Friday, May 15, 2020

காசி அன்னை அன்னபூரணி 🌺🙏🏽 - சிறு விளக்கம்



முன் குறிப்புகள்:

1. சிவபெருமான் 🌺🙏🏽 தனது கபாலத்தைக் கொண்டு அன்னை அன்னபூரணியிடம் பிச்சை பெறுவது போன்ற படத்தைத் தான் தேடினேன். ஏதேச்சையாக, இணைப்பு படம் கிடைத்தது. சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்றும், கபாலத்திற்கு பதில் அவர் முன் இலையில் உணவு பரிமாறப்பட்டு இருப்பது போன்றும், அவருக்கு அன்னை அன்னபூரணி கொற்றவை கோலத்துடன் பரிமாறுவது போன்றும் காட்சிபடுத்தி இருக்கிறார்கள். ஆனால், பொருள் ஒன்று தான்.

2. அண்ணாமலை வெண்பா திரட்டின் 17வது பாடலுக்கு நான் எழுதிய விளக்கத்தை சற்று மாற்றியும், இன்னொரு விளக்கத்தை சேர்த்தும் இந்த இடுகையை உருவாக்கியிருக்கிறேன்.

🌸🌼🌻🏵️💮

இந்த இணைப்பு படத்தில் இல்லாவிட்டாலும், அன்னை அன்னபூரணியுடன் இணைந்து பெருமான் உள்ள படங்களில் கையில் திருவோடு வைத்திருப்பார். அத்திருவோடு பிரம்மகபாலம் எனப்படும். அது நான்முகனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு தலை (இது தனி கதை). அதில் எவ்வளவு போட்டாலும் நிறையாது! அதாவது, எவ்வளவு எண்ணங்களைப் போட்டாலும், எத்தனை பிறவிகளாகப் போட்டாலும் நிறையாது. எனில், வாழ்வு முடிவற்றது என்று பொருள்!!

அதை முடிவுக்கு கொண்டு வர - கபாலத்தை நிரப்ப - ஒரே வழிதான் உண்டு: புறமுகமாகச் சென்று கொண்டேயிருக்கும் கவன ஆற்றலை நம் மீது - தான் என்ற இருப்புணர்வின் மீது - திருப்புவது ஒன்றே வழி! இதைத்தான் #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 #தன்னாட்டம் (#ஆத்மவிசாரம்) என்றழைத்தார்!

இப்பேருண்மையை காசி மாநகரிலிருந்த பெரியோர்கள் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய விதம் தான் அன்னை அன்னபூரணி!! அன்னையின் கையிலுள்ள கரண்டியிலிருக்கும் உணவு சிவபரம்பொருளுக்கானது - "நீயே அது!" என்பது!!! "உன் மீதே கவனத்தை திருப்பு" என்பது!!! தன்னாட்டம் எனப்படுவது!!!

பல்லாயிரம் பிறவிகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்னும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால், அன்னையின் கரண்டியிலிருக்கும் உணவை (தன்னாட்ட எண்ணத்தை) "பூர்த்தி செய்யும் உணவு" என்றனர்! உணவு+பூர்த்தி - அன்னம்+பூரணம் - அன்னபூரணி!! 😍

🌸🌼🌻🏵️💮

இன்னொரு விளக்கம்.

சிவமென்பது உயிர். சக்தி என்பது உயிரற்றது. எண்ணம் முதற்கொண்டு காணும் அண்டம் வரை அனைத்தும் உயிரற்றவையே. எனில், உயிரற்றது எவ்வாறு உயிருக்கு உணவிடும்?

நாம் இன்னார் என்பது நமது கருத்து. இன்னாருக்குள் பாலினம், வயது, மெக்காலே படிப்பு, வேலை, சொத்து, பதவி, புகழ் என அனைத்து காற்றடைத்த பந்துகளும் அடங்கும். கொடுப்பினை இருந்து, தேடுதல் வேட்கைத் தோன்றி, பகவான் திரு ரமணர் போன்ற மாமுனிவர்களின் தொடர்பு ஏற்பட்டு (நேரடியாகவோ அல்லது அவர்களது அறிவுரைகளுடனோ), தவமாய் தவமிருந்து, இறுதியில் அவர்களது சொல், செயல், பார்வை என ஏதேனும் ஒன்று நமது அறியாமையை அழித்துவிடும். அந்த ஒன்று - உயிரற்ற ஒன்று - நமது மெய்யறிவை வெளிப்படுத்திய ஒன்று - அன்னை அன்னபூரணி எனப்படும்!!

இப்போது கேள்வி எழும்: மெய்யறிவை வெளிப்படுத்தியது அன்னை எனில், பெற்றுக் கொண்ட நாம் எப்படி சிவமாவோம்? பெறும் போது நாம் பொய்யறிவினர் தானே. பெற்று, மெய்யறிவு வெளிப்பட்ட பின்னர் தானே சிவமானோம்.

இதற்கு பதில் பகவான் அளித்திருக்கிறார்: நாம் எப்போதுமே ஆன்மாவாகத் (சிவமாக) தான் இருக்கிறோம்!! 

(இங்கே, பாம்பு போல தோன்றிய கயிறு, ஆற்றைக் கடந்த 10 பேர், தனது தோளிலேயே கிடந்த ஆட்டுக்குட்டியைத் தேடியவன் போன்ற கதைகளை நினைவு கூர்ந்தால் பகவான் சொல்வது விளங்கும்.)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

-- திருமந்திரம் 8:21

கருணாகர முனி ரமணாரியன் அடிபோற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment