Friday, August 18, 2017

பகவான் ஸ்ரீரமணரது கையெழுத்து!! 🌺🙏

இணைப்பு படத்திலுள்ள #கையெழுத்து #பகவான் ஸ்ரீரமண மகரிஷியினுடையதாகும். அவருக்கு சுமார் 10 வயதிருக்கும் போது, அவரது பள்ளித் தோழர் திரு. கதிர்வேலு என்பவரின் நோட்டுப் புத்தகத்தில் இதை எழுதியிருக்கிறார். இதுவே இது வரை கிடைத்தவற்றில் பழமையானதாகும்.

அனைத்து விபரங்களை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, இறுதி வரியை மட்டும் தமிழில் எழுதியிருக்கிறார். ☺ "விளையும் பயிர் முளையிலே தெரியும்". பின்னாளில் தமிழில் சிறந்த அத்வைத நூல் இல்லை என்ற குறையை போக்க உள்ளது நாற்பது என்ற மிக அருமையான நூலை இயற்றியதற்கும், தமிழ் தாத்தா உ.வே.சா. வந்து சந்தித்த போது அவரை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று மேலும் பணியினைத் தொடர ஆசியளித்தமைக்கும், பல மொழிகளில் வல்லவராக இருந்தாலும் தமிழை மட்டும் அதிகம் விரும்பி பாடல்கள் இயற்றியதற்கும் இது அறிகுறியாகும்.

"மனமழிந்த ஞானிக்கு விருப்பு / வெறுப்பு எவ்வாறிருக்க முடியும்?" என்ற கேள்வி எழலாம். ஞானிக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது தான். மிதி வண்டியை ஓட்டிச் செல்லும் ஒருவர், அவர் அடைய வேண்டிய இலக்கை எட்டியதும் ஓட்டுவதை நிறுத்தி விடுவார். ஆனாலும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதி வண்டி நிற்காமல் சென்று கொண்டிருக்கும். சரியாக கவனிக்காதவர்கள் அவர் இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார் என எண்ணுவர். இது போன்றது தான் ஞானியின் செயல்பாடுகளும். அவரது உடல் இறக்கும் வரை, மீதமுள்ள வினைப் பயன்களை அது அனுபவித்துக் கொண்டிருக்கும். இப்படி மீதமுள்ள வினைப்பயன்களில் ஒன்று தான் பகவானது தமிழ் விருப்பம். நம்மைப் போல் பகவானும் #தமிழ் விரும்பியாக முற்பிறவியில் இருந்துள்ளார் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி தானே! 🤗

தமிழையும் ஞானத்தையும் தாமும் சுவைத்து அனுபவித்து, நாமும் சுவைத்து அனுபவிக்க தீந்தமிழ் பதிகங்களையும், பாடல்களையும் விட்டுச் சென்ற காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார் மற்றும் எண்ணிலடங்கா பெருமகனார்கள் வரிசையில் வந்தவர் #ஸ்ரீரமணர்! 🌼🌺🌸🙏🙏🙏

இவர்கள் வாழ்ந்த பூமியில் வாழவும், இவர்கள் பேசிய மொழியில் பேசி மகிழவும் நாம் எவ்வளவு நல்வினைப் பயன்களை சம்பாதித்திருக்க வேண்டும். 😊

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய

🌺🙏🌺

No comments:

Post a Comment