Showing posts with label விரதம். Show all posts
Showing posts with label விரதம். Show all posts

Thursday, February 1, 2024

போச்சு! நம்ம ஜி-க்கு போட்டியாளர் வந்துட்டார்!! 😁


💥 சாப்பிடாமல் இருப்பதற்குப் பெயர் பட்டினி கிடப்பது. நோன்பல்ல (அசுரத்தில், விரதமல்ல).

🌷 நோன்பு எனில் உண்ணாமல் இருப்பதுடன், இறைசிந்தனையும் இருக்கவேண்டும்.

🌷 உண்ணாமல் இருப்பது எனில் உடலுக்கான உணவை உண்ணாமல் இருப்பதல்ல. மனதில் தோன்றும் எண்ணங்களையும், நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகளையும் சட்டை செய்யாமல் இருப்பதாகும்.

🌷 இறைசிந்தனை எனில் பொருள் புரியாமல், பாடல்களை, செய்யுள்களை, இறைவனின் திருப்பெயர்களை உருட்டிக் கொண்டிருப்பதல்ல. அல்லது, இறைவனை எங்கோ இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அவ்விடத்தையும், அவரது வடிவத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. நான் எனும் நமது தன்மையுணர்வை (உள்ளபொருளை) இடைவிடாது பற்றிக் கொண்டிருப்பதாகும்!

🌷 கண் எப்படி தன்னையே பார்க்கும்? நாம் எப்படி நம்மையே பற்றிக் கொண்டிருக்க முடியும்?

பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்  
தான் இரண்டற்றதால் உந்தீபற 
தன்மய நிட்டையீது உந்தீபற

🌷 "சும்மா இரு" என்ற பேரறிவுரையின் விளக்கமும் இதுவேயாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼

Thursday, November 9, 2023

கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்


கேதார கௌரி விரதம் - சிறு விளக்கம்:

🌷 கேதாரம் - நிலம்

🌷 கௌரி - நல்ல / சிறந்த ஒளி

🌷 விரதம் - விலகியிருத்தல்

🔸 நல்ல நிலத்தில் என்ன செய்வார்கள்?

உழுது, செம்மையாக்கி, பயிர் செய்து, நல்ல விளைச்சல் பார்ப்பார்கள். இதுபோன்று, "என்னை செம்மையாக்கி, நல்லெண்ணங்களை பயிர்செய்து, நல்விளைவுகளை அறுவடை செய்துகொள், இறைவா!" என்று இறைஞ்சுவதுதான் இந்நோன்பின் நோக்கமாகும்!

🔸 அடுத்து, விரதமென்றால் விலகியிருத்தலென்று பார்த்தோம். எதிலிருந்து விலகியிருத்தல்?

படைப்பிலிருந்து விலகியிருத்தல்.

🔸 அடுத்து, படைப்பு என்றாலென்ன?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமதுடல் மற்றும் நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சி. அதாவது, தோன்றி மறையும் யாவும் படைப்பாகும்!

🔸 மேற்சொன்னவற்றையெல்லாம் விலக்கிவிட்டால், மீதமென்ன இருக்கும்?

"நான்" என்ற தன்மையுணர்வு மட்டும் மீதமிருக்கும்! வகை வகையாக பெயர்களை வைத்துக் கொண்டாலும், இந்நிலையை அடைவதுதான் எல்லா விரதங்களின் நோக்கமாகும். விரதமென்ற ஆரியச்சொல்லுக்கு சமமான தமிழ் சொல் "நோன்பு" ஆகும்.

oOo

அடுத்து, கேதார்நாத் என்ற பெயரின் உட்பொருளை சற்று சிந்திப்போம்.

கேதார்நாத் -> கேதாரம் + நாதன் -> நிலம் + தலைவன்.

🔸 எந்த நிலத்தின் தலைவன்?

வையகம் எனும் நிலத்தின் தலைவன்.

🔸 நிலத்தில் என்னென்ன நிகழ்கின்றன?

