Sunday, May 24, 2020

மாதொருபாகன் - திரு உண்ணாமுலையம்மன் இறைவனின் இடப்பாகம் பெற்ற பழங்கதையின் உண்மைப் பொருள்!!



🔸பழங்கதை

ஒரு சமயம், திருக்கயிலையில் இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் போது, இறைவி விளையாட்டாக இறைவனின் கண்களை கணப்பொழுது மூடினார். அந்த கணப்பொழுதில் உலகை இருள் சூழ்ந்தது; உயிர்கள் எல்லாம் வாடிப் போயின. இதனால், இறைவியும் பூவுலகில் பிறக்க வேண்டியதாயிற்று. இதையெண்ணி இறைவி வருத்தப்பட்டாலும், செய்த குற்றத்திற்கான தண்டனையை துய்த்துத்தான் ஆக வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். முதலில், காஞ்சி மாநகரையடைந்து, மண்ணால் சிவஅடையாளத்தை உருவாக்கி, வழிபட்டு, வடக்கிருந்து வந்தார். சில காலம் சென்ற பின், அவரது முயற்சிகளில் மகிழ்ச்சியடைந்த இறைவன் அவர் முன் தோன்றி, அவரை வாழ்த்தி, திருவருணை சென்று வடக்கிருக்க அறிவுருத்தினார். இறைவியும் திருவருணை வந்து, கெளதம மாமுனிவரின் 🌺🙏🏽 குடிலில் தங்கினார். அவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிந்தார். அவரது உதவியுடன் மலைவலம் வந்தார்; அவரது அறிவுரையின்படி பவளக்குன்றில் வடக்கிருந்தார். ஒரு கார்த்திகை திங்கள் விளக்கீடு திருநாளன்று, இறைவன் தோன்றி, தனது இடப்பாகத்தை தந்தருளி, மாதொருபாகனாக காட்சியளித்தார்!! 🌺🙏🏽

oOOo

ஒரே கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்திருப்பார்கள். தத்துவம், வரலாறு, மருத்துவம், உடலியக்கம், வானவியல் என பல செய்திகள் இருக்கும்.

🔸இந்தக் கதையை தத்துவரீதியாக அணுகும் போது...

🔹திருக்கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் வீற்றிருத்தல் என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்களின் உள்ள நிலையை குறிக்கும்.

🔹இறைவனின் கண்களை இறைவி விளையாட்டாக மூடியதால்... - மெய்யறிவு பெற்ற பின்னும் வெகு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் உலக வாழ்க்கைக்குள் (பூவுலகில் பிறப்பது) சிக்கிக் கொள்ள வேண்டும். இப்படி சிக்கிக் கொண்டால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரவேண்டியிருக்கும்.

🔹முதலில், உடல் முதலானவற்றைப் பேணவேண்டும் (காஞ்சிபுரம் - மண் தலம் - உடல் முதலானவை. "மண்ணினாய விகாரமும் மண்ணே" - கண்ணபிரான் 🌺🙏🏽).

🔹பிறகு, பேணியவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும் (திருவருணை - நெருப்பு - எரித்தல். "கற்றவை யாவற்றையும் ஒரு நாள் மறக்க வேண்டியிருக்கும்" -  பகவான்).

🔹அடுத்து, மெய்யாசிரியரைத் தேடியடைந்து, கடைத்தேறும் வழியை அறிந்து கொள்ள வேண்டும் (கௌதம மாமுனிவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிதல்)

🔹பின்னர், மெய்யாசிரியர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன், உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் (பவளக்குன்றில் இறைவி வடக்கிருந்தது. உலகியலில் ஈடுபடும்போது, உடல் என்பது "சோறிடும் தோல் பை" என்றாகிறது. மெய்யியலில் ஈடுபடும்போது அதே உடல் பவளக்குன்றாகிறது!)

🔹முடிவில், மீண்டும் மெய்யறிவு கிட்டும் (இறைவனின் இடப்பாகம், இறைவன் திருவடி, கயிலாய பதவி... என எல்லாம் இதுவே!!)

🔸கதையை வரலாற்று ரீதியாக அணுகும் போது...

(இறைவனின் கண்களை இறைவி மூடியதிலிருந்து பூவுலகு வருவது வரை விலக்கிவிட்டு, இறைவி காஞ்சிக்கு வருவதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.)

உலகம் திரையில் தோன்றும் காட்சி போன்றது. திரை-அசைவற்றது-சிவம். காட்சி-அசைவது-சக்தி-இறைவனின் ஆற்றல். ஆதாரமான திரைக்கு வலப்பகுதியையும், அதில் தோன்றும் காட்சிக்கு இடப்பகுதியையும் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து இம்முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முதலில் காஞ்சிபுரத்தில் நடந்திருக்கவேண்டும். பின்னர், திருவருணையில் முடிவு பெற்றிருக்கவேண்டும்.

கதையில், கெளதம மாமுனிவர் இடம் பெறுவதால், இந்த ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு உள்ளது என்று கருதலாம்.

(இங்கு, இறைவி என்பது ஒரு சீவனையும் குறிக்கும்; பல சீவர்களையும் குறிக்கும். அதாவது, ஆராய்ந்தவர் தனி நபராகவும் இருக்கலாம். ஒரு குழுவாகவும் இருக்கலாம்.)

oOOo

எல்லாம் பகவான் திருவடிக்கே!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment