Saturday, November 11, 2023

அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!


💦👕🍥💥🎉🎊🪔

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 சிவபெருமானின் திருவுருவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின் உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ணபிரான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ணபிரான் நடத்திய போராக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலை நாயக்கராவார். நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் வைணவம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-வைணவர். அவரை வழி நடத்தியவர்களோ வடக்கத்திய பௌத்த-வைணவர்கள். அப்போதிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-சைவர்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திருஞானசம்பந்தப் பெருமான் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு வைணவத் திருவிழாவிற்குள் சைவக்கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. பிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ணபிரானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo


ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் திரு இரமண மாமுனிவர் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? "இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment