Wednesday, August 19, 2020

முளைப்பாரி / முளைப்பாலிகைச் சடங்கின் ஆன்மிக அடிப்படை

முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁

ஆன்மிகம் தான் முளைப்பாரியின் அடிப்படை! பெண்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது. பிறப்பறுக்கும் மெய்யறிவுக்கு எதிரானது. உலக வாழ்க்கையைப் போற்றுவது. அவ்வாழ்க்கைக்கு அடிப்படையான ஆசைகளை ஊக்குவிப்பது.

🔸#முளைப்பாரி - மண்ணில் முளைத்திருக்கும் நாற்றுகள். பாரி - மண். பாரியாள் - மனைவி. மண், தன் மீதும் விழும் மற்றும் தனக்குள் இடப்படும் விதைகள் வளர இடங்கொடுக்கும். மனைவி, கணவர் தனக்குள் இடும் விந்து வளர இடம் கொடுப்பவர்.

🔸#முளைப்பாலிகை - மண்ணும் அதை தாங்கியிருக்கும் பாத்திரமும் (மண் குடம், மூங்கில் / பனையோலைக் கூடை) பாலிகையாகும். முளைப்பாரி என்பதை விட முளைப்பாலிகை என்பதே சரி.

🔹பாத்திரம் - நம் உடல்
🔹வளமான மண் - நல்ல மனது
🔹இடப்படும் நல்விதைகள் - நல்ல ஆசைகள்

🔸முளைப்பாலிகையை பூசையறையில் இருட்டானப் பகுதியில் பகலவனின் ஒளி தீண்டாத வகையில் வைத்து வளர்ப்பர்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வோம். அது, பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 உடலுடன் இருந்த காலம். அச்சமயம், திருவருணையில், பெரும் கனவுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவரது கனவு: தனது மகன் மெக்காலே கல்வியை நன்கு படித்து, மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தில் நன்கு பேசி, பாரதக்கொல்லிகளான வெள்ளையர்களின் தாயகமான இங்கிலாந்து சென்று, பொய் பேசவும் பணம் கறக்கவும் கற்று (அதாவது, பாரிஸ்டர் பட்டம் பெற்று), தாயகம் திரும்பி, பெரும் பொருள் ஈட்டி, வாழ்வின் அனைத்து வசதிகளையும் பெற்று, நிம்மதியாக வாழவேண்டும் என்பது.

இவர் தனது மகனை பகவானின் அருகில் செல்லவிடுவாரா? அப்படியே செல்ல நேர்ந்தாலும் பகவானின் அறிவுரைகளைப் படிக்கவோ சிந்திக்கவோ விடுவாரா?

இதைத்தான் "பகலவனின் ஒளி படாமல் இருட்டில் வைத்து முளைப்பாலிகையை வளர்க்க வேண்டும்" என்பது குறிக்கிறது.

🔹பகலவன் - பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்

🔹பகலவனின் ஒளி - நமக்குள் உதிக்கும் மெய்யறிவு அல்லது பகவான் போன்றோரின் அறிவுரைகள்.

🔹இருட்டு - மெய்யறிவைப் பற்றிய அறிவின்மை. அறியாமை.

🔸9 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - 9 விதைகள் நமது உடலிலுள்ள 9 துளைகளைக் குறிக்கும். எனில், முளைப்பாலிகை என்பது நமது உடலைக் குறிக்கும். செழித்து வளரும் பயிர்கள் என்பது நம் உடலைக் கொண்டு இவ்வுலகில் நாம் விளைவிக்கும் நல்விளைவுகள். பாலிகையைத் தாங்கும் பெண் என்பவர் உலகை இயக்கும் இறையாற்றல் - காளியன்னை!

🔸21 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - நமது உடலிலுள்ள 5 உணரும் பொறிகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் 5 உணர்வுகளையும், 5 தொழிற்கருவிகளையும், உடலினுள் இயங்கும் 5 காற்றுகளையும் மற்றும் மனதையும் குறிக்கும். மொத்தத்தில், நமது உடலைக் குறிக்கும். மேலேச் சொன்ன மீதம் யாவும் இங்கும் பொருந்தும்.

🔸சில ஊர்களில், அம்மன் கோயிலுக்கு அருகில், பகலவனின் ஒளி புகாவண்ணம் ஒரு கீற்றுக்குடிசையை நன்கு கட்டி, அதில் ஊராரின் முளைப்பாலிகைகளை வைத்து பராமரிப்பர். இதற்கென்று நல்ல பக்குவமுள்ள ஒரு பெண்ணை நியமிப்பர். அவர் அம்மனின் தீவிர பத்திமையராக இருப்பார். மிகவும் சுத்தமானவராக இருப்பார். அக்குடிசையில் தங்கியிருக்கும் வரை தலைவாராமல், தலைக்கு எண்ணெய் தடவாமல், எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருப்பார்.

பல துளைகளைக் கொண்ட கீற்றுக்கொட்டகை என்பது சற்று பெரிய 9 துளைகளையும், எண்ணற்ற வியர்வைத் துளைகளையும் கொண்ட நமது உடலுக்கு சமம். கொட்டகையினுள் வைத்துப் பராமரிக்கப்படும் முளைப்பாலிகைகள் என்பவை நமக்குள் இருக்கும் எண்ணற்ற எண்ணக்குவியல்களுக்கு சமம். பராமரிக்கும் பெண் என்பவர் காளியன்னைக்கு சமம். (ஒப்பனையற்ற அவரது கோலத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்)

🔸9 அல்லது 10ஆம் நாள், முளைப்பாலிகைகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, அம்மனின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு, கோயில் வளாகத்திலேயே பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்துவிட்டு, படைத்ததை எல்லோருக்கும் பிரித்து வழங்கி விட்டு, முளைப்பாலிகைகளை நீர் நிலைகளில் விட்டுவிடுவர்.

🔹நமது பண்டைய மன்னர்கள், தங்களை தங்களது குல தெய்வத்தின் அடியவர்களாக, பணியாளர்களாக கருதிக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். (முற்காலச் சோழர்கள் - உய்யக்கொண்டான் திரு உச்சிநாதர் / கற்பகநாதர் 🌺🙏🏽, பிற்காலச் சோழர்கள் - திரு கூத்தப்பெருமான் 🌺🙏🏽, பாண்டியர்கள் - திரு சொக்கநாதப் பெருமான் 🌺🙏🏽, சேதுபதிகள் - இராமேச்சுரம் திரு இராமநாதப் பெருமான் 🌺🙏🏽). இவ்வாறே இவர்களும் (பாலிகைகளை சுமந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்) தங்களை அம்மனின் அடியவர்களாக கருதிக் கொண்டு, வாழும் வாழ்க்கையை அம்மனின் திருப்பணியாக கருதி வாழவேண்டும் என்பதே வளர்த்த முளைப்பாலிகைகளை அம்மனின் பாதங்களில் வைப்பதின் பொருள்.

- முளைப்பாலிகைகள் - நமது உடல்

- அம்மனின் பாதத்தில் வைப்பது - நம்மை அம்மனின் பணியாளனாகக் கருதுவது

🔹பிறந்துவிட்டோம். வளர்ந்துவிட்டோம். ஆசைகளை, குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டோம். உழைக்கிறோம். போராடுகிறோம். பொருளோ, அறிவோ, பாடமோ சம்பாதிக்கிறோம். சம்பாதித்ததை (பொங்கியதை) தன்னோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் ஏனையோருக்கும் பிரித்துக் கொடுப்பதே பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்குவது.

🔹எவ்வளவு வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தாலும் ஒரு நாள் இறக்கவேண்டிவரும். எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்தவற்றை எவ்வளவு போற்றிப் பாராட்டிப் பாதுகாத்திருந்தாலும் அனைத்தும் ஒரு நாள் நம்மைவிட்டு விலகிவிடும். இவையே முளைப்பாலிகைகளை நீர்நிலைகளில் விடுவதின் பொருள்.

இதை உணர்ந்து கொண்டால், உணர்ந்ததை என்றும் நினைவில் கொண்டால் சுயநலம், அகந்தை, பேராசை போன்றவற்றை ஒதுக்கி, முறையுடன் நீதியுடன் அடக்கத்துடன் எளிமையாக அமைதியாக வாழ்வோம்.

(இன்று ஆறுகள் இல்லாததால் கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் விடுகின்றனர். ஆறுகளில் விடுவதே சரி. ஆற்றுநீர் காலவெள்ளத்திற்கு சமம். காலவெள்ளத்தில் தோன்றும் குமிழ்கள் போன்றது படைப்பு. பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காலபைரவர்.)

oOOo

மீண்டும் ஒரு முறை சுருக்கமாக...

முளைப்பாலிகை திருவிழா உணர்த்துவது:

🔹உலகை பரிபாலிப்பது காளியன்னை
🔹 உலகில் காணப்படுபவை யாவும் ஏதாவது ஒரு உடலால் விளைந்தவையே
🔹 விளைவு செயலிலிருந்தும், செயல் எண்ணத்திலிருந்தும் தோன்றுகிறது. ஆகையால், நமக்குள் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.
🔹 வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அகந்தையற்று தன்னலமற்று பொறுப்புடன் வாழ்ந்து, கிடைப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.

oOOo

வடக்கிருந்து சமாதி நிலையடையும் போது உலகத்தோற்றம் மறைந்து கருப்பாக இருக்கும். நம்மிடம் இன்னமும் பழவினைகள் மீதமிருப்பின், அவற்றைக் கொண்டு நம்மை சமாதி நிலையிலிருந்து வெளியே தள்ள இறையாற்றல் முயற்சிக்கும். இன்னதென்று உணரமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்து அச்சமூட்ட முயற்சிக்கும். பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கிய பெரியவர்கள் இத்தோடு புறமுகமாகிவிட்டார்கள் என்பது என் கருத்து. இதனால் தான், கருப்பு நிறத்தையும், அதில் கொடுமையான உருவங்களையும் தோற்றுவித்த இறையாற்றலை முடிவாகக் கருதி, கருப்பாயி (கருப்பு + ஆயி - காளியன்னை) என்று பெயரிட்டு, பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கியுள்ளனர்.

இன்னும் சற்று தாக்குப் பிடித்திருந்தால், முயற்சித்திருந்தால் அடுத்த நிலைக்கு சென்றிருப்பர். காட்சிகளை விட காண்பவனே உயர்ந்தவன். மேற்சொன்ன காட்சிகளைக் கண்ட தாமே என்றுமுள்ள மெய்ப்பொருள் (சிவம்) என்பதை உணர்ந்திருப்பர். பெண்தெய்வ வழிபாட்டுப் பிரிவை உருவாக்காமல், ஏற்கனவே இருந்த சிவ (மெய்ப்பொருள்) வழிபாட்டையேக் கடைபிடித்திருப்பர்.

(இங்கே உணர வேண்டிய மிக முக்கியமான செய்தி: மத & கருத்து உரிமை!! குறையுள்ளது என்று தெரிந்தும் அன்றைய சமயப்பெரியவர்கள் பெண்தெய்வ வழிபாட்டை அனுமதித்திருக்கிறார்கள். இதுவே பாலைவன மதங்களாக இருந்திருந்தால்...? ஒரு கூட்டம் வெட்டியே அழித்திருக்கும்! இன்னொன்று நயவஞ்சகமாக ஏமாற்றி முடித்திருக்கும்!!)

இந்தப் #பெண்தெய்வ #வழிபாடு பிற்காலத்தில் மூன்றாக பிரிந்துவிட்டது:

🔹 காளியம்மன், மாரியம்மன், அங்காளம்மன், ...
🔹காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், கோமதியம்மன், விசாலாட்சியம்மன், லலிதா திரிபுரசுந்தரி, ...
🔹 பெருமாள் (பெண்தெய்வ வழிபாட்டில் எந்தக் கோட்பாட்டைப் பெண்ணாகக் கருதினரோ அதை வைணவம் ஆணாக மாற்றிக்கொண்டது)

oOOo

கருப்பு நிறம், கொடுமையான அச்சமூட்டும் காட்சிகள் போன்றவை காளியன்னையின் அடையாளங்கள் என்பதால் தான் முளைப்பாலிகை குடிசையை பராமரிக்கும் பெண் (காளியன்னையாகக் கருதப்படுபவர்) திருவிழா காலம் முழுவதும் தலைவிரி கோலமாக, எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment