Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts
Showing posts with label திருக்கார்த்திகை. Show all posts

Friday, December 5, 2025

விளக்கீடே உண்மையான தீபாவளியாகும்!


விளக்கீடுத் திருவிழாவின் அழகில் மயங்கிய வடவர், அதை அவர்களது தீபாவளியோடு (திரு கண்ண பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாள்) இணைத்துக் கொண்டனர்.

திரு கண்ண பெருமான் உணர்ந்தது: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை விட்டொழித்தலே, உடலெனும் கொடுஞ்சிறையிலிருந்து (நரகம்-நரகாசுரன்) விடுதலை (அசுரத்தில், முக்தி) அடைவதாகும்.

திரு இடைக்காடர் உணர்ந்தது: உயிரிகள் எண்ணற்றவையாக இருந்தாலும், வகை வகையாக இருந்தாலும், அவற்றின் உள்ளிருப்பது ஓர் உள்ளபொருளேயாகும்.

இதையுணர்த்தவே வரிசை வரிசையாக, பல் வேறு அளவுகளில், பல் வேறு வகைகளில் விளக்குகளை ஏற்றுகிறோம். எனவே, விளக்கீடுத் திருநாளே உண்மையான தீபாவளியாகும் (தீப+ஆவளி - தீபங்களின் வரிசை)!

oOo

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இரமணர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

பொருள்: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, புறம் நோக்காது, அகம் நோக்கி (கருத்தை நமது தன்மையுணர்வில் பொருத்தி), "நாமே இறுதியான உள்ளபொருள்" என்பதை உறுதியாக அறுதியாக உணர்வதே, திரு அண்ணாமலையாரின் முடி மீது ஏற்றப்படும் சுடரை காண்பதின் பொருளாகும்.

oOo

தொல்கார்த்திகைநாள் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!

-- திரு ஆளுடைய பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

திருமயிலைப் பதிகத்தில், தொன்மையான தமிழர் திருவிழாக்களை பட்டியலிடும் பெருமான், விளக்கீடை மட்டும் "தொல்" என்ற பெயரடையோடு குறிப்பிட்டு, அதன் தொன்மையை சிறப்பிக்கிறார்.

oOo

அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🪔☀️

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, December 15, 2024

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 திருநெறியத் தமிழர்களின் தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

🪔 "தொல் கார்த்திகை நாள்" என்று திரு ஆளுடைய பிள்ளையாரால் (அசுரத்தில், திருஞானசம்பந்தரால்) சிறப்பிக்கப்பட்ட திருநாள்.

🪔 ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது திரு கண்ணபெருமானின் திருநாளோடு இணைத்துக்கொண்டார்கள் (அசுரத்தில், தீபாவளி - அவர் மெய்யறிவு பெற்ற நாள்).

🪔 விளக்கீடு உணர்த்தும் உட்பொருட்களில் ஒன்று:

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற பொய்யறிவை ஒதுக்கி, புறமுகமாக செல்லும் நமது கருத்தை நம் மீது (நமது தன்மையுணர்வின் மீது) நிறுத்தி, நாமே அழிவற்ற, இரண்டற்ற, தன்னொளி கொண்ட மெய்ப்பொருள் என்ற உண்மையை உணர்வதுதான், "புவியின் இதயம்" என்றழைக்கப்படும் திரு அண்ணாமலையாரின் மீது ஏற்றப்படும் விளக்கை காண்பதின் பொருளாகும்.

oOo

அனைவருக்கும் இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

🪔🎉🎊☀️

கருணாகரமுனி இரமணாரியன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 27, 2023

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 நமது தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும். பூம்பாவை பதிகத்தில், "விளக்கீடு காணாமல் சென்றுவிட்டாயே?" என்று பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கிறார் காழியூர் பிள்ளை.

🪔 பரணி விளக்கு

பரணி நாள்மீனன்று காலையில், திரு அண்ணாமலையார் கருவறையிலிருந்து ஒரு விளக்கை வெளியே எடுத்துவந்து, 5 விளக்குகளை ஏற்றுவர். அன்று மாலை, இவ்வைந்து விளக்குகளையும் மீண்டும் ஒரு விளக்காக்கி, கருவறைக்குள் எடுத்துச் செல்வர்.

இதன் பொருள்: படைப்பென்பது ஐம்பொருட்களாகும் (பஞ்சபூதங்கள்). இவ்வைந்தும் உள்ளபொருளிலிருந்து (பரம்பொருள்) தோன்றியவையாகும். படைப்பின் முடிவில், ஐம்பொருட்களும் மீண்டும் தோன்றிய பொருளிலேயே ஒடுங்கிவிடுகின்றன.

🪔 திருக்கார்த்திகை விளக்கு

கார்த்திகை நாள்மீனன்று மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் (ஆரியத்தில், உச்சி) விளக்கேற்றியதும், இல்லங்கள்தோறும் விளக்கேற்றுவர்.

இதன் பொருள்: விளக்குகள் எண்ணற்றவையாக, பல வகையாக இருந்தாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்று, உயிரிகள் கோடான கோடியாக இருந்தாலும், ஊர்வன, பறப்பன, நடப்பன என பலவகையாக இருந்தாலும், அவற்றினுள் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!!

மேற்கண்ட பேருண்மைகளை திரு இடைக்காட்டுச் சித்தரோ, அல்லது, அவருக்கு பின் அங்கு வாழ்ந்த பெருமான்களோ உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கவேண்டும். எனவேதான், இத்திருவிழாவை திருவண்ணாமலையில் மிகச்சிறப்பாகவும், திருவண்ணாமலையை தொடர்புபடுத்தி ஏனைய இடங்களிலும் கொண்டாடுகிறோம்.

oOo

🌷 விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் … ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது!

விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!

🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை விளைவுகள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!

இதற்கு இரண்டு பொருட்கள் உள்ளன:

🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை 

அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, "ஊருக்காக உழை" என்று சொல்லாமல் "கோயிலில் விளக்கேற்று" என்று சொல்லியிருக்கிறார்கள்.

பயன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பயனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.

கடமையை செய். பயனை எதிர்பார்க்காதே. — திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️_

🌷 “சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா” என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை சொல்வதைக் கேட்டிருப்போம்.

சாயங்காலம் – இரவுக்கு முந்தைய – இருள் சூழ்வதற்கு முந்தைய பொழுது. குடும்பத்திற்கு இடர்பொழுது வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஓர் இல்லத்தில், கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான அன்புமிருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் குறைவிருக்குமா?

oOo

ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது தீபாவளி திருநாளோடு (திரு கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்) இணைத்துக்கொண்டார்கள்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️