Monday, June 22, 2020

காடுவெட்டி சோழ மன்னனுக்கு காட்சி கொடுத்த திரு சொக்கநாதப் பெருமான்!! 🌺🙏🏽

🌧️ நேற்று வாட்ஸப்பில் கிடைத்த காணொளியின்  சாரம்:

காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு #காடுவெட்டி #சோழன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். சிறந்த சிவபத்திமர். ஒருநாள் அவருக்கு மதுரையம்பதியான திரு சொக்கநாதப் பெருமானைக் காணவேண்டும் என்ற ஆவல் பெருகிற்று. பெருமான் குடியிருப்பதோ அவரது எதிரி நாட்டுக்குள்! தவித்துக் கொண்டிருந்த மன்னரின் கனவில் தோன்றிய பெருமான், மன்னரை மாறுவேடம் பூண்டு பாண்டிய நாட்டிற்கு சென்றுவர அறிவுறுத்துகிறார். அவ்வாறே சென்ற மன்னரை, வெள்ளப்பெருக்கு எடுத்த வைகைநதி குறுக்கிடுகிறது!!

மன்னர் செய்வதறியாமல் திகைத்து கொண்டிருந்த நேரம், இறைவனே ஒரு சித்தர் வடிவம் தாங்கி வந்து, மன்னர் ஆற்றைக் கடக்க உதவி செய்து, திருத்தலத்திற்கு அழைத்துச் செல்கிறார். நடுநிசியாகி விட்டது. ஊர் அடங்கி இருந்தது. வடக்குவாசல் கதவைத் திறந்து, மன்னரை உள்ளே அழைத்துச் சென்று, சொக்கநாதப் பெருமானை கண் குளிர காண வைத்து, திரும்பவும் வடக்கு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்து, வைகையாற்றை மீண்டும் கடக்க வைத்து, காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறார். இவ்வளவும் செய்த சித்தர், வடக்கு வாசல் கதவைப் பூட்டி முத்திரை வைக்கும்போது கயல் முத்திரையை வைக்காமல் சிவன்காளை முத்திரையை வைத்துவிடுகிறார்!

மறுநாள் காலை கதவுகளை திறக்க முயற்சிக்கும்போது இந்த மாற்றம் அறியப்படுகிறது. செய்தி பாண்டிய மன்னருக்குப் போகிறது. மன்னர் எல்லோரையும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்காததால் திரு #சொக்கநாதப் பெருமானிடமே முறையிடுகிறார். அப்போது #பெருமான் வெளிப்பட்டு, எல்லோருக்கும் காட்சி தந்து, நடந்ததை விவரித்து, அனைவருக்கும் அருள்புரிகிறார்!!

(அந்த காணொளியில் பேசியவரின் பேச்சு மிக அருமையாக இருந்ததால் காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கும். ஆனால், கதை சரியா? "பாரம்பரிய கதைகள் பாரம்பரிய கதைகளாகவே இருக்க வேண்டும்; அவற்றை ஆராயக் கூடாது." என்ற கருத்துடையவர்கள் மேற்கொண்டு படிக்கத் தேவையில்லை. நன்றி.)

oOOo

💥 அந்த காணொளி பற்றிய எனது கருத்து:

காடுவெட்டி என்ற பட்டத்திற்கு உரியவர் கரிகாலச் சோழன். இன்று தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் பகுதி அன்று பெருங்காடாக இருந்தது. அக்காடுகளை அழித்து தொண்டை மண்டலத்தை உருவாக்கினார். (இன்று காடுகளை அழிப்பதை எதிர்ப்போம். ஏனெனில், காடுகளின் பரப்பளவு குறைவு, மக்கள் தொகை மிக அதிகம். ஆனால், அன்று நிலைமை நேர் எதிர். காடுகளின் பரப்பளவு மிக அதிகம்; மக்கள் தொகையோ மிகக்குறைவு. கரிகாலன் காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 10 லட்சம் தான்!! 😍) இதனால்தான், எத்தனை படையெடுப்புகள் நிகழ்ந்த போதும், அரசாளும் உரிமையை இழக்கும் வரை, இந்தப் பகுதி சோழர்களிடமே இருந்தது. இந்தக் கதை அவர் காலத்தில் நடந்ததாக தெரியவில்லை. அவரின் நினைவாக பிற்காலத்தில் வந்த மன்னர் யாரேனும் அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கலாம்.

இது போன்ற கதைகள் வைணவத்தை எதிர்கொள்வதற்காக எழுதப்பட்டவை என்பது எனது கருத்து.

இன்று பெரும்பாலானோருக்கு இறை, கும்பிடுதல், மெய்யறிவு, வடக்கிருத்தல், பிறப்பறுப்பு என எதற்கும் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால், அன்று இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. சரியான பொருள் தெரிந்த மன்னர் திரு சொக்கநாதப் பெருமானைத் 🌺🙏🏽தேடிப் போகத் தேவையில்லை. திரு தழுவக்குழைந்தப் பெருமானே 🌺🙏🏽 அவருக்குப் போதும். மதுரையம்பதிக்கு எந்த விதத்திலும் குறையாதது கச்சியம்பதி!

மேலும், செல்லும் போது, வெள்ளப்பெருக்கு எடுத்த வைகைநதி குறுக்கிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழந்தமிழர்கள் வானிலையியல் வல்லுநர்கள். பாண்டியநாட்டின் வானிலையை மன்னர் அறிந்திருப்பார். எப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதையும் அறிந்திருப்பார். எனவே, "வெள்ளம் வரும் சமயம் தெரியாமல போய் சேர்ந்தார்" என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்தது, வடக்கு வாசல். இன்று இருக்கும் கோயில் திருமலை நாயக்கரின் காலத்தில் இறுதியானது. இந்த சமயத்தில் சோழர்களே கிடையாது. இக்கதை அதற்கு முன்னர் நடந்திருக்க வேண்டும். காடுவெட்டி சோழரின் காலத்தில் கோயில் சற்று சிறியதாக இருந்திருந்தாலும், கோயிலைச் சுற்றி மக்கள் வாழ்ந்திருப்பர். நடுநிசி நேரம், கனமான இலுப்பை மரக்கதவுகளை, யாரும் அறியாவண்ணம், ஒசையில்லாமல் திறந்து மூட முடியாது. மன்னருக்காக அவ்வளவும் செய்த இறைவன், முத்திரையை மட்டும் ஏன் மாற்ற வேண்டும்? இறைவன் என்ன சில ஆட்சியாளர்களைப் போன்று புகழ் விரும்பியா? மறு நாள் எல்லோரும் இதைப் பற்றி பேசவேண்டும், தான் காட்சி கொடுத்து தனது பெருமையை தானே பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு!

இறுதியாக. நமது மன்னர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர். வழிபாட்டிற்கு வந்த எதிரிக்கும் வழி கொடுத்தனர்.  #வரகுணப் #பாண்டிய #மன்னன் #திருக்கைலாயக் #காட்சி கண்டது #திருவிடைமருதூர் என்னும் சோழநாட்டுத் திருத்தலத்தில். இதன் பிறகு அவர் அந்த திருத்தலத்திற்கு பல திருப்பணிகளை செய்துள்ளார். அச்சமயம் பல்லவர்-சோழர்களின் கைகளே ஓங்கியிருந்தது.

ஒரு சமயம், திரைக்கதையையும் உரையாடலையும் மட்டும் நம்பி திரைப்படமெடுக்கும் ஒரு இயக்குனர், தனது படத்தில் கவுண்டமணியைச் சேர்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், "என்ன செய்வது? இன்று குத்துப்பாட்டு, கவுண்டமணி காமெடி போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் படங்கள் வருவதில்லை. அப்படி எடுத்தால், அவற்றை வினியோகஸ்தர்கள் வாங்குவதில்லை. எனவே, கவுண்டமணியைச் சேர்த்தேன்."

இது போன்றொரு நிலை தான் சைவத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது என் கருத்து. சரக்கில்லாததால், திவ்ய அலங்காரம், பெரிய நாமம், விஸ்வரூபம், லட்டு, வடை, தோசை, இட்லி, பக்திரசம் சொட்டும் (!?) கதைகள் என்று மக்களை மாக்களாக்கி நாம மதம் வேரூன்ற ஆரம்பித்ததால் சைவமும் சற்று இறங்கி வர வேண்டியதாயிற்று. ஒரு விதத்தில் இது பரவாயில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரே நாமம் இல்லாமல், "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா!" கூட்டமோ, குட்டிச்சுவற்றிற்கு முன் பஸ்கி எடுக்கும் கூட்டமோ இருந்திருந்தால்... 🤢🤮🤒

oOOo

ஆன்மிக கதைகள், உவமைகள் எல்லாம் மக்களின் நற்சிந்தனையைத் தூண்ட வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும் (எனில், வளர்த்த மகளை மணப்பதல்ல 👊🏽; பொய் பொருள்களிலிருந்து மெய்ப்பொருளை பிரித்தறிவது). ஒப்புவித்து வாழும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். தீயதை எதிர்த்துப் போராடும் மனவலிமையை பெருக்க வேண்டும்.

நமது #பழம் #பெரும் #தலங்கள் #யாவும் #மாமுனிவர்களின் #சமாதிகள்! 🌺🙏🏽 மெய்யறிவு பெற அவர்கள் கண்டுணர்ந்து அறிவித்த வழிகளை பெயர்களில், உருவங்களில், தலவரலாறுகளில், திருவிழாக்களில் என பல இடங்களில் பதிவிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். காடுவெட்டி சோழ மன்னர், "#தழுவக்குழைந்தப் #பெருமான் - #காமாட்சி #அம்மன்" என்ற பெயர்களை ஆராய்ந்திருந்தாலே போதும். மதுரையை நோக்கி ஓடத் தேவையில்லை. இவ்வாறே, மதுரையில் இருப்போர், "#கால் #மாறி #ஆடிய #தலம்", "#மீனாட்சி #அம்மன்" என்ற பெயர்களை ஆராய்ந்தாலே போதும். வேறெங்கும் போகத் தேவையில்லை.

ஒரு முறை, #பகவான் திரு #ரமண #மாமுனிவரை 🌺🙏🏽 சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். அவரிடம் பேசும் போது, "கப்பல், தொடரி, மாட்டுவண்டி என பயணம் செய்து வந்தது உனது உடல். நீ எங்கும் போகவில்லை. நீ அப்படியே தான் இருக்கிறாய். இவைதான் திரைப்பட காட்சிகள் போல் உன் முன்னே நகர்கின்றன." என்று கூறினார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment