Sunday, November 5, 2023

ஒரு சொலவடைக்குள் நம் சமயம் மொத்தமும் அடக்கம்!! 😍


அண்மையில், பின்வரும் பழமொழி / சொலவடை கிடைத்தது:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அறியாதன விலகும்
காட்டை திருத்த வயல்
மலையை திருத்த வீடு

இது முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்ததாகும்! மிகவும் பண்பட்ட ஒருவரே இதை எழுதியிருக்கமுடியும்.

🌷 காட்டை திருத்த வயல்

ஒரு பகுதி காடாக இருக்குமானால், அதனால் மனிதர்களுக்கு பயனில்லை. அக்காட்டை சீர்திருத்தி, வயலாக மாற்றினால், குடியானவன் முதல் அரசன் வரை எல்லோருக்கும் பயனளிக்கும். (இன்று, காட்டை அழிப்பது குற்றமாகும் / தவறாகும். இதை அக்கால கண்ணோட்டத்தில் காணவேண்டும். தொண்டை மண்டலக் காடுகளை வெட்டி, சீர்திருத்தி வயல் நிலங்களாக மாற்றியதால்தான், கரிகாலச் சோழருக்கு "காடுவெட்டி" என்ற பட்டப்பெயர் சேர்ந்தது.)

மெய்யியலில், காடு என்பது வையகத்தை குறிக்கும். வையகம் என்பது மக்கள் திரள். பண்படாத மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? அசல் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதிகளை (கொடிய காடுகளை) போன்றிருக்கும். இதுவே, பண்பட்ட மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? நிலத்தை உழுது, பண்படுத்தி, விதைநேர்த்தி செய்து, நேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை இட்டு, சரியான நேரத்தில் நீர் பாய்ச்சி, களையெடுத்த நெல் வயலைப் போன்றிருக்கும்!!

🌷 மலையை திருத்த வீடு

மனித உடலில் மலையென்பது தலையை குறிக்கும். ஐம்புலன்களில் 4 புலன்கள் தலையிலுள்ளன. விழிப்பு நேரத்தில் நாம் இயங்குவது தலையிலிருந்துதான். எல்லா எண்ணங்களும் தோன்றுவது தலைக்குள்தான். மனமானது விழிப்பு நேரத்தில் தலையிலிருந்து செயல்படுவதாக கணக்கு (உறக்கத்தில், அது இதயத்திற்குள் ஒடுங்கிவிடுகிறது).

மலையை திருத்த -> தலையை திருத்த -> மனதை திருத்த -> வீடுபேறு கிட்டும்.

🌷 அறியாதெனவெல்லாம் நிலையானவை

தற்போது, நம் கண் முன்னே விரியும் வையகத்தை நிலையானதாகவும், நம்மை நாம் நிலையற்றதாகவும் காண்கிறோம். ஆனால், நாம்தான் நிலையான பொருள்! அசைவும், அழிவும் நமக்கில்லை. இதை நாம் உணர்வதில்லை. இதையே, "அறியாதனவெல்லாம் நிலையானவை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

🌷 அறியும்தோறும், அறியாதன விலகும்

🔸 அறியும்தோறும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது.

🔸 அறியாதன விலகும் - வெகுநேரம், இச்சொற்றொடர் பொருந்தி வராமல், தகராறு செய்து கொண்டிருந்தது. பின்னர், "அறி" என்பதை "அரி" என்று மாற்றிப்பார்த்தேன். பொருந்திவிட்டது!

அரி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. இங்கு பெருமாள் & வண்டு ஆகிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில், பெருமாள்.

பெருமாளுக்கு ஆரியத்தில் ஹரி என்றொரு பெயருண்டு. இந்த ஹரி தமிழில் அரி என்று மாறும்.

பெருமாள் என்பதென்ன? நம்மை தவிர மீதமனைத்தும். மனம், உடல் & வையகக் காட்சிகள் யாவும் பெருமாளாகும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனம், உடல் & வையகக் காட்சிகள் விலகிப்போகும். அதாவது, அவற்றின் உண்மைத்தன்மையை நாம் உணர்ந்துகொள்வதால், அவற்றினால் பாதிப்படையமாட்டோம் என்பது பொருளாகும்.

அடுத்தது, வண்டு.

மெய்யியலில், வண்டு என்பது மனதைக் குறிக்கும். ஏனெனில், வண்டிற்கு ஐந்து கண்களுள்ளன. ஐந்து கண்கள் = ஐம்புலன்கள். ஐம்புலன்களின் வழியாக இயங்குவது... மனமாகும். வண்டானது ஒரு பூவில் நிற்காது. ஒவ்வொரு பூவாக தாவிக்கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனமும் ஓர் எண்ணத்தில் நிற்காது. எண்ணம் விட்டு எண்ணம் தாவிக்கொண்டேயிருக்கும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனமானது அதன் வலுவை இழந்துவிடும். ஓயாமல் எண்ணங்களை தோற்றுவித்து, நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருந்த மனமானது, அதன் வலுவை இழந்து, ஒடுங்கிவிடும்.

இவ்வகையில், பெருமாள் & வண்டு ஆகிய இரு சொற்களுமே ஒரே பொருளைதான் கொடுக்கின்றன!

இனி, எழுத்துப்பிழை இல்லாத பழமொழியை / சொலவடையை மீண்டுமொரு முறை பார்ப்போம்:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அரியாதன விலகும்
காட்டை திருத்த வயல் 
மலையை திருத்த வீடு

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment