Showing posts with label இராமன். Show all posts
Showing posts with label இராமன். Show all posts

Sunday, November 24, 2024

"கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநர்" என்ற கருத்தின் உட்பொருள்


இராமாயணம் என்பது மெய்யியல் குறியீடுகளின் தொகுப்பு என்ற உண்மை தெரிந்திருந்தால், இந்த ஆளுநர் கேலிக்கு உள்ளாகியிருப்பாரா? இவரது "கற்பித" அறியாமைக்கு யார் பொறுப்பு? 😏

oOo

மொத்த இராமாயணத்தை சுருக்கினால்: உடலின் (இராவணன்) தொடர்பு ஏற்பட்டவுடனேயே மனம் (இராமன்), தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால், மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல்- வையகக் காட்சியை பற்றியும் தெரிந்து கொண்டு அடங்குகிறது. அடங்கியவுடன், குளுமையை / நிம்மதியை திரும்பப் பெறுகிறது.

oOo

இராமாயணம் என்பது எம்சியு (மார்வெல் சினி மேடிக் யுனிவர்ஸ்) போன்றொரு கதைத் தொகுப்பாகும். ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியே அணுக வேண்டும். ஓரிடத்தில், இராமன் என்பது மனதை குறித்தால், இன்னொரிடத்தில் உள்ளபொருளை குறிக்கும். பொதுவாக,

🔸 இராவணன் - உடல்
🔸 இராமன் - மனம்
🔸 இலக்குவன் - அறிவு
🔸 சீதை - நிம்மதி

இராவணன் என்பது உடலெனில், அவரது உடன்பிறப்புகள்...

🔸 கும்பகர்ணன் - விழிப்புணர்வு
🔸 விபீடணன் - வலு

🌷 கும்பகர்ணன் - 6 மாதம் தூக்கம், 6 மாதம் விழிப்பு

இன்று, பல மணி நேரம், இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். அன்று, கதிரவன் தோன்றுவதில் தொடங்கி, கதிரவன் மறைவதோடு நாள் முடிந்துவிடும். பின்னர், ஓய்வு & உறக்கம். அதாவது, அரை நாள் உழைப்பு; அரை நாள் ஓய்வு. இதையே, "கும்பகர்ணன் 6 மாதம் தூங்கினார். 6 மாதம் விழித்திருந்தார்." என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 கும்பகர்ணன் - கருவிகள்

கருவி என்றதும் கத்தி, கத்திரிக்கோல், திருப்புளி என்று எண்ணிக்கொள்வோம். ☺️ இங்கு, கருவி என்பது நமது அறிவு, மனம், கை-கால் போன்ற உடலுறுப்புகளை குறிக்கும். விளைவுகளை ஏற்படுத்தும் யாவும் கருவிகள் என்று கொள்ளலாம்.

எ.கா.: இவ்விடுகையை எழுதத்தூண்டியதால் ஆளுநரின் பேச்சு ஒரு கருவியாகிறது. இவ்விடுகை சில விளைவுகளை ஏற்படுத்துமானால் இதுவும் ஒரு கருவியாகும்.

விழித்திருக்கும்போது, நமது சொல், செயல், சிந்தனைகளைக் கொண்டு பல விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதையே "கும்பகர்ணன் பல கருவிகளை படைத்தார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷கும்பகர்ணன் - தொழிற்நுட்ப வல்லுநர்

நமக்கு வாய்த்திருக்கும் கருவிகளையும் (அறிவு, மனம், உடல்), நமக்கு வந்துசேரும் மற்றவரது கருவிகளையும் (சொல், செயல் & எழுத்து) கொண்டு பல கருவிகளை (விளைவுகளை) நாம் படைக்கிறோம் என்பதையே "கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநராக விளங்கினார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 விபீடணன் - இராமன் பக்கம் வருதல்

இளம் வயதில் உடல் வலுவாக இருக்கும். ஆண்டுகள் உருண்டோடி, உடல் தளரத் தொடங்கியதும், மனம் வலுப்பெறத் தொடங்கும். 

அல்லது, இறையருளால், இளம் பருவத்திலேயே மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, நல்லறிவு கிடைத்ததும், உடலைப் பேணுவதை குறைத்துக் கொண்டு, மனதை சீர் செய்யத் தொடங்குவோம். இதனாலும் மனம் வலுப்பெறத் தொடங்கும்.

இவ்வாறு, உடல் வலுவிழந்து, மனம் வலுப்பெறுவதையே, "விபீடணன் (வலு) இராவணனிடமிருந்து (உடல்) இராமன் (மனம்) பக்கம் வந்தான்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 மொத்தத்தில், இராமாயணம் என்பது பிறப்பு முதல், மெய்யறிவு அடையும் வரையிலான நமது வாழ்க்கைப் பயணமாகும்!

oOo

இராமாயணத்தை வரலாறு / உண்மை என்ற கண்ணோட்டத்தில் அணுகினால்... "மோகன்தாசும், ஜவகரும் போராடி, நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள்", "இராமசாமி சாதியை ஒழித்தான்", "தட்சிணாமூர்த்தி தமிழர்களுக்காக உழைத்தான்" என்ற வகையை சேர்ந்ததாகும்!! 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, April 24, 2024

அயோத்தியின் பட்டை நாமங்கள்!!


|/ இராமனுக்கு பருத்தியாடை


தெலுங்கர் இராமானுஜர், 8-9 நூற்றாண்டுகளுக்கு முன்னர், "மார்கழி திங்கள் குளிரிலிருந்து திருவரங்கம் பெருமாளை காக்க வெந்நீரால் குளிப்பாட்டுவோம்; கம்பளியாடை போர்த்துவோம்" என்று தொழிலை தொடங்கிவைத்தார். இன்றுவரை அந்த நுட்பத்தின் (டெக்னிக்) "மவுசு" குறையவில்லை! 😏 அதன் தொடர்ச்சிதான், "இராமனுக்கு வெயில் நேரத்தில் பருத்தியாடை அணிவித்தல்" என்பது.

மண்சிலைக்கு (திருவரங்கம் பெருமாள்) குளிருமா? கற்சிலைக்குதான் (அயோத்தி இராமன்) வியர்க்குமா?

திருவரங்கமாவது உயிர்ப்புள்ள திருக்கோயில். பெருமாள் சிலைக்கு கீழே, திரு சட்டைமுனி சித்தர் திருநீற்று நிலையிலுள்ளார். அயோத்தியிலிருப்பது உயிரற்ற கோயில். அங்கு எப்பெருமானும் திருவிடம் (அசுரத்தில், சமாதி) கொள்ளவில்லை. அப்படியே ஒரு பெருமான் திருவிடம் கொண்டிருந்தாலும், மேலே வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சிலைக்கு செய்யும் எதுவும், கீழேயுள்ள பெருமானை பாதிக்காது.

பருவத்திற்கேற்ற ஆடையணிவிப்பது என்பது மக்களை கவர்ந்திழுப்பதற்கான ஒரு விற்பனை நுட்பம் மட்டுமேயாகும். அதை காண்பதால் அன்பர்களுக்கு ஒரு மெய்யியல் (அசுரத்தில், ஆன்மிகம்) பயனும் கிட்டாது.

|/ இராமன் மீது படும் பகலவனின் ஒளி


அன்று, பகலவனின் நகர்வைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு கட்டடங்களை கட்டி, ஒரு குறிப்பிட்ட நாளில் / குறிப்பிட்ட வேளையில் பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது படும்படி செய்தார்கள். இன்று, கண்ணாடி & ஆடிகளை (லென்ஸ்) பயன்படுத்தி, குழாய்கள் வழியாக ஒளியை, தேவையான இடத்திற்கு கொண்டுவருகிறார்கள். எது கடினமான தொழிற்நுட்பம்? எதற்கு அதிக மூளைத்திறன் வேண்டும்? எது பெரிதும் போற்றப்பட வேண்டும்?

மேலும், பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது பட்டாலென்ன? படாவிட்டாலென்ன? இதற்கும் மெய்யியலுக்கும் என்ன தொடர்புள்ளது? 

|/ இராமனுக்கு 1 மணி நேரம் ஓய்வு


அசுரர்கள் ஒரு கற்சிலைக்கு உயிரூட்டினார்கள் என்பது ஒரு மடங்கு நகைச்சுவை எனில், பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருடைய 5 வயது ஆதனை (அசுரத்தில், ஆன்மா) பிடித்து, அக்கற்சிலைக்குள் செலுத்தியுள்ளனர் என்பது பல மடங்கு நகைச்சுவையாகும்!! 😄 பராமரிப்பு பணிகளுக்காக இவர்களுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படலாம். அதை இராமனின் தலையில் சுமத்திவிட்டார்கள்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் உடல் இறக்கும் போது அதற்கு 70 வயது. பகவான் நிலைபேற்றினை அடைந்தவர். இன்றும் அங்கேயே இருப்புவர். இனியும் அங்கேயே இருப்பார். அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கும் அண்ணலான அவரது அருளைப் பெறும் நல்வினைப்பயன் நமக்கிருந்து, இன்று அவரை வேண்டினோம் என்றால், 144 ஆண்டுகள் முதிர்ச்சி கண்ட ஆதனாக வந்து ஆட்கொள்வார். 5 வயது ஆதனாக மீண்டும் வரமுடியாது.

இதே கணக்கு இராமனுக்கும் பொருந்தும் - அவரும் நிலைபேற்றினை அடைந்தவராக இருந்தால்!

oOOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, April 23, 2024

பொருள் புரியாமல் இறைபெயர்களை உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!


எனக்குத் தெரிந்த நபரொருவர், பின்வரும் அசுரச்செய்யுளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருட்டிக் கொண்டிருப்பார்: 

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களின் ஒரு பகுதியை இச்சிறு இடுகையாக மாற்றியுள்ளேன்.

oOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்தான் பயனளிக்கும் என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும்.

🌷 நாராயணன் -> நீராய் இருப்பவன். நீர் -> பாற்கடல் -> மாறிக்கொண்டேயிருப்பது -> நமதுடல். நமதுடலாக இருப்பவன்.

🌷 வாசுதேவன் -> வசுதேவனின் மகன். வசு - ஒளி, நெருப்பு போன்ற 8 பொருட்களை குறிக்கும். அதாவது, நாம் காணும் யாவுமானவன்.

🌷 விஷ்ணு - எங்கும் நிறைந்திருப்பவன். காட்சிகள் தோன்றாத பகுதியென்று வையகத்தில் ஏதேனுமுள்ளதா? இல்லையல்லவா? எனவே, எங்கும் நிறைந்திருப்பவன்.

நாம் இவ்வுடல் என்பது பொய்யறிவு. நாம் இவ்வுடலல்ல என்பது மெய்யறிவு. இந்த மெய்யறிவை விடாது இறுகப் பற்றுவது நிலைபேறு (அசுரத்தில், சமாதி). இந்நிலையை அடையும்போது, மேற்கண்ட யாவும் பொய்த்துப் போகும். காட்சிகள் தோன்றாது. தோன்றினாலும் நம்மை பாதிக்காது. மாற்றம் என்பது இருக்காது. அதாவது, நாராயணனாகவும், வாசுதேவனாகவும் & விஷ்ணுவாகவும் இருக்கும் மாயைக்கு அங்கு வேலையிருக்காது.

✨ காண்பான் - சிவம் - நாம்.
✨ காணப்படுவது - அன்னை / பெருமாள் - நம்மை தவிர மீதமனைத்தும்.

நம்மை நாமுணர, நாம் செய்ய வேண்டியதெல்லாம்: சும்மா இருத்தலே!!

oOo

இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர கண்ணாடி வேண்டுமோ?

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

இந்த "நெத்தியடி" அறிவுரையை கேட்டவுடன் அவரது மனம் அமைதியடைந்தது! 😌

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Friday, February 2, 2024

யார் நல்லவர்? இராமனா இராவணனா?


திரு இராமேச்சுரத்தை சுற்றியுள்ள பல திருக்கோயில்களில், "[பேரரசர்] இராவணனை கொன்றதினால் தன்னை பிடித்துக்கொண்ட 'பிரம்மஹத்தி' (மனநோய்) விலகுவதற்காக, இராமன், இங்கு சிவலிங்கம் நிறுவி, வழிபட்டார்" என்று எழுதி வைத்திருப்பார்கள்...


> பிரம்மம் - உள்ளபொருள்

> பிரம்மஹத்தி - உள்ளபொருளை உணர்ந்த மெய்யறிவாளரை (பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றோரை) கொல்பவன்.


எனில், இராவணன் ஒரு மெய்யறிவாளராகிறார்! அவரை கொன்றதால் இராமன், பிரம்மஹத்தி ஆகிறார்!!


ஒரு மெய்யறிவாளர் பிறன்மனை நோக்குவாரா? நோக்கமுடியுமா? உண்மையில், யார் நல்லவர்? யார் தூற்றப்படவேண்டியவர்?


வடக்கிலிருந்து வந்த அத்தனையுமே புருடா, பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நயவஞ்சகம், நச்சு... இராமன் கதைமட்டும் விதிவிலக்காகிவிடுமா?


மெய்யியல் அடிப்படையில், இராமன் என்பது மனம், இராவணன் என்பது உடல் & இராமாயணம் என்பது மனம் அடங்குதல். வரலாற்று அடிப்படையில்... 😏


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Sunday, January 28, 2024

திரு இரமண நிலையத்தில் இராமன் வழிபாடு நடந்துள்ளது!! 😔


மெய்பொருளுக்கு உள்ளபொருள் என்று பெயரிட்ட மாமுனிவரின் நிலையத்தில், அல்லாத பொருளுக்கு வழிபாடு!! 😔

💥 பகவான், தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியது - அசைவற்ற நிலை (நிலைபேறு).

இராமனின் வடிவம் உணர்த்துவது - அசைவு (அலைபேறு).

பகவானின் நிலைப்பாட்டிற்கு நேரெதிர் நிலைப்பாட்டினை உணர்த்தும் ஒரு வடிவத்தை, அவரது நிலையத்தில் வைத்து, வழிபடலாமா?

💥 பௌத்தம் போற்றும் சூன்ய நிலையை பற்றிய உரையாடலின் போது, "அது இருளல்ல. அவ்விருளை காண்பவன் ஒருவன் இருக்கிறான். அதுவே ஒளி." என்று அருளினார். எனில், இருளை போற்றும் / முன்வைக்கும் வைணவத்தின் இறைவடிவத்தை, ஒளியை மட்டும் போற்றியவரின் திருக்கோயிலில் வைத்து, வழிபடலாமா? (வைணவத்தின் வேர் அம்மன் வழிபாடாகும். வைணவர்களின் வேர் பௌத்தமாகும்.)

💥 இராமனின் வடிவத்தை 2 வகையாக ஆராயலாம்:

🔸 கறுப்பு உடல் & அவ்வுடலை போர்த்திய காவி / மஞ்சள் / வெள்ளை ஆடை

பொருள்: இருளிலிருந்து ஒளி பிறந்தது. அல்லது, இருளுக்குள் ஒளி அடக்கம்.

🔸 மேல் பாதி கறுப்பு நிறம் & கீழ் பாதி காவி / மஞ்சள் / வெள்ளை நிறம்

பொருள்: இருள் மேலானது. ஒளி கீழானது.

அறிவிலிருந்து அறிவற்றது பிறந்ததா? அறிவற்றதிலிருந்து அறிவு பிறந்ததா? அறிவு மேலானதா? அறிவற்றது மேலானதா?

"நாமுலங் காண்டலால்..." என்ற செய்யுளை அருளியவரின் நிலையத்தில் வைப்பதற்கே ஏற்புடைய வடிவமில்லாத போது, எப்படி அதற்கு வழிபாடு நடத்தலாம்?

💥 இராமன் என்ற வடிவத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் யாவற்றையும் (பெருமாளின் திருவிறக்கம், இன்னாரின் மகன், இன்னார் உடன்பிறந்தோர், இராமன் என்ற பெயர்....) நீக்கிவிட்டுப் பார்த்தால், அது அன்னை மாயையின் ஆண் வடிவமென்பது புலப்படும். எதை காமாட்சி, வெண்ணெய் திருடிக் கண்ணன் என்றழைக்கிறோமோ, அதுவே இங்கு வில்லேந்திய இராமனாகிறது. இராமனின் அம்பு... பற்றுகளை தோற்றுவிக்கும் கணையாகிறது!

பற்றுகளை அறுத்தெறிவதற்கு வழிகாட்டிய பெருமானின் நிலையத்தில், பற்றுகளை தோற்றுவிக்கும் வடிவங்களை வைத்து, வழிபாடு செய்யலாமா?

oOo

இராமனும் கண்ணனும் அவர்களுடைய இனமாக இருக்கலாம். அல்லது, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களாக இருக்கலாம். அல்லது, இம்மண்ணின் மைந்தர்கள் படைத்ததை, அவர்கள் தங்களுடையதாக்கி இருக்கலாம். எப்படியானாலும், இன்று வரை, இராமனும் கண்ணனும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். எனில், அவரவர் இல்லங்களில், அல்லது, வேறு ஏதாவதொரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்து கொள்ளலாம். திரு இரமண நிலையத்தில் வைத்து, வழிபாடு செய்வது தவறாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 26, 2024

இராமாயணம் = மனம் அடங்குதல்!!


🌷 படத்தின் மேல் பகுதி:

> மனதின் (பெருமாளின்) அடிப்படைத் தன்மை அசைவாகும். அத்தன்மையை மனதிற்கு வழங்குவது இறைவனாகும்!

> உள்ளபொருள் (நமது தன்மையுணர்வு) தன்னொளி கொண்டது. சிவந்த நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள். மனம் தன்னொளியற்றது. கருமை நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

🌷 படத்தின் நடுப்பகுதி:

> நீரோட்டம் - வையகம்.

> இலங்கை - நீரோட்டத்திலுள்ள திட்டு (அசுரத்தில், தீவு). "நான் இன்னார்" என்ற எண்ணமுள்ள மனிதன்.

மெய்யறிவில் நிலைபெற்றிருப்போர் (மெய்யறிவாளர்கள்) தங்களை படைப்பிலிருந்து வேறாக உணரமாட்டார்கள். ஏனையோர் தம்மை வேறாக, தனிமனிதர்களாக உணர்கிறாரகள். இப்படிப்பட்டவர்களையே இலங்கை என்ற சொல் குறிக்கிறது.

> குரங்குப்படை - எண்ணங்கள்.

மேற்கண்ட "இலங்கை" நிலையிலிருப்போரையே - அதாவது, தன்னை தனிமனிதனாக உணர்பவரையே - எண்ணங்கள் தாக்குகின்றன. மெய்யறிவாளர்களை குரங்குப்படை தாக்காது.

🌷 படத்தின் கீழ் பகுதி:

> இராவணனின் 10 தலைகள் - ஐம்புலன்கள் & ஐந்து உறுப்புகள் - உடல்.

> இராமன் - மனம்.

> உடலின் தொடர்பு ஏற்பட்டவுடனேயே, மனம் தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால் மெய்யறிவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல் & வையகத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அமைதியடைகிறது (சீதையை மீண்டும் பெறுதல்).

oOo

இராமாயணம் போன்ற உவமைகள் மிகுந்த கதையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ஓரிடத்தில் இராமன் மனதை குறிப்பார். இன்னொரு இடத்தில் தசரதன் மனதை குறிப்பார். வேறோரிடத்தில் இராவணன் மனதைக் குறிப்பார். இன்னுமொரு இடத்தில் சீதை மனதை குறிப்பார். ஒவ்வொரு காட்சியையும் / நிகழ்வையும் தனித்தனியாக சிந்திக்கவேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக, வாலியின் கதையை பார்ப்போம்.

> வாலி - மனம்
> வாலி பறித்துக்கொண்ட ருமா (சுக்கிரீவனின் மனைவி) - உடல் 
> சுக்கிரீவன் - நல்லறிவு
> மறைந்திருந்து கொல்லும் இராமன் - உள்ளபொருள்
> இராமன் எய்தும் அம்பு - மெய்யறிவு

வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடக்கும் சண்டையென்பது மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டமாகும். இதே சண்டையை, திருவானைக்கா திருக்கோயிலில் சிலந்தி-யானை சண்டையாக காண்பித்திருப்பார்கள்!

மொத்த இராமாயணத்தை பொருத்தவரை இராமன் மனமெனில், இவ்விடத்தில் உள்ளபொருளாகிறார்!

இராமாயணத்தை ஒரு MCU-வாக (Marvel Cinematic Universe) வைத்துக்கொண்டால், அதில் வரும் தசரதன், இராமன், குரங்குகள் கதைகளை MCUவில் வரும் Iron Man, Thor, Dr Strange போன்ற கதைகளாக கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் கதாபாத்திரங்கள் & சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஒரே கரு தானிருக்கும். MCUவில், தீயது அழிதல்; இராமாயணத்தில், மனம் அழிதல் / மனம் அமைதியடைதல்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