Monday, November 13, 2023

தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!


🌷 திருவாரூரில் பிறக்க விடுதலை
🌷 தில்லையை காண விடுதலை
🌷 காசியில் இறக்க விடுதலை
🌷 திருவருணையை நினைக்க விடுதலை

மேலுள்ள புகழ்பெற்ற வரிகளின் பொருள்: மெய்யறிவு பெறுதல்!

இது போன்றதுதான் இணைப்புப் படத்திலுள்ள 5 வரிகள். வெவ்வேறு உருவகங்களாக இருந்தாலும் அவை மெய்யறிவு பெறுதலையே குறிப்பிடுகின்றன.

1. கண்ணபிரான் நரகாசுரனை கொன்றார்

🌷 நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்.

கண்ணபிரான் - 5,125 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரியரென்றும் கொள்ளலாம். அல்லது, நம் கண் முன்னே விரியும் வையகமென்றும் கொள்ளலாம். வையகத்தில் நாம் கண்ட / கேட்ட ஏதோவொன்று நமக்கு மெய்யறிவை கொடுக்கிறதென்று பொருள் கொள்ளலாம்.

(இணைப்புப் படத்திலுள்ள சொற்றொடர்களை எழுதியவர்கள் வைணவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை காண்பவனை விட காணப்படுவதே மேலானதாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பொருள் காணவேண்டும்.)

2. பாண்டவர்கள் 12 ஆண்டு கால காட்டு வாழ்விலிருந்து வெளிப்பட்டார்கள்

🌷 காடு - வையகம்
🌷 பாண்டவர்கள் - 5 பேர் - 5 புலன்கள்

மெய்யறிவு அடையும்வரை வையகத்திலிருந்து புலன்கள் வழியாக பெறப்படும் தரவுகளால் மனம் கட்டுண்டு கிடக்கும். மெய்யறிவு அடைந்த பிறகும், கண்கள் காணும், காதுகள் கேட்கும்... ஆனால், பாதிப்பிருக்காது. இதையே, "காட்டிலிருந்து புலன்கள் விடுபட்டன" என்ற உருவகப் படுத்தியுள்ளனர்.

3. இராமபிரான், இலக்குவன் & சீதையன்னை அயோத்திக்கு திரும்பினர்

🌷 இராமபிரான் - இருள். வைணவர்களுக்கு இருளே பெரிது. எனவே, முதலில் இடம் பெறுகிறது.
🌷 இலக்குவன் - ஒளி
🌷 சீதையன்னை - குளுமை
🌷 அயோத்தி - போர் நடக்காத இடம்

வையகம் என்பது போர் (அன்றாட வாழ்க்கை) நடக்குமிடம். இதற்கு எதிரான திருநீற்று நிலையென்பது போர் நடக்காத இடம் (அயோத்தி - அ+யுத்தா). அந்நிலைக்கு திரும்பும்போது, நாமிருப்போம் (ஒளி - இலக்குவன்); வெறுமையிருக்கும் (இருள்); ஜிஎஸ்டி-சூழ் வையகத்திலிருந்து தப்பினோம் என்ற குழுமையுமிருக்கும் (சீதை).

4. மன்னர் மகாபலியை ஒழித்து, அன்னை இலக்குமியை மீட்டார் குறளன் பெருமாள்

🌷 குறளன் பெருமாள் - வாமனர் - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற சின்னஞ்சிறு அறிவுரை.

🌷 மகாபலி - "நான் இன்னார்" என்ற நமது தனித்தன்மை

🌷 இலக்குமி - மெய்யறிவு

மெய்யாசிரியரின் அறிவுரையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நமது தனித்தன்மை அழியும். மெய்யறிவு தானாக வெளிப்படும். இதையே மகாபலியை (நமது தனித்தன்மை) அழித்து, அன்னையை (மெய்யறிவு) மீட்டார் குறளன் பெருமாள் (அறிவுரை) என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

5. அன்னை இலக்குமி தோன்றிய நாள்

மெய்யறிவு தோன்றிய நாள்.

oOo

ஆக, உருவகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையுணர்த்தும் பொருள் ஒன்றுதான்: தீபாவளி திருநாள் என்பது மெய்யறிவு கிடைத்த நாளாகும்!

🔸 யாருக்கு மெய்யறிவு கிடைத்த நாள்?

5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணன் என்ற ஆரியப் பெருமானுக்கு மெய்யறிவு கிடைத்த நாள்.

🔸 இத்திருநாளுக்கும் வைணவத்திற்கும் தொடர்புண்டா?

சிறிதளவு கூட கிடையாது. வைணவம் மெய்யறிவுக்கு எதிரானது. தீபாவளித் திருநாளோ மெய்யறிவைப் போற்றுவது. மேலும், கண்ணபிரான் வாழ்ந்த காலத்தில் வைணவமே கிடையாது!

🔸 எனில், ஏன் அனைத்து உருவகங்களும் வைணவர்களுடையதாக உள்ளன?

கண்ணபிரான் ஓர் ஆரியர் என்பதைத்தவிர வேறு பதில் கிடையாது.

எவ்வாறு அரேபியர்களை குறிமதத்தான்கள் கொண்டாடுகிறார்களோ, ஐரோப்பியர்களை எம்எல்எம் மதத்தினர் கொண்டாடுகிறார்களோ, அவ்வாறே கண்ணபிரானை ஆரியர்கள் கொண்டாடுகிறார்கள். ("அவரு எங்க ஆளு!")

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, November 11, 2023

அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!


💦👕🍥💥🎉🎊🪔

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 சிவபெருமானின் திருவுருவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின் உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ணபிரான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ணபிரான் நடத்திய போராக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலை நாயக்கராவார். நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் வைணவம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-வைணவர். அவரை வழி நடத்தியவர்களோ வடக்கத்திய பௌத்த-வைணவர்கள். அப்போதிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-சைவர்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திருஞானசம்பந்தப் பெருமான் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு வைணவத் திருவிழாவிற்குள் சைவக்கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. பிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ணபிரானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo


ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் திரு இரமண மாமுனிவர் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? "இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 9, 2023

கேதார கௌரி விரதம் & கேதார்நாத் - சிறு விளக்கம்


கேதார கௌரி விரதம் - சிறு விளக்கம்:

🌷 கேதாரம் - நிலம்

🌷 கௌரி - நல்ல / சிறந்த ஒளி

🌷 விரதம் - விலகியிருத்தல்

🔸 நல்ல நிலத்தில் என்ன செய்வார்கள்?

உழுது, செம்மையாக்கி, பயிர் செய்து, நல்ல விளைச்சல் பார்ப்பார்கள். இதுபோன்று, "என்னை செம்மையாக்கி, நல்லெண்ணங்களை பயிர்செய்து, நல்விளைவுகளை அறுவடை செய்துகொள், இறைவா!" என்று இறைஞ்சுவதுதான் இந்நோன்பின் நோக்கமாகும்!

🔸 அடுத்து, விரதமென்றால் விலகியிருத்தலென்று பார்த்தோம். எதிலிருந்து விலகியிருத்தல்?

படைப்பிலிருந்து விலகியிருத்தல்.

🔸 அடுத்து, படைப்பு என்றாலென்ன?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், நமதுடல் மற்றும் நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சி. அதாவது, தோன்றி மறையும் யாவும் படைப்பாகும்!

🔸 மேற்சொன்னவற்றையெல்லாம் விலக்கிவிட்டால், மீதமென்ன இருக்கும்?

"நான்" என்ற தன்மையுணர்வு மட்டும் மீதமிருக்கும்! வகை வகையாக பெயர்களை வைத்துக் கொண்டாலும், இந்நிலையை அடைவதுதான் எல்லா விரதங்களின் நோக்கமாகும். விரதமென்ற ஆரியச்சொல்லுக்கு சமமான தமிழ் சொல் "நோன்பு" ஆகும்.

oOo

அடுத்து, கேதார்நாத் என்ற பெயரின் உட்பொருளை சற்று சிந்திப்போம்.

கேதார்நாத் -> கேதாரம் + நாதன் -> நிலம் + தலைவன்.

