Saturday, September 21, 2019

இவ்வுலகில் வாழ்வது எங்ஙனம்?



அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மெளனமாய் இருக்கை நன்று.

-- #பகவான் #திருரமண #மகரிஷி 🌺🙏🏼 தன் தாய்ககு எழுதிக் காட்டியது. இதுவே பகவானருளிய முதல் அறிவுரையுமாகும். இதற்கு சமமான #திருமுருகனார் சுவாமிகளின் 🌺🙏🏼 செய்யுள் (#குரு #வாசகக் #கோவை #150):

பதம் பிரிக்காமல்:

ஊழேகூ ழாக உணர்ந்தோ ருளங்கலங்கிக்
கூழுக்கா வென்றுங் குலைவுறார் - கூழதனை
வேண்டினும் வேண்டா விடினு மெவர்க்குமவ்
வூண்டா னொழிய துணர்.

பதம் பிரித்து:

ஊழே கூழ் ஆக உணர்ந்தோர் உளம் கலங்கிக்
கூழுக்கா என்றும் குலைவு உறார் - கூழ் அதனை
வேண்டினும் வேண்டா விடினும் எவர்க்கும் அவ்
ஊண் தான் ஒழியாது உணர்.

(ஊழ் - தலைவிதி; கூழ், ஊண் - துய்க்கும் பொருள்கள்; குலைவு - கவலை; ஒழியாது - தவறாது)

அகத்தில் தோன்றும் எண்ணங்கள் முதல், புறத்தில் காட்சிகளாக, பொருட்களாக, பட்டறிவாக நமக்கு வந்து சேருபவை அனைத்தையும் கூழ் எனும் சொல்லின் மூலம் குறித்தது அழகு!!

பொருள்: இந்தக் கூழானது அவரவர் முன்வினைப்படி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தவறாது வந்து சேரும். இதை உணர்ந்தவர்கள் எதற்காகவும் கலங்கமாட்டார்கள்.

இதே கருத்தை #வள்ளுவப் #பெருந்தகை-யும் 🌺🙏🏼 376-ஆம் குறளில் தெரிவிக்கிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்: முன்வினையால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போய்விடும். உரியவை எனில், வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் நம்மை விட்டுப் போகமாட்டா.

ஊழைப் பற்றி பகவானும், சுவாமிகளும் மேற்சொன்னவற்றில் அதை கையாளுவதைப் பற்றியும் சொல்லிவிட்டார்கள் (மௌனமாய் இருக்கை நன்று, விதியை உணர்ந்து உள்ளம் கலங்காதிருத்தல்). தெய்வப் புலவரோ அறத்துப்பாலின் ஆரம்பத்திலேயே வழியை சொல்லிவிடுகிறார்:

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

🏵️ வேண்டுதல் வேண்டாமை இலான் அடி - இறைவனடி.

🌻 மெளனமாய் இருக்கை நன்று - மௌனம் - "நான் என்னும் நினைவு கிஞ்சித்தும் இல்லாத நிலையே மெளனம்" - நான் என்னும் நினைவு - நான் இன்னார் என்னும் நினைவு - நான் இல்லாத இடத்திலும் தான் இல்லாமல் போவதில்லை. இதை "பூன்றமாம் அஃதே பொருள்" - உள்ளபொருள் / பரம்பொருள் - என்கிறார் பகவான்.

🌼 உளம் கலங்காமல் - கலங்கலுக்கு எதிர்பதம் தெளிவு - உள்ளத் தெளிவு. எப்போது கிட்டும்? உள்ளல் அற, உள்ளத்தே உள்ளபடி உள்ளும் போது. எண்ணங்களற்று நாம் நாமாக இருக்கும் போது. உள்ளபொருளாக உள்ள போது.

இவையனைத்தும் ஒன்றையே உணர்த்துகின்றன: வருவதை வர விட்டு, போவதை போக விட்டு, நாம் நாமாக இருப்பது மட்டுமே நம்மால் முடிவதும், நாம் செய்ய வேண்டியதும் ஆகும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

No comments:

Post a Comment