Showing posts with label மலர்மகள். Show all posts
Showing posts with label மலர்மகள். Show all posts

Sunday, November 3, 2024

ஆந்தை எனும் மெய்யியல் குறியீடு!


முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்த ஒரு குறியீடான ஆந்தையை உயிருடனோ, அல்லது, உயிரற்ற அதன் உடலுறுப்பையோ வைத்து வழிபட்டால், பொருள் (தெய்வப்பிறவிக்கு மிகவும் பிடித்தமான காசு, பணம், துட்டு, டப்பு, மணி...) சேரும் என்பது முழு முட்டாள்தனமாகும்! 🤦🏽 குறியீட்டை தவறாக புரிந்துகொண்டு, அழியும் பொருளுக்காக, அதை வேட்டையாடுகிறார்கள்; கொல்கிறார்கள்; பல மடங்கு விலை கொடுத்து வாங்கி, வழிபாடு என்ற பெயரில் தீவினைகளை சேர்த்துக் கொள்கிறார்கள்!

(அன்பு கூர்ந்து, "மலர்மகள்-ஆந்தை" தொடர்புடைய தீபாவளி கதையை, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🌷 மெய்யியலில், ஆந்தை என்பது விழிப்புணர்வை குறிக்கும்.

மெய்யறிவுத் தேடலில் இருக்கும்போது, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு கிட்டாது. மெய்யறிவு கிடைத்த பின்பு, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு பறிபோய்விடும். எனவே, மெய்யியலுக்கு விழிப்புணர்வு (ஆந்தை) இன்றியமையாததாகிறது.

🌷 ஆந்தையின் கண்கள் இருட்டில் நன்கு வேலை செய்யும்.

மெய்யியலில், இருள் என்பது தற்போது நாமிருக்கும் நிலையாகும். அதாவது, நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலையும், கண் முன்னே தோன்றும் வையகத்தையும் உண்மையென்று கருதும் நமது அறியாமை. 

"இருட்டில் காண்பது" என்பது, நம் உடலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களும், கண்முன்னே விரியும் வையகமும் பொய்யென்றும், இப்பொய்யை உணரும் நாமே என்றுமுள்ள மெய்யென்றும் உணருவதாகும்.

🌷 வடவர்களை பொருத்தவரை, ஆந்தை மலர்மகளின் ஊர்திகளில் ஒன்றாகும். ஆந்தை என்பது விழிப்புணர்வு எனில், மலர்மகள் (செல்வம்) என்பது மெய்யறிவாகும்.

🌷 பாற்கடலை கடையும்போது தோன்றியவர் மலர்மகள்.

("பாற்கடல் கடைதல்" கதையை, அன்பு கூர்ந்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔸 பாற்கடல் - நமதுடல்.

🔸 மந்தார மலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "தன்னாட்டம்" போன்ற நுட்பம் (டெக்னிக்).

🔸 வாசுகிப் பாம்பு - நமது மூச்சுக்காற்று.

🔸 பாம்பின் தலைப்பக்கம் இருக்கும் தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி (ஆக்சிஜன்).

🔸 பாம்பின் வால் பக்கம் இருக்கும் அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம் (கார்பன் டையாக்சைடு).

🔸 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்.

🔸 மேற்கண்டவற்றை கொண்டு செய்யப்படும் "கடைதல்" செயல் -

மூச்சை உள்ளேயிழுத்து வெளிவிடும் செயல், எவ்வாறு நம்மை அறியாமல் தானாக, இயல்பாக நடக்கிறதோ, அவ்வாறு, புலனடக்கத்துடன், தன்னாட்டம் போன்ற நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

🔸 மூத்தவள் / மூத்தாயி / தவ்வை / மூத்த தேவி / மூதேவி -

மேற்கண்ட "கடைதல்" செயலை செய்யத் தொடங்கினால், அவரவர் ஊழ்வினையின் படி, முதலில், பல நுண்ணிய அறிவு, திறமைகள் வெளிப்படும். இவற்றால் பேரும், புகழும், பொருளும் கிட்டலாம். ஆனால், பிறவியறுக்க முடியாது. இதனால்தான், முதலில் வெளிப்படும் அனைத்தையும் சேர்த்து, "மூத்தவள் / மூதேவி" என்று பெயரிட்டுள்ளனர்.