🔸 எந்த நிலத்தின் தலைவன்?

வையகம் எனும் நிலத்தின் தலைவன்.

🔸 நிலத்தில் என்னென்ன நிகழ்கின்றன?

செடி கொடிகள் முளைக்கின்றன. அவற்றை பல்லுயிரிகள் உண்கின்றன. அவற்றை வேறுயிரிகள் உண்கின்றன. பிறகு, உயிரிகள் இறக்கின்றன. அவற்றின் உடல்கள் மண்ணோடு மண்ணாகின்றன. மீண்டும் அடுத்த சுழற்சி தொடங்குகிறது. இதற்கு சமமான நிகழ்வுகள்தாம் வையகத்தில் நிகழ்கின்றன.

பிறத்தல், வளர்தல், வாழ்தல், இறத்தல் என்ற சுழற்சி தொடர்ந்தவண்ணம் இருப்பதால், வையகம் எனும் அன்னையை நிலமாக கணக்கிட்டு, இவ்வையகம் தோன்றி, இருந்து, மறைய இடங்கொடுத்திருக்கும் உள்ளபொருளை (சிவத்தை) தலைவனாக கணக்கிட்டுள்ளனர். அந்த சிவமாக சமைந்த ஒரு பெருமான் குடியிருக்கும் (ஆரியத்தில், சமாதியாகியிருக்கும்) இடமே கேதார்நாத் ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 6, 2023

திரு மாகறல் பெருமான் - பெயர் விளக்கம்


(மாகறல், காஞ்சிபுரம் - திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயில்)

கறல் - விறகு / கட்டை
மாகறல் - பெருங்கட்டை / சிறந்த விறகு

மெய்யறிவாளர்கள் என்பவர்கள் வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, முனைப்பற்று அப்படியேயிருப்பார்கள். அப்படிப்பட்ட மெய்யறிவாளர்களுள் தலைசிறந்தவர் இவ்வுடையவருக்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் என்பது பொருளாகும்.

இதே பொருளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் தாணு (ஸ்தாணு) என்ற ஆரியப்பெயருமாகும்.

இவருக்கு அடைக்கலங்காத்தப் பெருமான் என்ற பெயருமிருக்கிறது.

அடைக்கலம் - புகலிடம் - பாதுகாப்பான இடம். எது அப்படிப்பட்ட இடம்? அவர் அடைந்திருக்கும் திருநீற்று நிலையே அப்படிப்பட்ட இடமாகும்! அடைக்கலங்காத்தவர் எனில்...

- தனது நிலையை காத்துக் கொண்டவர்
- தனது நிலையை விடாப்பிடியாக பற்றிக் கொண்டவர்
- தனது நிலையில் உறுதியாக இருந்தவர் 

என பொருள் கொள்ளலாம். இப்பொருளும், மாகறல் பெருமான் என்ற பெயரின் பொருளும் ஒன்றுதான்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, November 5, 2023

ஒரு சொலவடைக்குள் நம் சமயம் மொத்தமும் அடக்கம்!! 😍


அண்மையில், பின்வரும் பழமொழி / சொலவடை கிடைத்தது:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அறியாதன விலகும்
காட்டை திருத்த வயல்
மலையை திருத்த வீடு

இது முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்ததாகும்! மிகவும் பண்பட்ட ஒருவரே இதை எழுதியிருக்கமுடியும்.

🌷 காட்டை திருத்த வயல்

ஒரு பகுதி காடாக இருக்குமானால், அதனால் மனிதர்களுக்கு பயனில்லை. அக்காட்டை சீர்திருத்தி, வயலாக மாற்றினால், குடியானவன் முதல் அரசன் வரை எல்லோருக்கும் பயனளிக்கும். (இன்று, காட்டை அழிப்பது குற்றமாகும் / தவறாகும். இதை அக்கால கண்ணோட்டத்தில் காணவேண்டும். தொண்டை மண்டலக் காடுகளை வெட்டி, சீர்திருத்தி வயல் நிலங்களாக மாற்றியதால்தான், கரிகாலச் சோழருக்கு "காடுவெட்டி" என்ற பட்டப்பெயர் சேர்ந்தது.)

