Thursday, June 11, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #40: திருவைந்தெழுத்து - சிறு விளக்கம்

அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #40

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸#திருவைந்தெழுத்து

அருளாளர்கள் பலராலும் போற்றப்பட்ட ந, ம, சி, வா, ய ஆகிய 5 திருவெழுத்துகள். திருஞானசம்பந்தர் 🌺🙏🏽 பாடிய கடைசி திருப்பதிகம் (காதலாகி கசிந்து...) முடிவதும் இவற்றுடன் தான். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று மெய்ப்பொருளின் பெயரே இவ்வைந்தெழுத்துதான் என்று முடிக்கிறார்!

ந - இல்லை
ம - நான்
சி - அழியாதது. மாறாதது. தேயாதது. வேறெது? மெய்ப்பொருள்.
வா - வீசும்
ய - ஒளி

பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் மெய்ப்பொருளின் வெளிப்பாடே. 🌺🙏🏽

தொடர்ந்து சிந்திப்பதால் கிடைக்கும் பயன்: ஆணவம் அழியும். ஒப்புவித்து வாழும் மனப்பான்மை பெருகும். இறுதியில், நிலைபேற்றில் முடியும்.

தமிழிலும் சரி, ஆரியத்திலும் சரி இவ்வைந்தெழுத்து சொல் என்று அழைக்கப்படுவதில்லை. ஐந்தெழுத்து என்றே அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன பொருள் தவிர, இவ்வெழுத்துகளுக்கு பல பொருள்கள் உண்டு. இவை ஐம்பூதங்களையும் குறிக்கும். இறைவனது ஐந்தொழில்களையும் குறிக்கும். சற்று மாற்றினாலும் பொருள் முற்றிலும் மாறிப்போகும்.

🔹#சிவாயநம - மேற்கண்ட நமசிவாய வரிசைக்கு எதிர்பொருளைக் கொடுக்கும். "எல்லாம் நீயே" என்பது போய் "எல்லாம் பொய். நான் மட்டுமே மெய்." என்ற பொருளைக் கொடுக்கும். பகவானும் 🌺🙏🏽, பல இடங்களில், "நீ காண்பதும் கேட்பதும் பொய். நீ மட்டுமே மெய்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

"சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்பது புகழ்பெற்ற வசனம். தானே தானாய் இருப்போரை யார்தான் எதுதான் என்னதான் செய்துவிடமுடியும்? எனவே, அபாயம் ஒருநாளும் இல்லை!!

🔹#சிவசிவ - முதல் சிவ மெய்ப்பொருளையும், இரண்டாவது சிவ அதிலிருந்து வெளிப்பட்ட அனைத்தையும் குறிக்கும். இரண்டுமே சமமானது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும் முழுமை முழுமையாகவே இருக்கிறது என்ற திருமறைச் சொற்றொடருக்கு சமமானது. அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன் போன்ற இறையுருவங்கள் இதன் உருவ வடிவம்.

🔹சிவ - அழியாதது. மாறாதது. தேயாதது. வலிமையானது. நல்லது.

🔹சி - மெய்ப்பொருள் மட்டுமே. "நான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத இடமே மெளனம் (மெய்ப்பொருள்) எனப்படும்" என்கிறார் பகவான்.

oOOo

அக்கரம் அதோர் எழுத்தாகும் இப்புத்தகத்தோர்
அக்கரமாம் அஃதெழுத வாசித்தாய் - அக்கரமாம்
ஒரெழுத்து என்றும் தானாய் உள்ளத்தொளிர்வதாம்
ஆரெழுத வல்லார் அதை

இப்பாடல், யோகி ராமைய்யா என்ற அன்பர் கேட்டுக்கொண்டதற்காக, அவரது காகிதப் புத்தகத்தில் பகவான் எழுதிக் கொடுத்தது. #அக்கரம் என்பது #அக்ஷரம் என்ற ஆரிய சொல்லாகும். இதற்கு எழுத்து & அழியாதது என்று 2 பொருள்கள் உள்ளன.

பொருள்: அக்கரம் என்பது ஓர் எழுத்தாகும். இந்த காகிதப் புத்தகத்தில் நான் எழுதிய அக்கரத்தை வாசித்தாய். ஆனால், என்றும் அழியாத ஓர் அக்கரம் எல்லோர் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. யாரால் அதை எழுத முடியும்? (யாராலும் எழுத முடியாது. அதுவாய் ஆகத்தான் முடியும் என்பது கருத்து.)

பகவான் குறிப்பிடும் அழியாத அவ்வெழுத்து எது? மேற்கண்ட 'சி' என்ற திருவெழுத்து உணர்த்தும் மெய்ப்பொருளே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment