Wednesday, September 25, 2019

இந்த வார ஞானானந்தம் = ஒரு ஆரம்பநிலை பைத்தியம் + 23ஆம் புலிகேசிக்கு சமமான ஒரு அரசர் + ஒரு முக்கால் வேக்காடு!! 😝



காலையில் முதன் முதலில் கண்ணில் படும் நபரை ராமா என்று சொல்லச் சொல்லி, பின்னரே வேலையைத் துவங்குவாராம். அப்படிச் சொல்லாவிட்டால், சண்டையிட்டு அரசர் வரை செல்வாராம். வேலை வெட்டி இல்லாத புலிகேசி அரசரும், இது ஒரு வழக்கென்று விசாரிப்பாராம். விசாரித்து முடிக்காமலேயே வைக்கப்படும் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாராம். இன்னும் ஒரு முறை இறைவனின் பெயரைச் சொன்னாலே விடுதலை என்று உணர்ந்த அதி தீவிர பத்திமர், இன்னும் குடும்பத்தின் மேல் பற்று வைத்து, பரம்பொருளை நம்பாமல் அரசரை நம்புவாராம். இறைபெயரைச் சொன்னவுடன், கபாலம் திறந்து, ஒரு ஒளிச்சுடர் புறப்பட்டு (கண்டசாலா  பின்னணி இசையுடன் 😁) ஆகாயம் நோக்கிச் சென்றதாம் (ஏனெனில்,  அங்கு தான் Z+ பாதுகாப்புடன், அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் கொண்ட பரம்பொருளின் ஆஃபீஸ்-கம்-ரெசிடன்ஸ் உள்ளது! 😜).

இன்னும் எவ்வளவு காலம் தான் மக்களை மாக்களாகவே வைத்திருக்க முயற்சிப்பரோ? 😔

ஜபத்தின் பொருள், எல்லா நினைவகளும் / எண்ணங்களும் விலகுவதற்காக ஒரு நினைவை / எண்ணத்தை உறுதியாகப் பற்றுதல் (பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 விளக்கம்). அந்த ஒரு எண்ணம் ராமரைப் பற்றியதாகவும் இருக்கலாம். அவரது மாமனார் இராவணனைப் பற்றியதாகவும் இருக்கலாம் (வான்மீகி இராமாயணம் தவிர வேறு இராமாயணங்கள் எத்தனையோ உண்டு. சிலவற்றில் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.). எல்லாவற்றிலும் சிறந்ததாக பகவான் அருளுவது நான் என்னும் நமது தன்மையுணர்வை ஜபிப்பது ("நான் நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும் இருதயத்திற்கு கொண்டு போய்விடும்").

ஜபம் வெகு தீவிரமடையும் போது அஜபமாக மாறும். தானாக நடக்கும். தானாக நடக்கும் ஜபத்தைக் காண (சாட்சி) ஒருவன் இருக்க வேண்டுமல்லவா? அந்த ஒருவன் தான் நாம். மனதின் சாட்சி. என்றும் உள்ளபொருள். நாம் எப்போதுமே உள்ளபொருளாக இருந்தாலும், நம்மை நாம் அவ்வாறு உணர்வதில்லை. அவ்வாறு உணர்வதற்காகத் தான் ஜபம், தியானம், தன்னாட்டம், திருத்தல பயணம் என பல உத்திகளை நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

ஒரு மண்குடத்தின் உள்ளேயும் வெளி உள்ளது. வெளியேயும் வெளி உள்ளது. இரண்டையும் சேர்க்க, மண்குடத்தை உடைத்தால் போதும். இது போன்றது தான் இறைவனை அடைதலும். இந்த மொத்த அண்டமும் இறைவன் தான். நம்முள் சாட்சி மாத்திரமாக இருப்பதும் அவர் தான். "நான் இன்னார்" என்ற மண்குடத்தை உடைத்தால் போதும். கபாலம் திறந்து, கண்டசாலா இசையுடன், ஒளிச்சுடர் வானோக்கி செல்லத் தேவையில்லை!! 😛

ஜபத்தின் முடிவு அஜபம். தியானத்தின் முடிவு தியானிப்பவனே தியானிக்கப்படுபவன் என்று உணர்தல். இவ்விரண்டு உத்திகளும் வெற்றி பெற பகவான் அறிவுருத்தும் நுணுக்கம்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உண்ணலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

அவ்வப்போது ஜபித்தலைக் / தியானித்தலைக் காட்டிலும் தொடர்ந்து, ஆற்றின் நீரோட்டத்தைப் போல, ஊற்றப்படும் நெய்யின் வீழ்ச்சியைப் போல ஜபித்தலே / தியானித்தலே சிறப்பானதாகும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

No comments:

Post a Comment