Wednesday, April 6, 2016

கல்வியாளர்களா அல்லது மனநல மருத்துவமனைகளுக்கு ஆள் சேர்க்கும் பிரதிநிதிகளா? 😠



இந்த தினமலர் செய்தியிலுள்ள திரு. நெடுஞ்செழியனை மட்டும் குறிப்பிட்டு இதை எழுதவில்லை. இது போன்று பேசும் அனைவரையும் சேர்த்தே எழுதுகிறேன்.

ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் முதலில் என்ன செய்தார்கள்? அல்லது இவர்களது பிள்ளைகள் என்ன செய்தார்கள்? +1 & +2 பாடங்களை "ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து" தான் படித்தனரா? அப்படி படிக்கத்தான் முடியுமா? அப்படி ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து எழுதினால் அந்த வினாத்தாள் "தகுதியான" ஆசிரியரிடம் செல்லும் என்பது என்ன நிச்சயம்? மதிப்பெண் எனும் மண்ணாங்கட்டியைத் தவிர வேறு சிந்தனை தோன்றிவிடக் கூடாது என்ற ஒரே குறிக்கோளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டவையே +1 & +2 பாடத்திட்டங்கள். இந்த சுமை போதாதாம். பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டுமாம். எதற்கு? மனநல காப்பகத்தில் இடம்பெறவா? 😤

இந்த கல்வியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே. இந்நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் "+2 மதிப்பெண்களே வாழ்க்கையே நிர்ணயிக்கும்" என்பது தமிழ் படங்களில் இறுதியில் காட்டப்படும் "சுபம்" அல்லது ஆங்கிலப் படங்களில் இறுதியில் காட்டப்படும் "They lived happily ever after" என்ற வார்த்தைகளுக்கு சமம் என்று. நல்ல மதிப்பெண்கள், நல்ல கல்லூரி, நல்ல வேலை என எதுவும் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதமில்லை என இவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஆயிரங்களில் சம்பாதிப்போரே தினமும் 10-12 மணி நேரம் செலவிட வேண்டும். எனில் லட்சங்களிலும் கோடிகளிலும் புரள ஒருவர் இழக்க வேண்டிவரும் நேரம், ஆற்றல் மற்றும் மன நிம்மதியை கணக்கிடவே முடியாது. வாழ்க்கை நரகமாகும். 60-களில் அடைய வேண்டிய மனச்சோர்வையும் உடல் தளர்ச்சியையும் 40-களிலேயே அடைய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை இழந்து அடையப்படும் செல்வம் எதற்கும் உதவாது.

🌸🌹🍀🍁🌺🌻🌼

(குறை கூறும் நான் தீர்வும் கூற வேண்டும் என்ற நோக்கில் மீதத்தை எழுதியிருக்கிறேன்.)

இந்த மெக்காலே, ஆட்டு மந்தை, Pressure Cooker படிப்பு பெரும்பாலும் உருவாக்குவது இரு வகையான மனிதர்களைத் தான்:

💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரைச் சார்ந்திருப்போர் மற்றும்
💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரை தன்னைச் சாரவைப்போர்

முன்னவன் அடிமை! பின்னவன் கிரிமினல்!!

சமூக முக்கோணம் தொடர்ந்து செழிப்புடன் நிலை பெற்றிருக்கக் காரணம் சார்பு வாழ்க்கை வாழ தயாராகவிருக்கும் அடிமைகள் தான். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையைச் சார்ந்தே வாழ வேண்டும். அப்படி அவனை வாழவைப்பது பெற்றோரின் / சமூகத்தின் / அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.

புகழ் பெற்ற ஒரு பற்பசை நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வியாபாரம் ஒரு நிலையிலேயே நின்று விட்டது. அவர்களால் முடிந்ததை எல்லாம் முயன்றுவிட்டு, ஒரு மேதாவியை அழைத்து வந்தனர். அவனும் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு அந்நிறுவனத்திற்கு கொடுத்த பதில்: "தங்கள் பொருளில் ஒரு குறையும் இல்லை. தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பற்பசை டியூபின் வாயை பெரிதாக்குவது மட்டுமே!!"

அதன்படி அந்நிறுவனம் செய்ய, வியாபாரம் பல மடங்கு பெருகியது. எல்லோரும் அந்த மேதாவியை புகழ்ந்தார்கள். என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு மகா கிரிமினல். 😛 ஒரு பட்டாணி அளவு எடுக்க வேண்டிய பற்பசையை டபுள்பீன்ஸ் அளவு எடுக்க வைத்தான். நம்மை தேவைக்கு அதிகமாக செலவு செய்யவைத்தான். அதனால், புவி வெப்பமடையச் செய்தான். இயற்கையை அழித்தான். இவனையே இச்சமூகம் வெற்றி பெற்றவனாகப் பார்க்கிறது. இவனையே இக்கல்வியாளர்களும் முன்மாதிரியாக வைக்கிறார்கள். தான் வாழ பிறரையும் இயற்கையையும் அழிக்கும் இவனல்ல இன்றைய தேவை.

நாம் வாழும் இந்த பூமித்தாய் காப்பாற்றப்படவேண்டும் என்பதே இன்றைய தேவை. அதற்கும் தேவை தன்னைச் சார்ந்த - சுயசார்பான - வாழ்க்கை முறையே. நமது தேவைகள் எவ்வளவு குறைவான தூரம் பயணிக்கிறதோ, நமது தேவைகளை எவ்வளவு தூரம் நாமே பூர்த்தி செய்து கொள்கிறோமோ அவ்வளவு தூரம் புவியின் வெப்பம் குறையும். அவ்வளவு தூரம் இயற்கை காப்பாற்றப்படும். இதற்கான கல்வியும், இந்த கல்வியை முன்வைக்கும் கல்வியாளர்கள் மட்டுமே இன்றும் நமக்குத் தேவை.

இறுதியாக, சுயசார்பு என்பது பயணிக்கும் வாகனம் போல. அதற்கு இலக்கு?

நம் மூதாதையரின் இலக்கு தான் - வீடுபேறு அல்லது பிறவாமை!!

posted from Bloggeroid

No comments:

Post a Comment