Showing posts with label விபூதி. Show all posts
Showing posts with label விபூதி. Show all posts

Tuesday, December 21, 2021

திருநீறு பூசுவதின் மெய்யியல் அடிப்படை - சிறு விளக்கம்


திருநீற்றின் 3 கோடுகள் நனவு, கனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளைக் குறிக்கும். இக்கோடுகளை பூசுவதற்கு எவ்வாறு நம் நெற்றி பற்றுக்கோடாக அமைகிறதோ, இவ்வாறே நனவு முதலான 3 நிலைகள் தோன்றி மறைவதற்கு நாம் (நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - சிவம்) பற்றுக்கோடாக அமைகிறோம்.

பூசுப்படும் திருநீறு இருந்தாலும், அழிந்தாலும் நெற்றிக்கு குறையில்லை. இவ்வாறே நனவு முதலான நிலைகள் தோன்றினாலும், மறைந்தாலும் நமக்கு எந்த குறையுமில்லை. இதை உணரவேண்டும்.

🌷 "நீறில்லா நெற்றி பாழ்" - மேற்கண்ட அறிவு இல்லாதவரின் சிந்தனையோட்டம் புறமுகமாகச் சென்று, கிடைத்தற்கரிய மனிதப்பிறவி வீணாகிவிடும்.

🌷  "திருநீற்றை சிந்தாதே / கீழே விடாதே" - அரும்பாடுபட்டு பெற்ற இறையுணர்வை (மெய்யறிவை) இழந்துவிடாதே.

oOo

ஒரு சைவர் தரித்திருக்க வேண்டிய சின்னங்கள் இரண்டு: திருநீறு & உருத்திராக்கம்.

🌷  திருநீறு 3 கோடாக பூசப்படும்போது மேற்சொன்ன பொருளைக் குறிக்கும். நெற்றி முழுதும் பூசும்போது அல்லது சிறு கீற்றாக பூசும்போது அதன் பொருள்: இந்த உலகை "எரிந்து உருக்கலையாத" சாம்பல் போன்று அவர் காண்கிறார் (அல்லது, காணவேண்டும்).

🌷 கழுத்தில் உருத்திராக்கம் அணிவதன் பொருள்: புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் மனதை, எக்கணமும் தனது தன்மையுணர்வின் மீது நிலைபெறச் செய்திருப்பவர் (அல்லது, செய்யவேண்டும்). (புறமுகமாக பல பொருட்களின் மீது செல்லும் மனம் வலுவில்லாமல் இருக்கும். அதை ஒன்று திரட்டி, அகமுகமாக, தன் மீது நிலைநிறுத்தும் போது உருத்திராக்கம் போன்று திரண்டு, வலுப்பெற்று விடும்.)

oOo

திருநீறு தரிப்பதாலும் & உருத்திராக்கம் அணிவதாலும் விளையும் இதர பயன்கள் யாவும் மிகைப்படி கணக்கில்தான் சேரும்.

காழியூர் பிள்ளை 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடிய புகழ்பெற்ற "மந்திரமாவது நீறு ..." எனும் பதிகத்தில் "உண்மையில் உள்ளது நீறு" என்ற சொற்றொடர் வருகிறது. இதில், அழியும் திடப்பொருளான சாம்பலை பெருமான் குறிக்கவில்லை. காணும் காட்சிகள் நீங்கிய பிறகு - பிறவிநோய் தீர்ந்த பிறகு - மீதமிருக்கும் நமது தன்மையுணர்வையே திருநீறு என்றழைக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid