Tuesday, March 25, 2025

தொல்தமிழர்களின் வானவியல் பேரறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு! 😍



செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே

-- புறநானூறு #30

🔸 சிவந்த பகலவனிடமிருந்து வெளிப்படும் வெளிச்சமும் வெப்பமும்,
🔸 பகலவனின் இயக்கமும்,
🔸 அவ்வியக்கத்தால் ஏற்படும் [காந்த] மண்டலமும்,
🔸 சுழன்றடிக்கும் காற்றை கொடுக்கும் திசைகளும்,
🔸 நிலைப்பு என்ற பண்பைத் தவிர வேறெதுவும் இல்லாத வானமும்
🔸 ஆகிய எல்லாவிடங்களுக்கும் நேரில் சென்று, அளந்து பார்த்தவர் போன்று கணித்துச் சொல்லும் அறிஞர்கள் இருந்தனரே!!

பகலவனையே கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியல் அரிச்சுவடியை வெ(கொ)ள்ளையன் கற்கத் தொடங்கியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர். ஆனால், நாமோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வானவியலில் முனைவர் பட்டமே பெற்றிருந்திருக்கிறோம்! 💪🏽

வாளோடு தோன்றிய மூத்தகுடி என்றுமே பகுத்தறிவோடு விளங்கியது என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.

(வேர்: திரு மாரிராஜனின் முகநூல் பதிவு)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, March 22, 2025

ஊழ் / வினைப்பயன் என்பதின் ஆரியமாக்கமே கர்மா!! 😍🥳😎😘


"கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று எழுதியிருந்த ஒரு சோதிட நண்பருக்கு, நான் எழுதிய பதிலை, ஒரு இடுகையாக மாற்றியுள்ளேன்:

💪🏽 5,345 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்புக் கலன்களை பயன்படுத்தியிருக்கிறோம் என்பது உறுதியாகியுள்ளது. (எனில், அதற்கும் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இரும்பை கண்டுபிடித்திருக்கிறோம் என்பது உறுதியாகிறது!)

💪🏽 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பானை ஓடுகளிலிருந்து, இங்கு, குடியானவர்களுக்கும் கல்வியறிவு இருந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கொடுங்கோலன் அசோகனுக்கு முன்னர், வடக்கில் கல்வியறிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 1,800 ஆண்டுகளுக்கு முன்னர், அசுரத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.

💪🏽 1,600 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கில் எண் கணிதம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. (500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஐரோப்பியர்களுக்கு பின்னக் கணக்கே தெரியாது!)

💪🏽 தமிழ்நாட்டின் கற்காலம் - 15-17 இலட்சம் ஆண்டுகள். வடக்கின் கற்காலம்... வெறும், 2-2.5 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே!

💪🏽 தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் பழமையான மரபணு - 65,000 ஆண்டுகள். இதுவே, வடக்கில்... வெறும், 22,000 ஆண்டுகள் மட்டுமே!

😍 பூம்புகார் அகழாய்வு முடிந்த பின்னர், தமிழக பண்பாட்டின் அகவை இன்னும் பல்லாயிரமாண்டுகள் முன்னோக்கிப் போகும்.

🤭 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் என்ற அசுரர், தனது நூலொன்றில், தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் 'ம்' & 'ன்' எழுத்துக்களை மட்டும் நீக்கிவிட்டு, 'ஆ' ஓசையை சேர்த்து, அசுரச் சொற்களாக மாற்றாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது, தமிழ்ச்சொற்களை களவாடாதீர்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார்!!

இத்தனை தரவுகள் கிடைத்த பிறகும், "கர்மா என்பதின் தமிழாக்கமே ஊழ்" என்று கொள்வதை விட, "ஊழ் / வினைப்பயன் என்பதின் ஆரியமாக்கமே கர்மா" என்று கொள்வதே சரியாகும்.

பிறப்பேடுகளின் தொடக்கத்தில் வரும் "ஜனனீ ஜென்ம..." என்ற அசுரச் செய்யுளுக்கு பதிலாக, "வகுத்தான் வகுத்த...", "ஊழிற் பெருவலி..." போன்ற திருக்குறள்களையோ, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சங்கத்தமிழ் சொற்றொடரையோ பயன்படுத்துவதே நமக்கு பொருத்தமாகும். நமது கடமையுமாயாகும்.

எல்லா வகைகளிலும் தொல் தமிழ்நாடே, தென்தமிழர் பண்பாடே & திருநெறியத்தமிழே பழமையானதும், சிறந்ததும், மேன்மையானதும் ஆகும்! 💪🏽💪🏽

(மேலுள்ள தரவுகள் யாவும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான திரு மன்னர் மன்னனின் காணொலிகளிலிருந்து பெறப்பட்டவை.)

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, March 17, 2025

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!!


(கடந்த மகளிர் திருநாளுக்காக ஒரு குழுவில் பதிவிட்டதை, சற்று மாற்றி, இங்கு பதிவிடுகிறேன்.)

🔸 ஆவது - உள்ளபொருளாய் ஆவது. மெய்யறிவு அடைவது. பிறவிப்பெருங்கடலை கடப்பது. தன்னிலைக்கு மீள்வது.

