Friday, August 21, 2020

மூத்தோன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! 🌺🙏🏽

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.

#ஆனைமுகத்தானை பரம்பொருளாகவும் காணலாம்; சிவகுடும்பத்தில் ஒருவராகவும் காணலாம். சிவகுடும்பத்தில் ஒருவராகும் போது அவர் அறிவைக் குறிக்கிறார். அவரை பரம்பொருளாகக் காணும் போது...

🌷 அவரது யானை உருவம் உணர்த்துவது நமது நினைவுகளை! முதன் முதலில் எழும் "நான்" என்பதிலிருந்து அனைத்துமே நினைவுகள் தாம்; எண்ணங்கள் தாம். நினைவுகளின் குவியலே நாம். எல்லா நினைவுகளையும் நீக்கிவிட்டால் இங்கு எதுவும் மிஞ்சாது. யாரும் இருக்க மாட்டார்கள்.

எனவே, நினைவாற்றலுக்குப் பெயர் பெற்ற யானை உருவத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

🌷 #முறக்கன்னன் தனது வலது தந்தத்தை உடைத்து தனது வலது கையில் வைத்திருக்கும் அமைப்பு உணர்த்துவது:

🔹 நம் வாழ்க்கை நம் கையில்
🔹 தீதும் நன்றும் பிறர் தர வாரா

சென்ற பிறவிகளில் நாம் ஆடியக் கூத்துகளின் விளைவுகளில் ஒரு பகுதி இப்பிறவியாக அமைந்திருக்கிறது. மீதமிருப்பவையும், இப்பிறவியில் நாம் சேர்ப்பவையும் இனி வரும் பிறவிகளாக அமையும்.

சில ஓவியங்களில் #வேழமுகத்தான் மகாபாரதம் எழுதுவது போல் வரைந்திருப்பர். அந்த மகாபாரதம் குறிப்பது நமது வாழ்க்கையை! "வியாச பெருமான் சொல்ல சொல்ல #ஐங்கரன் எழுதினார்" என்று படித்திருப்போம். இங்கு வியாசர் பெருமாளுக்கு சமம். பெருமாள் மாயைக்கு சமம். மாயை என்பது உடல், உலகக் காட்சிகள். இந்தக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணராமல் மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மகாபாரதத்தை எழுதிக் கொண்டேயிருக்கிறோம்!!

🌷 #வாரணனின் மேல் இடது கையிலிருக்கும் பாசக்கயிறு உணர்த்துவது: நமது பற்றுகளுக்கு நாமே காரணம். நமது பற்றுகளை நாமே சேர்த்துக் கொள்கிறோம். உலக வாழ்க்கை எனும் மாயையிடம் நாமே சிக்கிக் கொள்கிறோம்.

🌷 #ஒற்றைக்கொம்பனின் மேல் வலது கையிலிருக்கும் மழு / அங்குசம் உணர்த்துவது:

🔹 மழு எனில்: நமது பற்றுகளை நாமே அறுத்தெறிய முடியும்.
🔹 அங்குசம் எனில்: நமது ஆணவத்தை நாமே போக்கிக் கொள்ள முடியும்.

🌷 #மூத்தோனின் இடது கையிலிருக்கும் சிவலிங்கம் உணர்த்துவது: தன்மையுணர்வில் நிலைபெறுவதும் (சிவமாவதும்) நம்மிடம்தான் உள்ளது.

எல்லாம் நம்மிடமிருந்தும், வாழ்க்கையை வளர்க்கவே - பற்றுகளைச் சேர்த்து கொள்ளவே - நாம் விரும்புகிறோம். எனவேதான் #நால்வாயனின் வலது கையில் உடைந்த தந்தமும், இடது கையில் சிவலிங்கத்தையும் கொடுத்திருக்கின்றனர் நம் சமயப் பெரியோர்கள்.

🌷 #தும்பிக்கையான் அறிவைக் குறித்தால் அவரது ஊர்தியான எலி (சுண்டெலி, பெருச்சாளி) குறிப்பது அறியாமையை (மாயை). அறியாமை என்பது இருள். எனவேதான், இருட்டில் வாழும் கருமை நிற எலியை ஊர்தியாகக் கொடுத்துள்ளனர். நமக்கு அன்னியமாக ஒன்று இருப்பதாகக் கருதுவதே அறியாமை. இது ஆசைக்கு இடங்கொடுக்கும். ஓர் ஆசை பல ஆசைகளாக வெகு குறுகிய காலத்தில் பெருகிவிடும். எலிகளும் வெகு குறுகிய காலத்தில் எண்ணிக்கையில் பெருகிவிடும். #பூழ்க்கைமுகனுக்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டையை (அல்லது இனிப்பை) எலி உண்ணுவது போல் வரைந்திருப்பார்கள். இதன் பொருள்: நம்மிடமுள்ள மெய்யறிவை அறியாமை அழித்துவிடும்.

🌷 மொத்தத்தில் #ஆகூர்தியானின் உருவம் உணர்த்துவது:

🔹நம் வாழ்க்கை நம் கையில்
🔹மாயையிடம் சிக்கிக் கொள்வதும் நாமே
🔹அதனிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் நாமே
🔹நிலைபேறும் நம்மிடமே உள்ளது
🔹உடல், உலகக் காட்சிகளைக் கண்டு அச்சப் படத்தேவையில்லை. அவை தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் நாம் நாமே.

oOOo

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா

-- ஒளவைப் பாட்டி

oOOo

இவ்விடுகையில் நான் பயன்படுத்தியுள்ள சில பிள்ளையார் பெயர்களின் பொருள்:

🔹முறக்கன்னன் - முறம் போன்ற காதுகளைக் கொண்டவர்
🔹வாரணன் - யானை உருவத்தான்
🔹நால்வாயன் - தொங்கும் வாயை உடையவர்
🔹பூழ்க்கைமுகன் - யானைமுகன் அல்லது தும்பிக்கை முகன்
🔹ஆகூர்தியான் - பெருச்சாளியை ஊர்தியாகக் கொண்டவர்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(இணைப்புப் படங்கள்: இந்தோனேசியாவிலுள்ள புரோமோ மலையின் மீதமைந்திருக்கும் பழமையான பிள்ளையார். பின்புறம் இருப்பது ஓர் எரிமலை.)

No comments:

Post a Comment