Friday, May 29, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #32: மேன்மைபுனை, தோன்றாமலே ஒளிக்கும் - சிறு விளக்கம்

செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #32

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸செகம்மருவும்...தூயமலை - உலகை விரும்பும் ஐம்புலன்களோடு சேராமல், மெய்யறிவு தரும் சுகத்தை அடைய முயலும் தொண்டர்களின் அகத்தை விரும்பும் எம்பெருமான். (இது பாடல் வரிகளுக்கான நேரடி பொருள்)

🔹ஞானம், மெய்யறிவு, நிலைபேறு, ஆன்மா எல்லாம் ஒரே மெய்பொருளையேக் குறிக்கின்றன. சுகம் எனில் இணக்கம். மெய்ப்பொருளுடன் இணக்கம். "ஞானச்சுகம் மருவ" எனில் "மெய்ப்பொருளுடன் இணைய விரும்பி" என்று பொருள்.

🔹மேன்மைபுனை - சிந்திக்க வேண்டிய சொற்கள்!! மேன்மை - மேலான, உயர்ந்த. ஒரு செயலின் விளைவு அழகுடன் நயத்துடன் இருந்தால் அச்செயல் புனைவு எனப்படும் (கவிதை புனைதல்). எனில், மேன்மைபுனை - மேன்மையான செயல் எது? வடக்கிருத்தல்!! இறைவனின் திருநாமத்தை சொல்வது முதல் தன்னாட்டம் வரை அனைத்துமே வடக்கிருத்தல் தான். #மேன்மைபுனை தான். ஏனெனில், இவற்றின் விளைவால் வெளிப்படும் மெய்யறிவே உண்மையான அழகாகும். எனவே தான் எம்பெருமான் சுந்தரன் 🌺🙏🏽 என்றும் அழைக்கப்படுகிறார்.

🔹அகம் மருவும் தூயமலை - அகம் - மனம். மருவும் - விரும்பும். இறைவன் விரும்பும் பொருள் திரும்புமா? கோவிந்தா தான்!! (#கோவிந்தா எனில் போனால் திரும்ப வராது ☺️) மெய்ப்பொருளுடன் இணைய வேண்டி, வடக்கிருக்கும் தொண்டர்களின் மனதை அழித்திடுவார் எம்பெருமான்.

🔸வஞ்சகர்க்குத் தோன்றாமலே ஒளிக்கும் மாயமலை - அனைவருள்ளிருந்தும் ஒளிர்வது மெய்ப்பொருளே. வஞ்சகர்கள் இதை உணர்வதில்லை. இந்த உண்மை அவர்களுக்குத் தோன்றுவது கூட இல்லை. இப்படி தோன்றாமலே ஒளிர்வது எப்படி நடக்கிறது? மாயை என்னும் இறையாற்றலால். மாயமலை.

நமக்கும் தான் இந்த உண்மை தோன்றுவதில்லை. நமக்குள்ளிருந்தும் தான் மெய்ப்பொருள் ஒளிர்கிறது. எனில், நாமும் வஞ்சகர்களா? 😛 ஆம். நாமும் வஞ்சகர்களே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது, இல்லாத ஒருவனாகக் காட்டிக்கொள்வது, இருள் நிறைந்திருப்பது எல்லாம் வஞ்சகம் தான். இவற்றில் நம்மிடம் இல்லாதது எது? 😄

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment