Thursday, November 9, 2023

கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்


கேதார கௌரி விரதம் - சிறு விளக்கம்:

🌷 கேதாரம் - நிலம்

🌷 கௌரி - நல்ல / சிறந்த ஒளி

🌷 விரதம் - விலகியிருத்தல்

🔸 நல்ல நிலத்தில் என்ன செய்வார்கள்?

உழுது, செம்மையாக்கி, பயிர் செய்து, நல்ல விளைச்சல் பார்ப்பார்கள். இதுபோன்று, "என்னை செம்மையாக்கி, நல்லெண்ணங்களை பயிர்செய்து, நல்விளைவுகளை அறுவடை செய்துகொள், இறைவா!" என்று இறைஞ்சுவதுதான் இந்நோன்பின் நோக்கமாகும்!

🔸 அடுத்து, விரதமென்றால் விலகியிருத்தலென்று பார்த்தோம். எதிலிருந்து விலகியிருத்தல்?

படைப்பிலிருந்து விலகியிருத்தல்.

🔸 அடுத்து, படைப்பு என்றாலென்ன?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமதுடல் மற்றும் நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சி. அதாவது, தோன்றி மறையும் யாவும் படைப்பாகும்!

🔸 மேற்சொன்னவற்றையெல்லாம் விலக்கிவிட்டால், மீதமென்ன இருக்கும்?

"நான்" என்ற தன்மையுணர்வு மட்டும் மீதமிருக்கும்! வகை வகையாக பெயர்களை வைத்துக் கொண்டாலும், இந்நிலையை அடைவதுதான் எல்லா விரதங்களின் நோக்கமாகும். விரதமென்ற ஆரியச்சொல்லுக்கு சமமான தமிழ் சொல் "நோன்பு" ஆகும்.

oOo

அடுத்து, கேதார்நாத் என்ற பெயரின் உட்பொருளை சற்று சிந்திப்போம்.

கேதார்நாத் -> கேதாரம் + நாதன் -> நிலம் + தலைவன்.

🔸 எந்த நிலத்தின் தலைவன்?

வையகம் எனும் நிலத்தின் தலைவன்.

🔸 நிலத்தில் என்னென்ன நிகழ்கின்றன?

செடி கொடிகள் முளைக்கின்றன. அவற்றை பல்லுயிரிகள் உண்கின்றன. அவற்றை வேறுயிரிகள் உண்கின்றன. பிறகு, உயிரிகள் இறக்கின்றன. அவற்றின் உடல்கள் மண்ணோடு மண்ணாகின்றன. மீண்டும் அடுத்த சுழற்சி தொடங்குகிறது. இதற்கு சமமான நிகழ்வுகள்தாம் வையகத்தில் நிகழ்கின்றன.

பிறத்தல், வளர்தல், வாழ்தல், இறத்தல் என்ற சுழற்சி தொடர்ந்தவண்ணம் இருப்பதால், வையகம் எனும் அன்னையை நிலமாக கணக்கிட்டு, இவ்வையகம் தோன்றி, இருந்து, மறைய இடங்கொடுத்திருக்கும் உள்ளபொருளை (சிவத்தை) தலைவனாக கணக்கிட்டுள்ளனர். அந்த சிவமாக சமைந்த ஒரு பெருமான் குடியிருக்கும் (ஆரியத்தில், சமாதியாகியிருக்கும்) இடமே கேதார்நாத் ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment