Friday, May 29, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #31: "இருளும் அலை மாறாமல் எப்போதும் காட்சி அருளுமலை" - சிறு விளக்கம்

துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசும்தேன் இருக்குமலை - அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #31

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#இருளும் #அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை - எண்ணங்களே இருளும் அலை! கடல் அலைகள் போன்று ஓயாமலும், சற்று விட்டுவிட்டும் நம்மை வந்து தாக்குவதால் எண்ணங்களை அலை என்று அழைக்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. வந்து வந்து தாக்கி நம் மீது அறியாமை என்னும் இருளை மீண்டும் மீண்டும் போர்த்திவிட்டுப் போகின்றன.

இது எப்போது ஓயும்? பகவானின் 🌺🙏🏽 பதில்: கோட்டைக்குள் எத்தனை வீரர்கள் இருந்தால் என்ன? அவர்கள் வெளியே வர வர வெட்டிக் கொண்டே இருந்தால், ஒரு சமயம் கோட்டை நம் வசப்படும்.

எத்தனை பிறவிகளாக எவ்வளவு வினைகளை சேமித்து வைத்திருக்கிறோமோ? இவைத் தீரும் வரை என்ன செய்வது? எப்படி நம்மை காத்துக் கொள்வது?

வெளியே செல்லும் போது, காணக் கூடாத காட்சி ஏதேனும் நாம் முதலில் கண்டால், பிள்ளைகளை வேறுபக்கம் பார்க்கச் சொல்கிறோம். அதாவது, ஒரு தீய காட்சிக்கு தீர்வு... இன்னொரு நல்ல காட்சி! உலகு எனும் அறியாமை இருளுக்குத் தீர்வு சுத்த அறிவு ஒளியான மெய்ப்பொருள்!!

இருளானது அலையலையாகத்தான் நம்மைத் தாக்குகிறது. மெய்ப்பொருளோ எப்போதும் காட்சி கொடுத்து நம்மைக் காக்கிறது!!! எவ்வாறு?

நாம் எப்போதுமே நாமாகத்தான் - நான் எனும் தன்மையுணர்வாகத்தான் - இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. நாம் ஒரு திரைக்கு சமம். நம் உடல் முதல் நாம் காணும் யாவும் திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம். இதே போன்று, கனவு, நனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளும் நமக்கல்ல. மனதிற்குத்தான். இவையும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவைதான். நனவில், ஒரேயொரு முறை இறையாற்றல் காணும் காட்சியை விலக்கினால் போதும். நாம் யாரென்று உணர்ந்து கொள்வோம். நாமே தீயகாட்சிக்கு தீர்வான நல்ல காட்சி! நாமே எப்போதும் உள்ளபொருள்!!! நாமே எப்போதும் காட்சி தரும் அண்ணாமலை!!!

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவது. கடவுளை அறிவது என்பது கடவுளாய் ஆவது. கடவுளாய் ஆவது என்பது இருப்பது!! (To see God is to know God. To know God is to be God. To be God is to BE!!)" (பகவான்/சாதுஓம் சுவாமிகள் 🌺🙏🏽) நம்மைக் காண்பது என்பது நாமாய் இருப்பது!!

நாம் யாரென்று உணர்ந்தபின் இருளும் அலையென்ன, இருளும் ஆழிப்பேரலையே வந்தாலும் புன்முறுவலுடன் எதிர்கொள்வோம்!! (அலை எனும் காட்சி தோன்றி திரையை நனைக்கவாப் போகிறது? ☺️)

oOOo

ஒருநாள், ஒரு அன்பர் பகவானிடம், " பகவானே! உலகில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் உள்ளனவே!" என்று கேட்டார். அதற்கு, பகவான், "ஆம். காண்பவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தவே இந்த ஏற்றத்தாழ்வுகள்" என்று பதிலளித்தார்!! 👏🏽👏🏽👏🏽👌🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment