Tuesday, May 26, 2020

பக்திக்கு தேவை குருட்டு நம்பிக்கை!! 😁

முதலில் வாட்ஸ்அப் வழியாக கிடைத்த பிட்:

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற
கண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

oOOo

இது போன்ற கதைகள் ஆபத்தானவை! இப்படிப்பட்ட கதைகளை வைத்துத்தான் மோகன்தாஸ் முதல் அனைத்து இந்து எதிரிகளும் நம்மை அடக்கி, ஏமாற்றி, மோசம் செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

குருட்டு நம்பிக்கைகளினால் விளைந்தவை தான் பாலைவன மதங்கள். நம் மண்ணில் விளைந்த சமயங்களும் மதங்களும் அறிவை அடிப்படையாகக் கொண்டவை.

நம்பிக்கை என்பது துய்ப்பினால், உள்ளுணர்வினால் ஏற்படவேண்டும். குருட்டுத்தனத்தினால் ஏற்படக்கூடாது. பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽, "நானே நேரில் தோன்றினாலும் நம்பாதே. உன் மீது மட்டுமே கவனம் செலுத்து." என்கிறார்.

"அறம் செய்ய விரும்பு" என்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, தான் மட்டும் பணம் செய்ய விரும்பும் ஆசிரியரின் நிலை ஒரு நாள் என்னவாகுமோ அது தான் இது போன்ற மூளைச்சலவை பிட்டுகளை கிண்டியவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களால் நமது மதிப்பற்ற ரத்தினங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கின்றன!! 😔

oOOo

தன்மையுணர்வில் அமிழ்ந்திருப்பதே பக்தி

-- ஆதிசங்கரர் 🌺🙏🏽

தானாக இருப்பதே #பக்தி. ஒருவன் எப்போதுமே அந்த நிலையில் தான் இருக்கிறான். அவன் உணர்வதில்லை. எண்ணங்களற்று இருப்பதே பக்தி. அதுவே முக்தியும் (விடுதலையும்) கூட.

-- பகவான் (அவரைத் தவிர வேறு யார் இவ்வளவு தெளிவாக, அழகாக விளக்கியிருக்க முடியும்!! 🌺🙏🏽)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

பி.கு.: அடுத்த முறை கிண்டும் போது அந்தந்தப் பகுதிகளில் தோன்றிய மாமுனிவர்களை, பெரியோர்களை, மன்னர்களை வைத்துக் கிண்டவும். இதே கதையை மறைஞான சம்பந்தர் - உமாபதி சிவாச்சாரியார், தாயுமான சுவாமிகள் - அவர்தம் மாணவர், குகை நமச்சிவாயர் - குரு நமச்சிவாயர், தத்துவராய சுவாமிகள் - தாண்டவராய சுவாமிகள் போன்ற மாமுனிவர்களை 🌺🙏🏽 வைத்து எழுதியிருந்தால் சற்று மதிப்பு கூடியிருக்கும்.

No comments:

Post a Comment