Tuesday, October 31, 2023

பரிகாரம் - சிறு விளக்கம்


(எனக்குத் தெரிந்த பெரியவரொருவர் பரிகாரத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையையும், தனது பெற்றோர் செய்த பரிகாரத்தினால்தான் தான் பிறந்ததாகவும் சொன்னார். அவருக்கு நான் கொடுத்த பதிலே இவ்விடுகையாகும்.)

பரிகாரம் பற்றி அடியேனுக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

பரிஹார என்ற ஆரியச்சொல்லின் தமிழாக்கமே பரிகாரம் ஆகும். இச்சொல்லிற்கு "ஒதுக்கி வைப்பது", "தள்ளி வைப்பது", "விட்டு விடுவது" என்று பொருள் கொண்டு, எதையெதையோ செய்கிறார்கள். இவையனைத்தும் தவறாகும்!

பரிஹார - பரி + ஹார - சுற்றி + நகை / காப்பு. நம்மைச் சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு வளையம் என்று பொருள் கொள்ளலாம். நடைமுறை என்று வரும்போது, இந்த பாதுகாப்பு வளையத்தை தாங்குதிறன் என்று மாற்றிக்கொள்ளலாம்.

பழமையான திருக்கோயில்களுக்கு சென்றுவருவதினாலும், முதிர்ந்த சமயப் பெரியவர்களிடம் வாழ்த்துகளை பெறுவதினாலும், கொடுப்பினை இருப்பின், தேவையான தாங்குதிறன் கிடைக்கலாம். ஆனால், வருவதை மாற்றவோ / தடுக்கவோ முடியாது. அப்படியொரு கோயிலுக்கு சென்று வந்தபின், அல்லது, ஒரு பெரியவரிடம் வாழ்த்து பெற்றபின், நமது இடர் களைகிறதெனில், அதுவும் கொடுப்பினையில் இருக்கவேண்டும். இல்லையெனில், நிகழாது.

தங்களது பெற்றோர் திருப்புல்லாணிக்கு சென்றதும், அங்கு ஒரு சிங்களவரை சந்தித்ததும், அவர் தங்களது பிறப்பை முன்கூட்டியே தெரிவித்ததும் தங்களது பெற்றோரின் கொடுப்பினையில் இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெய்யறிவு அடைந்தபின் பகவான் திரு இரமண மாமுனிவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் அறிவுரை:

அவரவர் பிராரப்தம் பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாய் இருக்கை நன்று.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment