Friday, May 22, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #25 - "முன்நின்று முக்தி வழங்குமலை" - சிறு விளக்கம்



(அண்ணாமலையார் திருப்பாதம் 🌺🙏🏽, திருவண்ணாமலை உச்சி)

ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்
சோதிச் செழும்சுடராய்த் தோன்றுமலை - வேதம்
முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி
வழங்குமலை அண்ணா மலை

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நெடுமால் அயன் - மாயோன் & நான்முகன். அடிமுடிக் காணா அண்ணாமலை படலம். மாயோன் - அகந்தை/செல்வம். நான்முகன் - புத்தி/கல்வி. கல்வியாலும் செல்வத்தாலும் இறைவனை அடைய முடியாது என்று பொருள் கொள்ளலாம். அல்லது, புத்திக்கும் அகந்தைக்கும் அப்பாற்பட்டவர் இறைவன் என்று பொருள் கொள்ளலாம்.

🔸வேதம் முழங்குமலை - வேதம் என்ற ஆரியச் சொல்லின் சரியான பொருள் அறிவு. ஆனால், பொதுவான பொருள் மிக உயர்ந்த ஆன்ம அறிவு. இடைக்காட்டு சித்தர் (அண்ணாமலையார்) 🌺🙏🏽 முதல் இன்று வரை எண்ணற்ற மாமுனிவர்களை ஈர்த்து வைத்துக் கொண்ட தலம் திருவண்ணாமலை. இங்கு ஆன்ம அறிவு முழங்காமல் வேறெங்கு முழங்கும்? பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 "நான் யார்?" என்ற 2 இரத்தினங்கள் போதுமே! கண்ணபிரான் 🌺🙏🏽 அமர்ந்த தராசுத் தட்டை, தான் வைத்த ஒரு துளசி இலையால் அன்னை ருக்மணி மேலெழுப்பியது போல், ஆரிய திருமறை நூல்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தாலும், பகவானது "நான் யார்?" என்ற 2 இரத்தினங்கள் போதும் தராசை சமமாக்க!! 💪🏽

🔸சிந்திப்பார் முன்நின்று முத்தி வழங்குமலை -
🔹முதலில், முக்தி (விடுதலை) என்றால் என்ன? பகவானது பதில்: "பந்தத்தில் இருக்கும் தான் யாரென்று விசாரித்து தனது யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி!"
🔹அடுத்து, பற்று (பந்தம்) என்றால் என்ன? உடலல்லாத நாம், நம்மை அழியும் உடலாக எண்ணிக் கொண்டிருப்பதே பற்று.
🔹இந்த பற்று எப்போது விலகும்? அதிபக்குவிகளாக இருந்தோமானால் மெய்யாசிரியரின் அறிவுரையைக் கேட்ட உடனே விலகிவிடும். இல்லையெனில், ஒரு சிறிய வெள்ளோட்டம் காட்டினால் தான் விலகும்.
🔹இந்த வெள்ளோட்டத்தை யார் காட்ட முடியும்? இறைவன் தான்!!

சரியான சமயம் வரும் போது, நாம் காணும் காட்சிகள் யாவும் மறைந்து நாம் நாமாக இருப்போம்!! 😍 இந்த ஒரு துய்ப்பில் அனைத்தும் புரிந்து போகும். 😌 இதுவரை கண் முன்னே காட்சிகளைக் காண்பித்த அதே ஆற்றல், இப்போது அவற்றை மறைத்து நம்மை - நான் என்ற தன்மையுணர்வை - நமக்கு காட்டுகிறது. இதைத் தான் "முன்நின்று முத்தி" என்று குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பாடியுள்ளார்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

No comments:

Post a Comment