செடி கொடிகள் முளைக்கின்றன. அவற்றை பல்லுயிரிகள் உண்கின்றன. அவற்றை வேறுயிரிகள் உண்கின்றன. பிறகு, உயிரிகள் இறக்கின்றன. அவற்றின் உடல்கள் மண்ணோடு மண்ணாகின்றன. மீண்டும் அடுத்த சுழற்சி தொடங்குகிறது. இதற்கு சமமான நிகழ்வுகள்தாம் வையகத்தில் நிகழ்கின்றன.

பிறத்தல், வளர்தல், வாழ்தல், இறத்தல் என்ற சுழற்சி தொடர்ந்தவண்ணம் இருப்பதால், வையகம் எனும் அன்னையை நிலமாக கணக்கிட்டு, இவ்வையகம் தோன்றி, இருந்து, மறைய இடங்கொடுத்திருக்கும் உள்ளபொருளை (சிவத்தை) தலைவனாக கணக்கிட்டுள்ளனர். அந்த சிவமாக சமைந்த ஒரு பெருமான் குடியிருக்கும் (ஆரியத்தில், சமாதியாகியிருக்கும்) இடமே கேதார்நாத் ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, June 25, 2020

அறிவில்லாத பத்திமை முட்டாள்தனமானது! பத்திமை இல்லாத நோன்பு என்பதே கிடையாது!!

(தினமலர் - ஆன்மிகமலர் - 12/06/2020)

#பக்தி என்ற ஆரியச்சொல்லை #பத்திமை என்று தமிழில் மாற்றியிருக்கிறார் திருமங்கையாழ்வார். இதிலிருந்து வருவது தான் #பத்திமன் (#பக்தன்).

oOOo

💥 பத்திமை இல்லாத அறிவு பொருளற்றது

சரி தான்! ஆனால், சொற்றொடர் முழுமையாகவில்லை. அறிவில்லாத பத்திமை என்னவாகும் என்பதையும் உடன் சேர்த்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்!

ஒரு கற்பனைக் கதை.

ஒரு ஊருக்கு தன்னையுணர்ந்த முனிவர் ஒருவர் வருகை தந்தார். நல்ல கல்வியறிவு (மெக்காலே கல்வியல்ல 😉) பெற்ற ஒருவரும், கல்வியறிவு இல்லாத ஒருவரும் அவரை சந்தித்து அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டனர். இருவருக்கும் அவர் "கிடா வெட்டு" என்று அறிவுறுத்தினார்.

முதலாமவர் அவர் சொன்னதை புரிந்து கொண்டு, மனதையழிக்க தனக்கேற்ற வழியை தெரிந்துகொண்டு, அவ்வழிச் சென்று பிறவிப் பெருங்கடல் கடந்தார்.

இரண்டாமவர் தனது வீட்டிற்குத் திரும்பி, தனது குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் உறவினரிடமும் முனிவர் சொன்னதைக் கூறி, அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில், தனது புடை சூழ, கிடா வெட்டி, அனைவருக்கும் விருந்து படைத்தார். இதனால் அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டது போலானது. ஊரில் அவரது மதிப்பு பெருகியது. வருமானமும் பெருக ஆரம்பித்தது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக நடத்தினார். மேலும் உயர்ந்தார். அவரைப் பார்த்து மற்றவர்களும் கிடா வெட்ட ஆரம்பித்தார்கள். திருக்கோயிலின் புகழ் பரவியது. அப்பகுதியின் பொருளாதாரமும் உயர்ந்தது. தமிழ்நாடு சிலை திருட்டு துறை திருக்கோவிலுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நடக்க வேண்டியதெல்லாம் நடந்தது! 🤭

சில காலமாயிற்று. அவரது வாழ்வில் நல்வினைத் தீர்ந்து, தீவினை ஆரம்பித்தது. வருமானம் குறைந்தது. உடலை நோய் தாக்கியது. மனைவி இறந்தார். ஒரு சமயத்தில் கிடா வெட்டு நிகழ்ச்சியை அவரால் நடத்த முடியாமல் போயிற்று. இன்னமும் தாழ்ந்தார். இயலாமையும், வெறுப்பும் சேர்ந்தது. கிடா வெட்டு விழாவை இகழ்ந்தார். சமய சடங்குகளின் மீதிருந்த நம்பிக்கையை இழந்தார். சமூக அநீதி காக்கும் கூட்டத்திடம் போய் சேர்ந்தார். கூவஞ்சட்டை அணிய ஆரம்பித்தார். வளர்த்த மகளை மணந்துகொண்டார். (👊🏽👊🏽👊🏽😌) அதோ கதியானார்.