மெய்யியலில், காடு என்பது வையகத்தை குறிக்கும். வையகம் என்பது மக்கள் திரள். பண்படாத மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? அசல் காட்டுமிராண்டிகள் வாழும் பகுதிகளை (கொடிய காடுகளை) போன்றிருக்கும். இதுவே, பண்பட்ட மக்கள் திரளைக் கொண்ட வையகம் எப்படியிருக்கும்? நிலத்தை உழுது, பண்படுத்தி, விதைநேர்த்தி செய்து, நேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை இட்டு, சரியான நேரத்தில் நீர் பாய்ச்சி, களையெடுத்த நெல் வயலைப் போன்றிருக்கும்!!

🌷 மலையை திருத்த வீடு

மனித உடலில் மலையென்பது தலையை குறிக்கும். ஐம்புலன்களில் 4 புலன்கள் தலையிலுள்ளன. விழிப்பு நேரத்தில் நாம் இயங்குவது தலையிலிருந்துதான். எல்லா எண்ணங்களும் தோன்றுவது தலைக்குள்தான். மனமானது விழிப்பு நேரத்தில் தலையிலிருந்து செயல்படுவதாக கணக்கு (உறக்கத்தில், அது இதயத்திற்குள் ஒடுங்கிவிடுகிறது).

மலையை திருத்த -> தலையை திருத்த -> மனதை திருத்த -> வீடுபேறு கிட்டும்.

🌷 அறியாதெனவெல்லாம் நிலையானவை

தற்போது, நம் கண் முன்னே விரியும் வையகத்தை நிலையானதாகவும், நம்மை நாம் நிலையற்றதாகவும் காண்கிறோம். ஆனால், நாம்தான் நிலையான பொருள்! அசைவும், அழிவும் நமக்கில்லை. இதை நாம் உணர்வதில்லை. இதையே, "அறியாதனவெல்லாம் நிலையானவை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

🌷 அறியும்தோறும், அறியாதன விலகும்

🔸 அறியும்தோறும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது.

🔸 அறியாதன விலகும் - வெகுநேரம், இச்சொற்றொடர் பொருந்தி வராமல், தகராறு செய்து கொண்டிருந்தது. பின்னர், "அறி" என்பதை "அரி" என்று மாற்றிப்பார்த்தேன். பொருந்திவிட்டது!

அரி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. இங்கு பெருமாள் & வண்டு ஆகிய பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில், பெருமாள்.

பெருமாளுக்கு ஆரியத்தில் ஹரி என்றொரு பெயருண்டு. இந்த ஹரி தமிழில் அரி என்று மாறும்.

பெருமாள் என்பதென்ன? நம்மை தவிர மீதமனைத்தும். மனம், உடல் & வையகக் காட்சிகள் யாவும் பெருமாளாகும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனம், உடல் & வையகக் காட்சிகள் விலகிப்போகும். அதாவது, அவற்றின் உண்மைத்தன்மையை நாம் உணர்ந்துகொள்வதால், அவற்றினால் பாதிப்படையமாட்டோம் என்பது பொருளாகும்.

அடுத்தது, வண்டு.

மெய்யியலில், வண்டு என்பது மனதைக் குறிக்கும். ஏனெனில், வண்டிற்கு ஐந்து கண்களுள்ளன. ஐந்து கண்கள் = ஐம்புலன்கள். ஐம்புலன்களின் வழியாக இயங்குவது... மனமாகும். வண்டானது ஒரு பூவில் நிற்காது. ஒவ்வொரு பூவாக தாவிக்கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனமும் ஓர் எண்ணத்தில் நிற்காது. எண்ணம் விட்டு எண்ணம் தாவிக்கொண்டேயிருக்கும்.

🔅 அறியும்தோறும், அரியாதன விலகும் - நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும்போது, மனமானது அதன் வலுவை இழந்துவிடும். ஓயாமல் எண்ணங்களை தோற்றுவித்து, நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருந்த மனமானது, அதன் வலுவை இழந்து, ஒடுங்கிவிடும்.

