🌷 கல்வியாலும் (அன்னம்) (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.
அன்னம் கலைமகளின் ஊர்தியாகும். கலைமகள் கல்விக் கடவுளாவார். எனவே, இங்கு, அன்னம் கல்வியை குறிக்கிறது.
பன்றியானது பெருமாளின் திருவிறக்கங்களில் ஒன்றாகும். பெருமாள் மலர்மகளின் கணவராவார். மலர்மகள் செல்வத்தின் கடவுளாவார். எனவே, இங்கு, பன்றி செல்வத்தை குறிக்கிறது.
🌷 அறிவாலும் (அன்னம்) மனதாலும் (பன்றி) இறைவனை உணரமுடியாது.
சமயக் குறியீடுகளில், அன்னம் கெட்டதிலிருந்து நல்லதை மட்டும் பிரித்தறிவதை குறிக்கும். எனவே, இங்கு, அறிவை குறிக்கிறது.
பன்றியானது சேற்றில் உழலும். இன்னொருவரின் கழிவை உண்ணும். வதவதவென்று குட்டிகள் ஈனும். இவையெல்லாம் மனதிற்கும் பொருந்தும் - மனமே ஒரு சாக்கடை, இன்னொருவரின் சாக்கடையை அறிய விரும்பும், எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். எனவே, இங்கு, பன்றி மனதை குறிக்கிறது.
🌷 இறைவனை உடலுக்குள்ளேயும் (பன்றி) காணமுடியாது; வெளியேயும் (அன்னம்) காணமுடியாது.
அன்னம் பறந்துசெல்லும். வெளிப்புறத்தை குறிக்கும். பன்றி மண்ணை பறிக்கும்; சேற்றை கிளறும். உட்புறத்தை குறிக்கும்.
oOo
கல்வியாலும், செல்வத்தாலும், அறிவாலும் & மனதாலும் இறைவனை உணரமுடியாது. இறைவனை நமக்குள்ளும் தேடமுடியாது. நமக்கு வெளியேயும் தேடமுடியாது. எனில், எப்படித்தான் உணருவது?
பகவான் திரு இரமண மாமுனிவர் கூறும் பதில்: தானாய் இருத்தலே தன்னையறிதலாம்!!
நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக - மட்டுமிருப்பதுதான் இறைவனை உணருவதாகும்! இதையே நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர். நெருப்பு தன்னொளி கொண்டது. நாமும் தன்னொளி பொருந்தியவர்கள். நாம் இருக்கிறோம் என்பதையுணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை.
நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலுக்குதான் தோற்றமும் முடிவுமுண்டு. நமக்கில்லை. இதையே அடிமுடி காணமுடியாத நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளனர்.
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
No comments:
Post a Comment