இவ்வளவுக்கும் காரணம் முனிவரின் "கிடா வெட்டு" என்ற அறிவுரை!! இதுவே, "மனதை அழி" என்று அவர் நேரடியாக அறிவுறுத்தியிருந்தால், இரண்டாமவரின் அடுத்த கேள்வி, "அப்படின்னா என்ன சாமி?" என்று இருந்திருக்கும். இந்த ஒரு கேள்வி அவரை பிறவிப் பெருங்கடலையே கடக்க வைத்திருக்கும்!

ஆக, அறிவில்லாத பத்திமை முட்டாள்தனமானது!!

💥 பத்திமை இல்லாமல் மேற்கொள்ளும் நோன்பு பலனளிக்காது.

முதலில் நோன்பு என்றால் என்ன என்று பார்ப்போம்.

நோன்பு (ஆரியத்தில், விரதம்) எனில் விலகியிருத்தல். எதிலிருந்து விலகியிருத்தல்? புற வாழ்க்கையில் இருந்து விலகியிருத்தல். எனில், அகத்திலேயே தங்கியிருத்தல். எனில், தன்மையுணர்வை விடாது பிடித்திருத்தல். இந்நிலையே ஆரியத்தில் உபவாசம் எனப்படும். உப+வாசம் - அருகில்+இருத்தல். எதனருகில்? இறையுணர்வின் அருகில். இறையுணர்வும் தன்மையுணர்வும் ஒன்று தான். எனில், நோன்பும் அருகிலிருத்தலும் (உபவாசமும்) ஒன்று தான்!

தன்மையுணர்வின் அருகில் இருத்தல், அதைப் பிடித்திருத்தல், அதில் மூழ்கியிருத்தல், தானாய் இருத்தல் என எல்லாமே ஒன்று தான். இந்நிலைக்கே பத்திமை என்று பெயர்!!

"தன்மையுணர்வில் ஆழ்ந்திருப்பதே பத்திமை" - ஆதிசங்கரர் 🌺🙏🏽

"எண்ணங்களற்று இருப்பதே பத்திமை!" - பகவான் ரமணர் 🌺🙏🏽 (தன்மையுணர்வில் நிற்கும்போது எண்ணங்களற்றுப் போகும்)

ஆக, நோன்பு என்பதே பத்திமை தான்!! இதில் "பத்திமை இல்லாமல்" எப்படி நோன்பிருப்பது?

oOOo

எல்லோருக்கும் கூட்டம் வேண்டும் - சார்ந்திருக்க. ஆனால், அந்த கூட்டத்திடம் தனது தொழிலைப் பற்றிய அறிவு சற்று குறைவாக இருக்க வேண்டும். தான் சொல்வதை, செய்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்கக் கூடாது. சார்ந்திருந்தாலும் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும்.

அனைத்து மதத்தினரிடமும், அனைத்து துறையினரிடமும் இதே மனநிலை தான் உள்ளது. வீடு கட்டிப் பாருங்கள். வீட்டிற்கு வர்ணம் பூசிப் பாருங்கள். வீட்டிலுள்ள மராமத்து வேலைகளை செய்து பாருங்கள். கிராமத்திற்கு சென்று உழவு செய்து பாருங்கள். எல்லோரிடமும் இதே மனநிலையைக் காணலாம். எல்லோருக்கும் நாம் வேண்டும். நமது பணம் வேண்டும். ஆனால், அந்தத் துறையைப் பற்றிய அறிவு மட்டும் நம்மிடம் இருக்கக்கூடாது!! இப்படியே, "எனக்கு ஒரு நீதி. மற்றவர்களுக்கு ஒரு நீதி." என்று எல்லோரும் கிளம்பினால் என்னவாகும் உலகம்? 😔

இந்த மனநிலைக்கு காரணம்? அளவுக்கு மீறிய மக்கள் தொகை, இதனால் ஏற்படும் பற்றாக்குறை, இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள்!!

மன்னன் கோன்முறை அரசு செய்தால் தான், குறைவிலாது உயிர்கள் வாழும்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