இவ்வகையில், பெருமாள் & வண்டு ஆகிய இரு சொற்களுமே ஒரே பொருளைதான் கொடுக்கின்றன!

இனி, எழுத்துப்பிழை இல்லாத பழமொழியை / சொலவடையை மீண்டுமொரு முறை பார்ப்போம்:

அறியாதெனவெல்லாம் நிலையானவை
அறியும்தோறும், அரியாதன விலகும்
காட்டை திருத்த வயல் 
மலையை திருத்த வீடு

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, October 31, 2023

பரிகாரம் - சிறு விளக்கம்


(எனக்குத் தெரிந்த பெரியவரொருவர் பரிகாரத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும், தனது பெற்றோர் செய்த பரிகாரத்தினால்தான் தான் பிறந்ததாகவும் சொன்னார். அவருக்கு நான் கொடுத்த பதிலே இவ்விடுகையாகும்.)

பரிகாரம் பற்றி அடியேனுக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

பரிஹார என்ற ஆரியச்சொல்லின் தமிழாக்கமே பரிகாரம் ஆகும். இச்சொல்லிற்கு "ஒதுக்கி வைப்பது", "தள்ளி வைப்பது", "விட்டு விடுவது" என்று பொருள் கொண்டு, எதையெதையோ செய்கிறார்கள். இவையனைத்தும் தவறாகும்!

பரிஹார - பரி + ஹார - சுற்றி + நகை / காப்பு. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு வளையம் என்று பொருள் கொள்ளலாம். நடைமுறை என்று வரும்போது, இந்த பாதுகாப்பு வளையத்தை தாங்குதிறன் என்று மாற்றிக்கொள்ளலாம்.

பழமையான திருக்கோயில்களுக்கு சென்றுவருவதினாலும், முதிர்ந்த சமயப் பெரியவர்களிடம் வாழ்த்துகளை பெறுவதினாலும், கொடுப்பினை இருப்பின், தேவையான தாங்குதிறன் கிடைக்கலாம். ஆனால், வருவதை மாற்றவோ / தடுக்கவோ முடியாது. அப்படியொரு கோயிலுக்கு சென்று வந்தபின், அல்லது, ஒரு பெரியவரிடம் வாழ்த்து பெற்றபின், நமது இடர் களைகிறதெனில், அதுவும் கொடுப்பினையில் இருக்கவேண்டும். இல்லையெனில், நிகழாது.

தங்களது பெற்றோர் திருப்புல்லாணிக்கு சென்றதும், அங்கு ஒரு சிங்களவரை சந்தித்ததும், அவர் தங்களது பிறப்பை முன்கூட்டியே தெரிவித்ததும் தங்களது பெற்றோரின் கொடுப்பினையில் இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெய்யறிவு அடைந்தபின் பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் அறிவுரை:

அவரவர் பிராரப்தம் பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாய் இருக்கை நன்று.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, October 24, 2023

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!


அன்னையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

அன்னையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, அன்னையின் திருவுருவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 அன்னையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 அன்னப்பறவை - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளும் பகுத்தறிவு.

🌷 மயில் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு சமம்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - அசைவது / மாறிக்கொண்டேயிருப்பது - வையகத்தை குறிக்கும். நாம் கற்கும் யாவும் வையகத்திலிருந்து கிடைத்தவையே.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை.

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 அன்னையின் கணவரான நான்முகன் - நான்கு திசைகளை குறிக்கும். அத்திசைகளிலிருந்து வரும் செய்திகளையும், தரவுகளையும் குறிக்கும்.

oOo

மெய்யியலில் பெண்ணுருவமும், நீர்நிலையும் நிலையற்றதை குறிக்கும். எனில், நிலையற்ற வையகத்திலிருந்து பெறப்படும் நிலையற்ற அறிவை நாமகள் குறிக்கிறார் என்று கொள்ளலாம். எனில், நிலையான அறிவு என்பதெது? அது எங்கிருந்து கிடைக்கிறது? யார் தருகிறார்கள்? இது பற்றி வேறோர் இடுகையில் அலசுவோம். 🙏🏽

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