ஓலம்இடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில்
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி
வந்தமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #24
🔸நாலுமறை அந்தமலை - நான்கு மறைநூல்கள் முழுவதிலும் பலவிதமாக போற்றிப் பாதுகாக்கப்படும் பொருள் அந்த சிவப்பரம்பொருளே.
🔸ஓலமிடும் ... அடக்குமலை - ஆமை திருவிறக்கக் (கூர்ம அவதாரக்) கதையில் வரும் நிகழ்வு. (இதை விளக்குவதற்கு தனி நூலே வேண்டும்! முதன் முதலில் படிப்பவர்களால் சிறிதும் நம்பமுடியாது!! கோபம் & வெறுப்பு கூடத் தோன்றலாம்!!!)
🔹ஆமை - புலனடக்கம்
🔹மந்தார மலை - மெய்யாசிரியர் காட்டிய வழி/உத்தி
🔹வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔹உள்ளே செல்லும் உயிர்வளி - தேவர்கள்
🔹வெளிவரும் கரியமிலம் - அசுரர்கள்
🔹கடையப்படும் கடல் - நமது உடல்
🔹ஆலகால விடம் - நிர்விகற்ப சமாதி
🔹அன்னை பார்வதி - சமாதியிலிருந்து வெளிவரச் செய்யும் ஆற்றல்
🔹அன்னை தாரா - சமாதி துய்ப்பைத் திரும்ப திரும்ப நினைவு கூறச் செய்யும் ஆற்றல்
புலனடக்கத்துடன் ஆன்ம பயிற்சியில் ஈடுபடும் போது, அவரவர் முன்வினைப்படி, பல சித்திகள் முதலில் கைகூடும். இவையெல்லாம் வெறும் விடம் தான். தொடர்ந்து முன்னேறினால் நிர்விகற்ப சமாதி கைகூடும். இதுவே ஆலகாலம் எனப்படும் கொடிய விடமாகும்!!
(தாகத்திற்காக தண்ணீர் கேட்டுவிட்டு, பல ஆண்டுகள் நிர்விகற்ப சமாதியில் இருந்து விட்டு, வெளிப்பட்டவுடன் ஒரு முனிவர் கேட்ட கேள்வி: தண்ணீர் எங்கே? ☺️ அதாவது, மனம் இறக்கவில்லை!! எனவே தான் இந்த சமாதி கொடிய விடம் எனப்பட்டது.)
நிர்விகற்ப சமாதியில் ஒருவர் (முனிவர் என்று கொள்க) இருக்கும் போது, அவரிடம் மீதமிருக்கும் பற்று ஏதேனும் ஒன்றை வைத்து, மாயை அவரை வெளியேத் தள்ள முயலும். இந்த மகாமாயையே பெருமானின் கழுத்தைப் பிடித்து, விடம் இறங்காமல் காத்த அன்னையாகிறார். மாயை முயன்றாலும், முனிவர் விரும்பினால் மட்டுமே வெளிவருவார். "சரி, விட்டுத்தான் கொடுப்போமே. இந்த பற்றையும் முடித்து விட்டு திரும்பவோமே." என்று விட்டுக் கொடுப்பார். உலக வாழ்க்கைக்கு திரும்புவார். "உலகம் காப்பாற்றப்பட்டது" என்பது இதுவே.
தனது பேரின்ப நிலையை விட்டுக் கொடுத்ததால் முனிவர் தியாகராஜர் ஆகிறார். ஆனால், இந்த துய்ப்பு அவரை விட்டகலாது. அதே சமயம், அவரது உடலின் இயக்கத்தைப் (உலக வாழ்க்கையை) பாதிக்காது. எனவேதான் விடம் கழுத்துடனே நின்றது என்றார்கள். இந்நிலையில் அவர் நீலகண்டன் எனப்படுகிறார். உலக வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் தனக்கு கிடைத்த துய்ப்பை அடிக்கடி நினைவில் கொள்வார். இந்த செயலை செய்யத் தூண்டும் ஆற்றலே அன்னை தாரா எனப்படுகிறார்.
பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 திரும்ப திரும்பக் கூறும் அறிவுரைகளில் ஒன்று: உன் சொரூபத்தை நினைவில் கொள்!!
பேயாரும் 🌺🙏🏽 இறைவனிடம் வைக்கும் இறுதி வேண்டுகோள்: உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்!!
கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
No comments:
Post a Comment