Wednesday, August 23, 2017

ЁЯМ╕ рооுроХро╡ை ро╕்ро░ீроХрог்рог рооுро░ுроХройாро░் ЁЯМ╕

ஒப்பற்ற தமிழ் புலமை, ஆன்ம ஞான அனுபவம், சிறந்த குருபக்தி, தன்னடக்கம் முதலான தெய்வீகப் பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற #ஶ்ரீமுருகனார் ஸ்ரீரமண பக்தர்களுள் பெரிதும் மதித்துப் போற்றுதற்குரியவர் ஆவார்! 🌸🌼🙏🙏

அவரது நினைவு நாள் 21-8-2017 அன்று ஸ்ரீரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்பட்டது. அன்னாரது சமாதிக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றன. முருகனார் இயற்றிய ஸ்ரீரமண சரித அகவல் மற்றும் ஸ்ரீரமண சந்நிதிமுறை ஆகிய இரு நூல்களின் முற்றோதல் கடந்த 19-8-2017 முதல் ரமண அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டது.

பகவானைத் தவிர வேறெந்த மகானையும்,  தெய்வத்தையும் பாடியறியாத முருகனாரைப் பற்றி இங்கு காண்போம்.

💠 *இளமைப் பருவமும் பணியும்*

1890ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணியம் என்ற இயற்பெயருடன் இராமநாதபுரத்தில் பிறந்தார். பிற்காலத்தில் பெரும் புலவராக, அருட்கவியாக விளங்கிய இவர் தமது ஐந்தாவது வயது வரை பேசாமல் ஊமையாக இருந்தார். படிப்பை முடித்துத் திரும்பிய இவருக்கு தமிழ் மேதைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. *தமிழ்ச் சொல்லகராதி (Tamil Lexicon) குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்.* 👏👏

💠 *குரு தரிசனம்*

முருகனாரின் மாமனாரான தண்டபாணி சுவாமி பகவானின் பக்தராவார். அவரின் அழைப்பிற்கிணங்க 21-9-1923 வியாழக்கிழமை தனது தாயாருடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் தரிசித்து விட்டு, மகான்களை வெறும் கையுடன் சென்று தரிசித்தல் ஆகாது என்பதால், ஒரு பாடலை குரு காணிக்கையாக எழுதிக் கொண்டு ஆச்ரமத்திற்குச் சென்றார்.

அச்சமயம் #பகவான் மலர்ந்த முகத்துடன் வெளிவந்து, முருகனாரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். (இது போன்று வேறு யாரையும் பகவான் எதிர்கொண்டு வரவேற்றதில்லை. எனில், முருகனாரின் மேன்மையை சொற்களால் தான் விளக்கமுடியுமா?)

பகவானைக் கண்ட மாத்திரத்தில் #முருகனார் செயலற்றுப் போனார். காணிக்கையாக அவர் எழுதி எடுத்து வந்த பாடலை பாடி சமர்பிக்க முடியவில்லை. அவரது நிலையை உணர்ந்து பகவானே அவரிடமிருந்து பாடலைப் பெற்று படித்துக் காண்பித்தார். 😅

💠 *அண்ணாமலை ஸ்திரவாசம்*

தாயார் காலமானபிறகு முருகனார் சென்னையில் பார்த்து வந்த ஆசிரியர் பதவியையும், குடும்பத்தையும் துறந்து, 1926ஆம் வருடம் ஜுலை மாதம் அண்ணாமலைக்கே நிலையாக வந்து விட்டார். பலாக் கொத்து (அச்ரமத்தை அடுத்துள்ள ஒரு பகுதி) வாசத்தின்போது, ஒரு அன்பர், “ரமண பக்தர்கள் ரமணரை, முருகன், சிவன் என்று பற்பல அவதாரங்களாக விவரிக்கிறார்களே! உண்மையில் அவர் எந்தத் தெய்வத்தின் அவதாரம்?", என்று முருகனாரிடம் கேட்டார். அதற்கு முருகனார், “அவர் எந்த தெய்வத்தின் அவதாரமும் அல்ல. எல்லா தெய்வங்களுக்கும் ஆதாரமான பரம்பொருள் அவர்", என்று விடையளித்தார். (அவதாரம் - இறங்கி வருதல்; பரம்பொருள் நிலையிலிருந்து இறங்கி வருதல். ஞானி - பரம்பொருளாகவே இருப்பவர்.)

முருகனார், சுப்பிரமணியம் என்ற தம் வடமொழிப் பெயரையும், இராமநாதபுரம் என்ற தாம் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, "#முகவாபுரி #முருகன்" என்று தமிழில் மாற்றிக்கொண்டார். இந்தப் பெயர் மாற்றத்தை விசுவநாத சுவாமி அடிக்கடி வேடிக்கை செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவான் விசுவநாத சுவாமியைப் பார்த்து, ”அந்தச் சொற்றொடரை வைத்து ஏன் ஒரு பாடல் எழுதக்கூடாது?” என்று கேட்டார்.  விசுவநாதர் என்ன முயன்றும் முகவாபுரி முருகன் என்ற ஒரு சொற்றொடர் மட்டுமே எழுத முடிந்தது. அந்தக் காகிதத்தை பகவானிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். பகவான் அந்த வார்த்தைகளை உள்ளடக்கி ஒரு அழகான பாடலை எழுதி முடித்து விசுவநாதன் என்று தாமே கையெழுத்தும் போட்டு விட்டார். அந்தப் பாடல்:

அகத்தாமரை மலர்மீதுறை அருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே

💠 *முருகனார் இயற்றிய பாடல்கள்*

முருகனார் அவ்வப்போது சில பாடல்களை எழுதிக் கொண்டு வந்து பகவானிடம் கொடுப்பார். ஒருமுறை,