🔸 அழிவது - மற்றபொருளாய் ஆவது. மெய்யறிவை இழப்பது. பிறவிப்பெருங்கடலில் விழுவது. தன்னிலை தவறுவது.

எல்லாமே மனதின் (அன்னையின்) வேலையென்பதாலே "ஆவதும்... அழிவதும்..." என்று சொல்லி வைத்தார்கள்.

oOo

🔸 தாய் - தம்+ஆய் - என் இறைவி.

🔸 அன்னை - அ+ன்+ஐ

அ - தமிழ் எழுத்துகளின் முதல்.
ன் - தமிழ் எழுத்துகளின் இறுதி.
ஐ - வியப்பு

அதாவது, யாவுமானவளே என்ற வியப்பு!!

"வையக மகளிர் திருநாள்" என்று வெ(கொ)ள்ளையன் முடிவு செய்த ஒரு நாளை கொண்டாடுவதை விட,

🔸 செயற்கரிய செயல்களை செய்து, நாயன்மார்கள் வரிசையில் அமரும் பேறு பெற்ற ஒரே நாயன்மாரான திரு காரைக்கால் அம்மையார்

🔸 தொல் தமிழரது மொழியும், நெறியும், வாழ்வியலும் அழிந்திடாது காத்த திரு மங்கையர்க்கரசியார்

🔸 எளிய செய்யுள்களால் தென்தமிழையும் அறத்தையும் பரப்பிய ஒளவைப்பாட்டி

🔸 வெ(கொ)ள்ளையனை புறமுதுகிட்டு ஓடச் செய்த வேலு நாச்சியார்

🔸 சோழரது படைகள் போருக்கு சென்றிருந்த சமயத்தில், அவர்களது [நெற்] களஞ்சியங்களை, [உணவுப்பொருள்] சேமிப்புக் கிடங்குகளை அழிக்க வந்த சாளுக்கிய படைகளை, தன்னந்தனியாக, சிறு படை கொண்டு சிதறடித்து விட்டு, உயிர்துறந்த வீரப்பெண்மணி (இவரையே, இன்று, முண்டகக் கன்னியம்மன் என்று வணங்குகிறோம்)

போன்றோரது திருநாளை மகளிர் நாளாக கொண்டாடுவதே சிறப்பாகும்.

யாதுமாகி நின்றாய் கோடுடைச் செல்வி!
தீது நன்மை எல்லாம் கானமர் செல்வி!
பொருள் ஐந்துமானாய் காடுறைச் செல்வி!
அறிவாகி நின்றாய் செல்வ செல்வியே!!

(முண்டாசுக் கவிஞரின் பாடலிலிருந்து சில சொற்றொடர்களையும், அன்னையின் பழந்தமிழ் பெயர்களையும் இணைத்துள்ளேன்.)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, March 15, 2025

முயல்+ஆமை கதையின் அடிப்படை மெய்யியலாகும்!


பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும், தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டால், வெற்றியடையலாம் என்ற கருத்தை அறிவுறுத்துவதற்காக கூறப்படும் இக்கதையின் அடிப்படையானது மெய்யியலாகும்.

oOo

முதலில், முயல் வெற்றி பெறுவது போன்று தோன்றும். இறுதியில், ஆமையே வெற்றி பெறும்.

முயல் = முயற்சி
ஆமை = முயலாமை

மனிதப்பிறவியின் குறிக்கோளானது பிறவாமையாகும். இதற்காக வடக்கிருத்தல் (அசுரத்தில், தியானம், தவம்), ஓதுதல் (அசுரத்தில், பாராயணம்), மெய் வருத்துதல் என பல்வேறு முயற்சிகளை (முயல்) செய்கிறோம். முன்னேறவும் செய்கிறோம். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல், எவ்வளவு முட்டி மோதினாலும் எதுவும் நடக்காது. அப்போது முயற்சிகளை கைவிடவேண்டும் (முயலாமை). மெய்யியலை பொறுத்தவரை, எப்போது தோற்கிறோமோ (முயற்சிகளை கைவிடுகிறோமோ) அப்போதே வெல்கிறோம்.

ஆனால், முயலாமை (ஆமை) என்ற இறுதி நிலையை அடைய, முதலில் முயற்சிகளை (முயல்) செய்தாகவேண்டும்.

இதையே, "முதலில் முயல் வெல்கிறது. இறுதியில், ஆமை வெல்கிறது." என்றொரு கதையாக புனைந்து வைத்துள்ளனர்.

oOo

ஒரு செய்தியை அப்படியே பதிவு செய்யாமல், ஏன் ஒரு கதையாக புனைந்தனர்?

எதை எளிதாக உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, சரியாக மற்றவர்களுக்கு கடத்த முடியும்? முயல்+ஆமை என்ற கதையையா? அல்லது, மேலுள்ள செய்தியையா?

oOo

முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்கள்

-- திரு அருட்கடல் பெருமான் (பகவான் திரு இரமண மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, February 27, 2025

தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா


இது இவரது கருத்தல்ல. திருவரங்கம் திருக்கோயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ள "கோயிலொழுகு" (நாமாசுரர்கள் (#) எழுதியது) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் இவர் கூறியிருக்கிறார். இது, பெரும்பாலும், உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)

இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!

oOo

இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.


இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!

திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:

> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது

மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.

மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.

oOo

சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:

🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,

🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.

மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.

(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)

oOo

இன்று,

💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?

நேற்று,

💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, February 18, 2025

கும்பத் திருவிழா: சிறு விளக்கம்


😔 கும்பத் திருவிழா நெரிசலில் சிக்கி 30+ பேர் இறப்பு!


😔 டில்லி தொடரி நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் இறப்பு!

😔 300 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

😔 பிரயாக்ராஜ் ஆறுகள் குளிக்க தகுதியற்றவை - நடுவண் மாசுக் கட்டுப்பாடு வாரியம்

ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நீர் நிலையில் மூழ்கியெழுந்தால் வீடுபேறு கிட்டுமென்று நம்புவது முட்டாள்தனம்!!

🌷 கங்கை - வெள்ளை.
🌷 யமுனை - கருப்பு.
🌷 கங்கையும் யமுனையும் கலக்குமிடம் - வெள்ளையும் கருப்பும் கலக்குமிடம் - ஒளியும் இருளும் கலக்குமிடம்.
🌷 வெள்ளை / ஒளி - நாம் - நமது தன்மையுணர்வு (சிவம்).
🌷 கருப்பு / இருள் - நம்மைத் தவிர மீதமனைத்தும் - மனம், உடல், வையகம் என மொத்த படைப்பு (அன்னை).
🌷 கங்கை+யமுனை = வெள்ளை+கருப்பு = ஒளி+இருள் = உணர்வு+படைப்பு = நாமெடுத்திருக்கும் பிறவி. அல்லது, நாம் வாழும் வாழ்க்கை!

🌷 காளை வீடு (அசுரத்தில், ரிஷப இராசி) - நிலைத்த வீடுகளிலொன்று (அசுரத்தில், ஸ்திர இராசி).
🌷 வியாழன் (அசுரத்தில், குரு) - இறையருள் / மெய்யாயரின் அருட்பார்வை (அசுரத்தில், குருவின் அருட்பார்வை).

🌷 கூடுதுறையில் (அசுரத்தில், சங்கமத்தில்) மூழ்கியெழும்போது, அதுவரை உண்ட ஒரு காய்கறியை, "இனி உண்ணமாட்டேன்" என்று உறுதி பூண்டல்:

🔸 காய்கறி - காய் - அசுரத்தில், காயம் - உடல்.
🔸 காயை விடுதல் - காயத்தை விடுதல் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை விடுதல்.

(உறுதி பூணாமல் வெறுமனே மூழ்கியெழுந்தாலும் இவ்விளக்கம் பொருந்தும்.)

🌷 இறுதியாக, யாவற்றையும் இணைப்போம்: காளை வீடு + வியாழனின் பார்வை + மூழ்கியெழுதல்:

ஒரு சமயத்தில், இறையருளால், அல்லது, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானின் அருட்பார்வையால், "நாம் இவ்வுடலல்ல" என்ற அறிவு தோன்றும். அப்போது அவ்வறிவை இறுகப் பற்றிக்கொண்டு, வாழ்வை உதறிவிடவேண்டும்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்" என்பது போல, செய்யும் வினைமுறைகளின் (அசுரத்தில், சடங்குகளின்) பொருளுணர்ந்து செய்தால் பயன் விளையும். இல்லையெனில், பொருட்செலவு, வீண் அலைச்சல், உயிரிழப்பு, நோய் தொற்று... போன்றவைதான் விளையும்!!

oOOo

அருள் நிறைவான அமுதக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, December 15, 2024

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 திருநெறியத் தமிழர்களின் தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

🪔 "தொல் கார்த்திகை நாள்" என்று திரு ஆளுடைய பிள்ளையாரால் (அசுரத்தில், திருஞானசம்பந்தரால்) சிறப்பிக்கப்பட்ட திருநாள்.

🪔 ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது திரு கண்ணபெருமானின் திருநாளோடு இணைத்துக்கொண்டார்கள் (அசுரத்தில், தீபாவளி - அவர் மெய்யறிவு பெற்ற நாள்).

🪔 விளக்கீடு உணர்த்தும் உட்பொருட்களில் ஒன்று:

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற பொய்யறிவை ஒதுக்கி, புறமுகமாக செல்லும் நமது கருத்தை நம் மீது (நமது தன்மையுணர்வின் மீது) நிறுத்தி, நாமே அழிவற்ற, இரண்டற்ற, தன்னொளி கொண்ட மெய்ப்பொருள் என்ற உண்மையை உணர்வதுதான், "புவியின் இதயம்" என்றழைக்கப்படும் திரு அண்ணாமலையாரின் மீது ஏற்றப்படும் விளக்கை காண்பதின் பொருளாகும்.

oOo

அனைவருக்கும் இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

🪔🎉🎊☀️

கருணாகரமுனி இரமணாரியன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