🔸 இளையவள் / சின்னாயி / மலர்மகள் / இலக்குமி / ஶ்ரீதேவி -

வெளிவர வேண்டியதெல்லாம் வெளியே வந்த பிறகு, இறுதியில், "தி ட்ரூமேன் ஷோ" (The Truman Show) திரைப்படத்தின் இறுதியில், ட்ரூமேன் உணருவது போல, எல்லாம் வெறும் ஒலிஒளி காட்சியென்பதையும், அக்காட்சியை இதுகாறும் கண்ட நாமே உள்ளபொருள் என்பதையும் உணருவோம். இதுவே மெய்யறிவு - இளையவள் - இலக்குமி - செல்வம் - ஞானம் - அமிர்தம் எனப்படும்.

oOo

இதுவரை நாம் கண்ட "ஆந்தை" குறியீடு மட்டுமல்ல, தீபாவளியுடன் தொடர்பு கொண்டுள்ள 

- நரகாசுரனை கண்ணன் கொன்றது
- இராமன், சீதை & இலக்குமணன் அயோத்திக்கு திரும்பியது
- காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பியது
- பாற்கடலிலிருந்து மலர்மகள் தோன்றியது

ஆகிய அனைத்து குறியீடுகளும், மெய்யறிவு பெறுதல் என்ற ஒரே நிகழ்வை உணர்த்துகின்றன. 

மெய்யறிவே செல்வம்! அதை அடையும் பொழுதே தீபாவளி!

oOOo

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 8, 2023

பசு மாட்டின் பின்புறத்தில் மலர்மகள் குடியிருக்கிறாராம்!!

(மேலுள்ள, மாட்டின் பின்புறத்தை தொட முயற்சிப்பது துர்கா இசுடாலினாம்! 🤭)

🤦🏽 கொஞ்சமாவது அறிவு என்று ஒன்றிருந்தால்...

அசுரனோ, உளுத்தறிவனோ, மெக்காலே மண்டையனோ யார் சொன்னாலும், சிந்திக்கவேண்டும்.

பசு மாட்டின் பின்புறம் சிறுநீரும் & சாணியும் வெளிப்படும். அவை நிலத்தில் விழுந்தால், நிலம் வளமாகும். நிலம் வளமானால் விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் வளரும். எனில், வருமானம் வளரவேண்டுமானால் பசு மாட்டின் சிறுநீரையும் & சாணியையும் பயன்படுத்தவேண்டும்.

சாணி & சிறுநீர் = வருமானம் = செல்வம் = மலர்மகள்!!

பொருளாதாரத்தில் உழவுத்தொழில் பெரும் பங்கு வகித்த சமயத்தில் உருவான வினைமுறையாகும் (ஆரியத்தில், சடங்காகும்). இன்றைய பொருளாதாரத்திற்கு பொருந்தாது. இன்று, இந்த வினைமுறையை செய்வதாலோ, பார்ப்பதாலோ எந்த பயனும் கிடையாது. மலர்மகள் குறிப்பிடும் செல்வமென்பது எதென்று தெரிந்தால், பலர் இதை மதிக்கக்கூட மாட்டார்கள்! 😏

மலர்மகள் குறிப்பிடும் செல்வமானது மெய்யறிவாகும். காசு, பணம், துட்டு, பிட்காயின்... இல்லை!

இவ்வினைமுறையை உருவாக்கியது ஆரிய->பௌத்த->நாமப்பேர்வழிகளாகும். சைவம் காளையை போற்றுவதால், அதற்கு போட்டியாக, பசுமாட்டை நாமம் போற்றுகிறது. சைவம், கல்லாலான காளையை உடையவருக்கு முன்னே வைத்தால், நாமம், உயிருள்ள பசுமாட்டை பெருமாளுக்கு முன் கொண்டுவந்து, திருப்பி நிறுத்துகிறது.

பெருமாள் சிலைகள் மட்டும் உயிர்பெற்று நகருமானால்... மீண்டும் கோளரி உருவமெடுத்து (ஆரியத்தில், சிங்கம்), "அடேய், என் பொஞ்சாதி குடியிருக்கிற இடமாடா அது?" என்று முழங்கியவாறு (ஆரியத்தில், கர்ஜித்தவாறு), நாமப்பேர்வழிகளின் மீது பாய்வார்!!!

😆😂😂🤣😍

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