல்லாமல் ஒன்று தனியாக இருக்க முடியும். ஆனால், அந்த ஒன்று இல்லாமல் முளைத்தது தனியாக இருக்க முடியாது. நாம் காணும் இவ்வுலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைத்தது. மெய்ப்பொருள் இல்லாமல் உலகம் இல்லை. ஆனால், உலகம் இல்லாமல் மெய்ப்பொருள் இருக்கும். இந்த உலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைப்பதை அறிந்தவரே வாலமதியன் - வாலறிவன் - மெய்யறிவாளன் - சிவபெருமான்!!

இந்த வாலமதி/வாலறிவு பலவிதமாக நமது சமயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்கு பார்ப்போம்:

🔹"நாம் காணும் இவ்வுலகம் நமக்குள் இருந்து தோன்றுவது" என்ற செய்தியை ஆன்மிக நூல்களில் படித்திருப்போம். சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். இதன் சொந்தக்காரர் #ஜம்பு #மாமுனிவர் 🌺🙏🏽. #திருச்சி #திருவானைக்கா திருத்தலத்தில் மூலவருக்கு கீழ் சமாதியாகி உள்ளார். இவர் உணர்ந்து வெளியிட்டதை தலவரலாற்று சிற்பமாக, ஓவியமாக அத்திருத்தலத்தில் பல இடங்களில் வைத்திருப்பார்கள். அதில், மாமுனிவர் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருப்பார். அவரது தலையிலிருந்து ஒரு நாவல் மரம் வெளிப்பட்டிருக்கும். மாமுனிவர் - மெய்ப்பொருள். நாவல் மரம் - காணப்படும் உலகம். (சிற்பத்தில் மீதமிருக்கும் விடயங்கள், மெய்யறிவு கிடைத்த பின்னரும் நடக்கும் போராட்டத்தைக் குறிக்கும்.)

🔹அடுத்து, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் 🌺🙏🏽. பெருமாள் படுத்திருக்கும் பாம்பணை, அவரை சுற்றியிருக்கும் அன்னையர், முனிவர்கள், கருடன், அனுமன் என அனைவரையும் ஒதுக்கிவிட்டு, பெருமாளையும் அவர் தொப்புளிலிருந்து முளைத்துள்ள நான்முகனை மட்டும் எடுத்துக் கொள்வோம். இப்போது, பெருமாள் மெய்ப்பொருளாவார். அவரிடமிருந்து முளைத்துள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் நான்முகன் உலகமாவார். ஜம்பு மாமுனிவர் நாவல் மரமாக சித்தரித்ததை, வைணவர்கள் தொப்புள்கொடி நான்முகனாக சித்தரித்துள்ளனர்.

🔹உமையன்னை நடனமாடுவது போன்றும், சிவபெருமான் காண்பது / வடக்கிருப்பது போன்றும் உள்ள ஓவியங்களும் இதே வாலறிவைத் தான் குறிக்கின்றன.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment