Monday, May 2, 2022

திருக்குறள் #901: மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

-- திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)

பொருள்: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. (மு.வ.)

இன்றைய உரையாசிரியர்கள், மனைவிழைவார் என்பதற்கு "சிற்றின்பத்தை பெரிதும் விரும்புவோர்" என்றும், வினைவிழையார் என்பதற்கு "பொருளீட்ட விரும்புவோர்" என்றும் பொருள் கொள்கின்றனர்.

இங்கு நுட்பமாகக் காணவேண்டிய சொற்கள்: விழைவார் & விழையார்.

🔸 விழைவார் - விரும்புவோர்
🔸 விழையார் - விரும்பாதவர் / பகைவர்

மனை என்ற சொல்லுக்கு மனைவி, வெற்றிடம் (காலி மனை), இல்வாழ்க்கை என பல பொருள்கள் உண்டு. மனைவி மூலம் மட்டுமே பெறவேண்டிய சிற்றின்பத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று எடுத்துக் கொள்ளலாம். (தற்காலத்தில், இல்வாழ்க்கை என்று பொருள் கொண்டாலும் தவறாகாது! 😊)

வினைவிழையார் - வினை + விழையார் - செயலை விரும்பாதவர். யார் அவர்கள்?

செயல் என்பது அசைவு. செயலை விரும்பாதவர் - அசைவை விரும்பாதவர். நேர்மறையாக்கினால், அசைவற்றதை விரும்புபவர். எது அசைவற்றது? உள்ளபொருளே அசைவற்றது. உள்ளபொருளில் நிலைபெற விரும்புபவர். அதாவது, நிலைபேற்றினை விரும்புபவர்!!

இப்போது பொருள் காண்போம்:

நிலைபேற்றினை விரும்புவோர் ஒதுக்கும் சிற்றின்பத்தை விரும்புவோர் மேன்மையடையமாட்டார்கள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment