Tuesday, December 21, 2021

திருநீறு பூசுவதின் மெய்யியல் அடிப்படை - சிறு விளக்கம்


திருநீற்றின் 3 கோடுகள் நனவு, கனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளைக் குறிக்கும். இக்கோடுகளை பூசுவதற்கு எவ்வாறு நம் நெற்றி பற்றுக்கோடாக அமைகிறதோ, இவ்வாறே நனவு முதலான 3 நிலைகள் தோன்றி மறைவதற்கு நாம் (நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - சிவம்) பற்றுக்கோடாக அமைகிறோம்.

பூசுப்படும் திருநீறு இருந்தாலும், அழிந்தாலும் நெற்றிக்கு குறையில்லை. இவ்வாறே நனவு முதலான நிலைகள் தோன்றினாலும், மறைந்தாலும் நமக்கு எந்த குறையுமில்லை. இதை உணரவேண்டும்.

🌷 "நீறில்லா நெற்றி பாழ்" - மேற்கண்ட அறிவு இல்லாதவரின் சிந்தனையோட்டம் புறமுகமாகச் சென்று, கிடைத்தற்கரிய மனிதப்பிறவி வீணாகிவிடும்.

🌷  "திருநீற்றை சிந்தாதே / கீழே விடாதே" - அரும்பாடுபட்டு பெற்ற இறையுணர்வை (மெய்யறிவை) இழந்துவிடாதே.

oOo

ஒரு சைவர் தரித்திருக்க வேண்டிய சின்னங்கள் இரண்டு: திருநீறு & உருத்திராக்கம்.

🌷  திருநீறு 3 கோடாக பூசப்படும்போது மேற்சொன்ன பொருளைக் குறிக்கும். நெற்றி முழுதும் பூசும்போது அல்லது சிறு கீற்றாக பூசும்போது அதன் பொருள்: இந்த உலகை "எரிந்து உருக்கலையாத" சாம்பல் போன்று அவர் காண்கிறார் (அல்லது, காணவேண்டும்).

🌷 கழுத்தில் உருத்திராக்கம் அணிவதன் பொருள்: புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் மனதை, எக்கணமும் தனது தன்மையுணர்வின் மீது நிலைபெறச் செய்திருப்பவர் (அல்லது, செய்யவேண்டும்). (புறமுகமாக பல பொருட்களின் மீது செல்லும் மனம் வலுவில்லாமல் இருக்கும். அதை ஒன்று திரட்டி, அகமுகமாக, தன் மீது நிலைநிறுத்தும் போது உருத்திராக்கம் போன்று திரண்டு, வலுப்பெற்று விடும்.)

oOo

திருநீறு தரிப்பதாலும் & உருத்திராக்கம் அணிவதாலும் விளையும் இதர பயன்கள் யாவும் மிகைப்படி கணக்கில்தான் சேரும்.

காழியூர் பிள்ளை 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடிய புகழ்பெற்ற "மந்திரமாவது நீறு ..." எனும் பதிகத்தில் "உண்மையில் உள்ளது நீறு" என்ற சொற்றொடர் வருகிறது. இதில், அழியும் திடப்பொருளான சாம்பலை பெருமான் குறிக்கவில்லை. காணும் காட்சிகள் நீங்கிய பிறகு - பிறவிநோய் தீர்ந்த பிறகு - மீதமிருக்கும் நமது தன்மையுணர்வையே திருநீறு என்றழைக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment