Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment