Tuesday, June 30, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #50 - புன்தலை - சிறு விளக்கம்

புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய
நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றும்ஒரு
நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய்
ஆளுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #50

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய

புன் தலை - புள் தலை - புள் போன்று முடி உள்ள தலை - பன்றித் தலை. திருமால் பன்றிப்பெருமாளாக இறங்கி வந்து, மண்ணைப் பறித்து, ஒளிப்பிழம்பாக நிற்கும் திரு அண்ணாமலையாரின் (லிங்கோத்பவ உருவம்) திருப்பாதங்களைக் காண முயற்சித்து தோல்வியுற்ற கதை. இது சைவர்களுடையது. இக்கதையில்,

🔹பன்றிப்பெருமாள் - நமது ஆணவம்

🔹மண் - நமது உடல்

🔹மண்ணைப் பறித்தல் - அக முகமாக தேடுதல்

🔹அண்ணாமலையார் - பிறப்பும் இறப்பும் அற்ற மெய்ப்பொருள் (அடிமுடி காணா அண்ணாமலை)

இனி, வைணவக் கதை. நான்முகனின் மூக்கிலிருந்து ஒரு சிறு பன்றி தோன்றும். பின்னர், அது வானளாவ வளரும். வளர்ந்த பன்றிப் பெருமாள், கடலுக்குள் சென்று, இரண்யாட்சனுடன் ஆயிரமாண்டுகள் போரிட்டு, முடிவில் அவனைக் கொன்று, பூமியன்னையை மீட்டு வருவார்.

🔹நான்முகன் - மெய்யாசிரியர்

🔹சிறு பன்றி - ஆசிரியரிடமிருந்து வெளிப்படும் அறிவுரை. எ.கா.: "நான் யார்?" - பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. முதலில் இரு சொற்களாக மட்டும் தோன்றும் இந்த அறிவுரை, பின்னர் நம்மை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும்!! சிறு பன்றி வானளாவ வளர்ந்தது என்பது இதுவே.

🔹இரண்யகசிபு - இக்கதையில், நமது உடல். சிங்கப் பெருமாள் கதையில், ஆணவம்.

🔹இரண்யாட்சன் - நம் புறமுகக் கண்ணோட்டம்.

🔹கடல் - இங்கு, நமது அறியாமை இருள். மீன் திருவிறக்க கதையில், நமது உடல். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக அணுக வேண்டும். ஒப்பிட்டுப் பார்த்தால் குழப்பமடைவோம்.

🔹பூமியன்னை - "நாமே உள்ளபொருள் (மெய்ப்பொருள்)" என்ற மெய்யறிவு.

மொத்தக் கதையும் நமக்குள் நிகழ்கிறது. பல்லாயிரம் பிறவிகளாக நாம் வளர்த்து வைத்திருக்கும் புறமுகக் கண்ணோட்டத்தை (நாம் ஒர் உடல், நாமிருப்பது பூகோளத்தில், ...) மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான செயலல்ல. பல காலம் போராட வேண்டியிருக்கும். இதைத்தான், "பெருமாள் 1000 ஆண்டுகள் போரிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் படி, மெய்யாசிரியரிடமிருந்து பெற்று வரும் அறிவுரை, நமது புறமுக கண்ணோட்டத்தை அழித்து, மெய்யறிவை வெளிக்கொணருகிறது. இது தவறு.

எவ்வளவு போரிட்டாலும் நமதுண்மையை நாம் உணரமுடியாது. இறையாற்றல் தான் நாம் யாரென்று நமக்கு உணர்த்தியருள வேண்டும். "ஒரு முறையாவது தனது உண்மையை உணர்ந்தால் தான் மனமடங்கும்" என்பது பகவானது வாக்கு. இதை சைவக் கதையில் சரியாக பதிவு செய்திருப்பார்கள். வெகு காலமாக, ஆழமாக மண்ணைப் பறித்தும் பெருமாள் தோற்றுப் போவார். தனது இயலாமையை அவர் உணர்ந்தவுடன், சோதிப் பிழம்பிலிருந்து இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவார்.

🔹மண்ணைப் பறித்தல் - நம்முள் அகமுகமாக தேடுதல். வடக்கிருத்தல்.

🔹தோல்வியை ஒப்புக் கொள்ளுதல் - இயலாமையை உணர்தல் - ஆணவம் அடங்குதல்.

🔹இறைவன் தோன்றுதல் - மெய்யறிவு வெளிப்படுதல். காலம் கனிந்தவுடன், இறையாற்றல் நமது உடலையும் உலகையும் சிறிது நேரம் மறைத்துவிடும். உடலும், உலகமும் மறைந்த அந்த கணம் நாம் யாரென்று உணர்ந்து விடுவோம். இதுவே மெய்யறிவு!!

(பல கதைகளில், "இறைவன் தோன்றி, அருள் புரிந்துவிட்டு மறைந்தார்" என்று தான் படித்திருப்போம். "தோன்றிக் கொண்டேயிருந்தார்" என்று படித்திருக்கமாட்டோம்! "தோன்றி மறைந்தார்" என்பது உண்மையில், "நமது உடலையும் உலகையும் சிறிது நேரம் மறைத்துவிட்டு, பின்னர், மீண்டும் தோற்றுவித்தார்" என்பதாகும்!! )

மீண்டும்... "புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய" எனில் "எவ்வளவு பாடுபட்டாலும், போராடினாலும் அகந்தையால் அடைய முடியாத" என்பதாகும்.

🔸நன்றிதரும் பொன்னடியை

மெய்யறிவு கிடைத்தவுடன் ஒரு பேரமைதி உண்டாகும். பெருமகிழ்ச்சி தோன்றும். குளுமைத் (சீதை) தோன்றும். குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து நன்றி உணர்ச்சியும் தோன்றும் என்கிறார். கடும் வெயிலில் அலைந்து விட்டு, ஒரு குளுமையான நிழல் பகுதிக்கு வந்தவுடன் அப்பாடி/அம்மாடி/கடவுளே என்றிருக்கும். அந்த உணர்வில் நன்றியும் கலந்திருக்கும். இது போன்றொரு உணர்வு, மெய்யறிவு வெளிப்பட்டவுடன் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, "நன்றி தரும்" என்ற சொற்களாக வடித்திருக்கிறார் ஆசிரியர்.

🔸அலை வாராமல் - எண்ணங்கள் தோன்றாமல்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment