Monday, May 4, 2020

அண்ணாமலை வெண்பா - பாடல் 6 - சொன்னம், அங்கி சொற்களுக்கு விளக்கம்



நேற்று முகநூலில் நான் பதிவிட்டிருந்த அண்ணாமலை வெண்பா பாடல் #6லில் வரும் "சொன்னம்" என்ற சொல் தங்கத்தையும், "அங்கி" என்ற சொல் தீயையும் குறிக்கும் என்று ஒரு ரமணடியார் கூறினார். அவருக்கு நான் கொடுத்த விளக்கத்தை இங்கு பதிவிடுகிறேன்.

🔷 முதலில், பாடல்:

அன்னமுடன் சொன்னம் அளிக்குமலை ஆதரிப்போர்
உன்னுவரம் எல்லாம் உதவுமலை - துன்னுபுகழ்
கொண்டமலை அங்கிக் கொழுந்துஆகி அண்டம்உற
மண்டுமலை அண்ணா மலை

🔸 சொன்னம் - பொருள்
🔸 உன்னுவரம் - நினைத்ததெல்லாம்
🔸 துன்னுபுகழ் - நெருங்க வாய்ப்பு கொடுக்கும்
🔸 அங்கி... - நம் உடலெனும் சட்டை முதல் அண்டம் முழுவதுமாகிய

🔷 திரு ரமணடியாருக்கு எனது விளக்கம்:

வணக்கம், ஐயா! 🙏🏽

🔸 சொன்னம் என்பதற்கு சொர்ணம், சுவர்ணம் (பொன்) என்ற பொருளும் இருப்பதை அறிவேன்.

இக்காலத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கையடக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். அக்காலத்தில் இன்றைய வசதிகள் இல்லை. பெரும் பொருளை கையிலேயே வைத்திருக்க சுலபமான வழி தங்க அணிகலன்களை செய்து உடலில் மாட்டிக் கொள்வது தான். நடமாடும் வங்கிகணக்காக வலம் வந்தார்கள். எவ்வளவு அணிகலன்கள் உங்கள் உடலை அலங்கரிக்கின்றனவோ அவ்வளவு தூரம் நீங்கள் பெரிய ஆள்!! பொன் சேர்த்து விட்டால் மீதமுள்ள பாரங்கள் (வீடு, வேலையாட்கள், அழகான மனைவி, சமூக அந்தஸ்து, "உயர்ந்த" மனிதர்களின் தொடர்புகள், இதனால் கிடைக்கும் பாதுகாப்பு,...) தானாக அமைந்து/சேர்ந்து விடும்.

இன்று நிலைமையே வேறு. பொன்னை விட பணம் தான் வசதி. ஆகையால், பணத்தைக் குறிக்கும் பொருளை எடுத்துக் கொண்டேன்.

🔸 அங்கி என்பதற்கு மேலாடை, நெருப்பு, கார்த்திகை திருநாள் என்று பொருள்கள் இருப்பதைப் பார்த்தேன்.

அங்கி என்ற சொல்லுக்கு மேலாடை என்ற பொருள் பிரபலமாக இருப்பதாலும், மண்டு என்று இந்த சொற்றொடர் முடிவதாலும் (எ.கா.: புதர் மண்டிய இடம்), கொழுந்து என்பதற்கு இளம் / முதல் என்று பொருள் இருப்பதாலும், ஆன்மாவை போர்த்தியிருக்கும் முதல் ஆடை உடல் என்பதாலும் அங்கி என்று சொல்லுக்கு உடல் என்றெ பொருள் கொண்டேன்.

"உடல் முதல் அண்டம் வரையிலான பல்வேறு சட்டைகளாக மண்டியிருக்கும் மலை"

மாமுனிவர்கள் தங்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் போது பெரும்பாலும் பின்வரும் 3 நிலைப்பாடுகளிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள்:

- எல்லாம் ஒன்றே,
- நாமே உள்ளபொருள் (மற்றவை பொய்பொருள்),
- எல்லாம் அவன் செயல் (நாம் ஒன்றுமேயில்லை)

"அங்கிக் கொழுந்து..." 3வது நிலைப்பாடு என்பது என் கருத்து.

பேயாரின் 🌺🙏🏽 பாடல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைப்பாடுகள் இருப்பதைக் காணலாம்.

எனது விளக்கங்களில் குறைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, ஐயா! 🙏🏽அண்ணாமல 

No comments:

Post a Comment