“அண்ணா மலை ரமணன் அன்பர்க்கு அருண்மாரி
கண்ணாலே பெய்யுங் கருணைத் திறம்பாடி
எண்ணா தனஎண்ணி யேங்கடியர் வெம்பாவத்
திண்ணா சறவே தெறுசே வகம்பாடிப்
பெண்ணாண் அலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணா டுளத்தொளிரும் உண்மை வளம்பாடிப்
பண்ணார் அவன்புகழைப் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணாற் அமைதி தழையேலோர் எம்பாவாய்"

என்ற திருவெம்பாவையை ஒத்த ஒரு பாடலை எழுதி பகவானிடம் கொடுத்தார். *அதைப் படித்துப் பார்த்த பகவான், “மாணிக்கவாசகரைப்போல் எழுதுவீரா? இப்படி எழுதிக் கொண்டே போனால் திருவாசகம் போல் அமையுமே!” என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்டதும், ”மாணிக்கவாசகர் எங்கே, மூடமதியுடைய நான் எங்கே? மணிவாசகர்போல் என்னால் எப்படி எழுத முடியும்?” என்றார் முருகனார்.*
பகவான் தம் திருக்கண்ணாலேயே அருட்சக்தியை முருகனார் உள்ளத்தில் பாய்ச்சினார். இதன் பிறகு தம் பாடல்களை திருவாசக அமைப்பு முறையில் வைத்துப் பதிகங்களை இயற்றத் தொடங்கினார். *இப்படி உருப்பெற்றதுதான் ஸ்ரீரமண சந்நிதிமுறை எனும் அரிய நூல். இந்நூலை "திருவாசகம் நிகரே" என்று பகவான் புகழ்ந்துள்ளார்.* குருவாசகக் கோவை, ரமண ஞானபோதம், ரமண தேவமாலை, ரமண சரணப் பல்லாண்டு முதலிய 30,000 க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். 👌🙏

முருகனாருக்கு முன்னர் பகவானைத் தேடி வந்த அன்பர்கள் அனைவரும் அவரவர் ஐயங்களை போக்கவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே பகவானிடம் வேண்டி நின்றனர். ஆனால், முருகனார் அவ்வாறு வேண்டி நிற்கவில்லை.

*வேண்டத் தக்கது அறிவோய் நீ*
*வேண்ட முழுதும் தருவோய் நீ*

என்ற திருவாசக வரிகளை உணர்ந்திருந்தமையால், பகவானிடம், "எதைத் தாங்கள் கூற விரும்புகிறீர்களோ அதைக் கூறவும்" என்று மட்டுமே கேட்டுக்கொண்டார். இதனால் பகவானிடமிருந்து வெளிப்பட்டவை தான் *உள்ளது நாற்பது மற்றும் உபதேச உந்தியார்* என்னும் ஒப்பற்ற அத்வைத இலக்கியங்கள். 👏👏

முருகனாருக்கு பட்டினி கிடப்பது என்றால் மிகவும் விருப்பம். காரணம் பிக்ஷைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. பல நாட்கள் முழுப்பட்டினி கிடந்திருக்கிறார். இப்படி ஒருநாள், சிவராத்திரி என்று தெரியாமல், முழுப்பட்டினி இருந்தார். மறுநாள் பகவான் கிரிவலம் புறப்பட்டபொழுது முருகனாரும் அதில் கலந்து கொண்டார். முந்தைய நாள் பட்டினியின் காரணமாக முருகனார் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அவரது சோர்வைக் கண்ட பகவான், ”என்ன சிவராத்திரி உபவாசமோ! சோர்ந்து விட்டீரே! சரி, சரி என்னுடன் வாருங்கள் ஆச்ரமத்தில் சாப்பிடலாம்” என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சாப்பிடும்போது பரிந்து உணவளிக்கச் செய்தார். இதனையே,

"திருநாள் சிவராத்திரி யெனத் தெரியாது
ஒருநாள் பட்டினி இட்டுஎனை மறுநாள்
விசர்ப்புஉற வலம் புரிவித்து அருணந்தனைப்
பசிப்பதம் அறிந்து (எனக்கு) ஊண் பரிந்து அளிப்பித்(தான்)"

என்று கீர்த்தித் திருவகவலில் கூறுகிறார்.

💠 *முருகனார் உடலை உகுத்தல்"

28-8-1973 ஆவணி அமாவாசை அன்று பகவான் திருவடிகளில் கலந்தார். அன்னாரது சமாதி ஆச்ரம வளாகத்தில் அமைந்துள்ளது.

*#உள்ளது #நாற்பது, #உபதேச #உந்தியார்  மற்றும் #குருவாசகக் #கோவை ஆகிய இம் மூன்று ஒப்பற்ற நூல்களுக்காகவே ரமண பக்தர்கள் முருகனாருக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாவர்.* இந்நூல்களைத் தெளிவாகக் கற்று, அவை உணர்த்தும் கருப்பொருளை சிக்கெனப் பற்றி, நமது அஞ்ஞான இருளைக் களையவேண்டும். இதுவே ஸ்ரீபகவானுக்கும், ஸ்ரீமுருகனாருக்கும் நாம் செலுத்தும் குரு காணிக்கையாகும்.

🔥 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய 🔥

🌸🙏🌼🙏🌸

#ரமண #மகரிஷி, #ரமணர், #ஸ்ரீரமணர்

(மூலம்: ஸ்ரீரமணாச்ரம முகநூல் இடுகை மற்றும் அதில் பதிவிடப்பட்டிருந்த சில கருத்துக்கள்)

No comments:

Post a Comment