கேள்வி: 'பரவாயில்லை' என்பது தமிழ்ச் சொல் அல்ல. இதற்கு சரியான தமிழ்ச் சொல் எது?
பதில்: உண்மையில் பரவாயில்லை என்பது அழகிய தமிழ்ச்சொல்லே.
இதிலிருந்துதான் பர்வாநகி என்ற பிறமொழிச் சொல் பிறக்கிறது.
பரு, பருவரல் ஆகிய தமிழ்ச்சொற்கள் துன்பம் / துன்புறுதல் என்னும் பொருளைத் தருபவை. இவை சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் பயின்று வருபவையே. சில சான்றுகள் மட்டும் கீழே:
🔸 பருவரல் எவ்வம் களை மாயோய் என - முல் 21
🔸 இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே - நற் 70/9
🔸 நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நற் 78/6
🔸 இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் - புறம் 174/4
🔸 இமைப்பின் பருவரார் - குறள்: 1126
🔸 பருவந்து பாழ்படுதல் இன்று - குறள்: 83.
பரு + ஆய் + இல்லை = பருவாயில்லை = துன்பமாக இல்லை.
பருவாயில்லை என்பதே சரி. பரவாயில்லை என்பது மருவு.
"உங்களுக்குக் கடினமாக இருந்தால் விட்டுவிடுங்கள்"என்று ஒருவர் கூற,
"இல்லை, இது எனக்குத் துன்பமாக / கடினமாக இல்லை" என்று நாம் கூறுவதற்காக,
"பருவாயில்லை / பரவாயில்லை" என்று கூறுவது நம் வழக்கம். இதில் வரும் "இல்லை" என்னும் சொல்லானது பிறமொழியில் "நகி" என்று மாறி, பருவாநகி / பர்வாநகி என்றாகிவிட்டது. எனவே, பருவாயில்லை என்பது தமிழ்ச்சொல்லே! இனிமேல்,
பருவாயில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.
-- 'திருத்தம்' பொன். சரவணன்
No comments:
Post a Comment