Monday, May 16, 2022

திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

-- திருக்குறள் #612 (ஆள்வினையுடைமை)

பொருள்: கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் (குறள்திறன் உரை - பண்டைய ஆசிரியர்களின் உரைகளை அடிப்படையாகக் கொண்டது).

oOo

வினைப்பயன்கள் மீதமிருப்பதனால்தான் பிறவியே ஏற்படுகிறது. இல்லையெனில், இந்த ஜிஎஸ்டி, பகுத்தறிவு, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் பல பட்டை நாமங்கள்-சூழ் உலகில் நமக்கென்ன வேலை? ☺️

🔸 வினைக்குறை - மீதமிருக்கும் வினைப்பயன்கள்

🔸 வினைக்குறை தீர்ந்தார் - வினைப்பயன்கள் தீர்ந்தவர்கள். மெய்யறிவாளர்கள். 

🔸 தீர்ந்தன்று உலகு - மெய்யறிவில் நிலைப்பெற்றவுடன் பிறவி முடிந்துவிடாது. இதற்கு பெரியோர்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டு: மிதிவண்டி. விசை கொடுப்பதை நிறுத்திய பிறகும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதிவண்டி சற்று தூரம் சென்றபிறகு நிற்பது போல, நிலைப்பேறு கிட்டியபிறகும், மீதமிருக்கும் வினைப்பயன்களினால் உடல்-உலகக் காட்சிகள் தொடரும்.

இதற்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். 16 வயதில் நிலைப்பேறு கிட்டினாலும், 70 வயதுவரை வாழ்வு தொடர்ந்தது.

🔸 உடல்-உலகக் காட்சிகள் தொடர்ந்தாலென்ன?

எச்சரிக்கையாக இருக்காவிடில், மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்வர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு விசுவாமித்திர மாமுனிவராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️. மெய்யறிவு பெற்ற பின்னரும், மேனகையிடம் மாட்டிக்கொண்டார்.

🔸 தொடரும் உடல்-உலகக் காட்சிகளுக்குள் சிக்காமலிருக்க என்ன செய்வது?

"வினைக்கண் வினைகெடல் ஓம்பல்" என்று பதிலளிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏽🙇🏽‍♂️.

"முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்களேன்" என்று சில அன்பர்களுக்கு அறிவுருத்தினார் பகவான். முயலுதல் என்பது ஒரு வினையெனில், முயற்சியற்று 'இருத்தல்' என்பது இன்னொரு வினையாகிறது. ஒன்றுக்கு இன்னொன்று மாற்றாகிறது. வினைக்கண்ணுக்கு மாற்று வினைகெடல்!

> வினைக்கண் - ஒரு வினையில் ஈடுபடுதல் / விருப்பம் கொள்ளுதல்

> வினைகெடல் - அந்த ஈடுபாட்டை / விருப்பத்தை அழித்தல் / அடக்குதல் / தவிர்த்தல்

> அதாவது, செயல் (வினைக்கண்) அற்றிருத்தல் (வினைகெடல்)

> இவ்வாறு செயலற்றிருத்தலே, ஓம்பல் (காத்துக்கொள்ளல்)

இப்போது அனைத்தையும் இணைப்போம்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக் கொள்ளாமலிருக்க செயலற்றிருக்கவேண்டும் என்பது பொருளாகும்.

oOo

இன்றைய சூழ்நிலையில், எந்த செயலையும் செய்யாமலிருக்க முடியுமா?

இதற்கு விடை காண்பதற்கு முன்னர், வேடிக்கையாக ஒரு பொருள் காண்போம்.

செயல், வேலை, வினை, உழை என எல்லாம் மனதின் அசைவை, மனதை வெளிவிடுவதைக் குறிக்கும். மனம், அசைவு என்றாலே அது அன்னைதான். எனில், செயல் = அன்னை.

செயலுக்கு / அசைவுக்கு எதிர்மறை செயலற்று இருத்தல் / அசைவற்று கிடத்தல் = அப்பன் / சிவன். "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே?".

செயலுக்கு மாற்று செயலற்றிருத்தல். அன்னைக்கு மாற்று அப்பன்.

பொருள்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்க சிவமாய் கிடந்தால் போதும்! 😊

எனில், சிவமாய் கிடப்பது / இருப்பது எவ்வாறு?

நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றலே சும்மாவிருத்தல் (சிவமாயிருத்தல்) -- திரு சாது ஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

செயலற்றிருத்தல் என்றாலென்ன?

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவிருத்தல் அல்ல. அப்படி சும்மாவிருக்கும் தலைவிதி அமைந்தால் நல்லதே. இல்லையெனில், சும்மாவிருக்க முயல்வது வீணாகும். இதைவிட, உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொண்டால் செயலற்ற நிலை தானாக அமையும்!

பகவானது விளக்கத்தைப் பார்ப்போம்: "வேலை செய்கிறேன்" என்ற உணர்ச்சியே தடை. "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து, உனது உண்மையை நினைவிற் கொள். வேலை தானே நடக்கும். உன்னை கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயற்சிக்கவேண்டாம். உனது முயற்சியே உனது தளை.

வினைக்கண் வினைகெடுவதற்கு இந்த ஒரு பொன்னான அறிவுரை போதும்! 🙏🏽

oOOo

வாலறிவன் வள்ளுவன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment