🪔 நமது தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும். பூம்பாவை பதிகத்தில், "விளக்கீடு காணாமல் சென்றுவிட்டாயே?" என்று பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கிறார் காழியூர் பிள்ளை.
🪔 பரணி விளக்கு
பரணி நாள்மீனன்று காலையில், திரு அண்ணாமலையார் கருவறையிலிருந்து ஒரு விளக்கை வெளியே எடுத்துவந்து, 5 விளக்குகளை ஏற்றுவர். அன்று மாலை, இவ்வைந்து விளக்குகளையும் மீண்டும் ஒரு விளக்காக்கி, கருவறைக்குள் எடுத்துச் செல்வர்.
இதன் பொருள்: படைப்பென்பது ஐம்பொருட்களாகும் (பஞ்சபூதங்கள்). இவ்வைந்தும் உள்ளபொருளிலிருந்து (பரம்பொருள்) தோன்றியவையாகும். படைப்பின் முடிவில், ஐம்பொருட்களும் மீண்டும் தோன்றிய பொருளிலேயே ஒடுங்கிவிடுகின்றன.
🪔 திருக்கார்த்திகை விளக்கு
கார்த்திகை நாள்மீனன்று மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் (ஆரியத்தில், உச்சி) விளக்கேற்றியதும், இல்லங்கள்தோறும் விளக்கேற்றுவர்.
இதன் பொருள்: விளக்குகள் எண்ணற்றவையாக, பல வகையாக இருந்தாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்று, உயிரிகள் கோடான கோடியாக இருந்தாலும், ஊர்வன, பறப்பன, நடப்பன என பலவகையாக இருந்தாலும், அவற்றினுள் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!!
மேற்கண்ட பேருண்மைகளை திரு இடைக்காட்டுச் சித்தரோ, அல்லது, அவருக்கு பின் அங்கு வாழ்ந்த பெருமான்களோ உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கவேண்டும். எனவேதான், இத்திருவிழாவை திருவண்ணாமலையில் மிகச்சிறப்பாகவும், திருவண்ணாமலையை தொடர்புபடுத்தி ஏனைய இடங்களிலும் கொண்டாடுகிறோம்.
oOo
🌷 விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் … ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது!
விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!
🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை விளைவுகள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!
இதற்கு இரண்டு பொருட்கள் உள்ளன:
🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை
அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, "ஊருக்காக உழை" என்று சொல்லாமல் "கோயிலில் விளக்கேற்று" என்று சொல்லியிருக்கிறார்கள்.
பயன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பயனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.
கடமையை செய். பயனை எதிர்பார்க்காதே. — திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽♂️_
🌷 “சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா” என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதைக் கேட்டிருப்போம்.
சாயங்காலம் – இரவுக்கு முந்தைய – இருள் சூழ்வதற்கு முந்தைய பொழுது. குடும்பத்திற்கு இடர்பொழுது வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஓர் இல்லத்தில், கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான அன்புமிருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் குறைவிருக்குமா?
oOo
ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது தீபாவளி திருநாளோடு (திரு கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்) இணைத்துக்கொண்டார்கள்.
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment