Tuesday, June 2, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #34: மதராசன், தக்கனார் வேள்வி - சிறு விளக்கம்

பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த
வெற்றி மதராசன் வேகவே - உற்று
விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள்
அழித்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #34

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

காமனை எரித்தது மற்றும் தக்கனை அழித்தது என இரு உருவகக் கதைகளை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 இந்த பாடலில் குறிப்பிடுகிறார். ஆம். இவை "உருவகக்" கதைகளே! உண்மையில் நிகழ்ந்தவை அல்ல.

🔸#இமையோர் - #இமையார் - வானவர் 

உடனே, "தேவர்களுக்கு இமைகள் கிடையாது. அல்லது, நம்மைப் போல அவர்களுக்கு இமைகள் திறந்து மூடாது. அவர்களுக்கு பசி, தூக்கம் கிடையாது. கால்கள் நிலத்தில் பதியாது." என்றெல்லாம் படித்த பிட்டுகள் நினைவுக்கு வரும். 😁 இவையெல்லாம் உண்மையே. ஆனால், தேவர்கள் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரும் உருவங்கள் தாம் தவறு. இவ்விடத்தில், இமையார் என்பது நிலைபேற்றை அடைந்தவர்களைக் குறிக்கும். திரையில் தோன்றும் காட்சிகள் உண்ணும், உறங்கும், பயணிக்கும், இமைக்கும். ஆனால், திரை உண்ணாது, உறங்காது, பயணிக்காது, இமைக்காது. என்றும் எங்கும் எல்லாமும் ஆகியுள்ள சிவப்பரம்பொருளுக்கு இவை எப்படி பொருந்தும்?

🔸வெற்றி #மதராசன் வேகவே உற்று விழித்தமலை

மதராசன் - #காமன். காமத்தை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. எனவே, "வெற்றி" என்ற பட்டம். சிவபெருமானுக்கு ஆசையை உண்டாக்க, காமன் மலரம்பை தொடுத்து, இதனால் கோபமடைந்த பெருமான் காமனைப் பார்வையாலே எரித்ததை "மதராசன் வேகவே உற்று விழித்தமலை" என்று பாடுகிறார். இங்கு காமம் தோற்றதால் காமன் எரிக்கப்பட்டதாக சித்தரித்திருக்கிறார்கள். இதுவே காமம் வெல்லும் போது...? சிவபெருமானை வென்ற காமத்தை சைவத்தில் அன்னை காமாட்சி என்றும், வைணவத்தில் "வெண்ணைத் திருடிய கண்ணன்" என்றும் சித்தரிப்பார்கள்! ☺️

எல்லா பற்றுகளும், வினைகளும் தீர்ந்த பின்னர் தான் சமாதியடைய வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில், அவரவர் வினைப்படி, முன்னரே சமாதி நிலை கிட்டும். ஆனால், அதில் நிலைத்து நிற்க முடியாது. மாயை எனும் இறையாற்றல் நம்மை வெளியில் தள்ள பல விதங்களில் முயற்சி செய்யும். இப்படி முயற்சி செய்து தோற்ற மாயையின் வெளிப்பாடுகளை காமன், காளி என்று அழைப்பர். வெற்றி பெற்ற வெளிப்பாடுகளை காமாட்சி, வெண்ணைத் திருடிய கண்ணன் என்று அழைப்பர். எல்லாம், வினை மூட்டை காலியாகும் வரை தான். தீர்ந்து விட்டால்? காளி, காமாட்சி, கண்ணன்... யாரும் வர மாட்டார்கள். பிறகு, சதாசிவம் தான்!

அவ்வப்போது நிருவிகற்ப சமாதி கிடைத்து, இப்படி மாயையால் புறம் தள்ளப்படுவதைக் காட்டிலும், சகஜ சமாதியே சிறந்தது. உள்ளும் புறமும் இணைந்த நிலை - அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன்!! சைவம் என்ற சொல்லின் உண்மையான பொருளே உள்ளும் புறமும் இணைந்ததுதான்!!

அதென்ன, வேகவே உற்று விழித்தமலை? உற்று நோக்கி எரித்தல். எழும் எண்ணங்களைக் கவனியாது இருத்தல். தன்மையுணர்வை விடாதிருத்தல். "ஒவ்வொரு எண்ணம் எழும் போதும், அதை கவனியாமல் (உற்று நோக்காமல்) இருந்தாலே போதும். எழுந்த எண்ணம் அடங்கிவிடும் (எரிந்துவிடும்). மனமும் தனது பிறப்பிடத்திற்கு (தன்மையுணர்வுக்கு) திரும்பிவிடும்." (பகவான் திரு ரமணர் 🌺🙏🏽).

🔸#தக்கனார் வேள்விதனை முன்நாள் அழித்தமலை

இதுவும் மேற்சொன்ன உருவகக்கதை போன்றுதான். இது போன்ற உருவகக்கதைகள் யாவும் பெரும்பாலும் நிலைபேறு, அதை அடைதல், அதில் இருத்தல் மற்றும் அதை இழத்தல் என்ற 4 செய்திகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இங்கு கவனிக்க வேண்டியது "முன்நாள்" என்ற சொல்லைத்தான். இக்கதை வெகு காலத்திற்கு முன் எழுதப்பட்டது. நம் பாரத கலாச்சாரத்தின் அடிப்படைகள் இந்த கதையில் உள்ளன. நமது திருமுறைகளிலும், திருமறைகளிலும் பல இடங்களில் இந்த கதை அல்லது இதைப் பற்றிய குறிப்பு வருவதை காணலாம்.

எல்லாம் சரி. தக்கனின் வேள்வி என்றால் என்ன என்று கேட்போருக்கு... நாம் வாழும் வாழ்க்கையே தக்கனின் வேள்வி! 😊 தக்கனும், ஆமை திருவிறக்க கதையில் (கூர்ம அவதாரம்) பாற்கடலைக் கடைய பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பும் ஒன்று தான். நமது மூச்சுக்காற்றே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment