Thursday, May 27, 2021

திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருநாள்!!

வைகாசி - மூலம் (28/05/21)

திருஞானசம்பந்தர் திருநாள்!!

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயிலில் உள்ள பெருமானின் விழா வடிவம்


சீர்காழியில் உள்ள பெருமான் பிறந்த இல்லம்


பெருமான் பிறந்த அறை


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயில்

பெருமான் மெய்யறிவு பெற்ற (ஞானப்பால் குடித்த) திருக்குளம் & முதல் பதிகம் பாடிய திருத்தலம்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே!!


திருக்கோலக்கா திருத்தாளமுடையார் திருக்கோயில்

பெருமான் பொற்றாளம் பெற்ற திருத்தலம்.


திருநெல்வாயில் அரத்துறை திரு உச்சிநாதர் திருக்கோயில்

பெருமான் முத்துச்சிவிகை, மணிக்குடை & பொற்சின்னங்களைப் பெற்ற திருத்தலம்.


திருமறைக்காடு (வேதாரண்யம்) திருமறைக்காடர் திருக்கோயில் (விசுவாமித்திர மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித்தலம்)

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிகம் பாடி மறைக்கதவை திறக்க, சம்பந்த பெருமான் பதிகம் பாடி திரும்பவும் மூடிய திருத்தலம்; கோளறு பதிகம் பாடிய திருத்தலம்.


கூடல் மாநகரம்

பெருமானின் பிறவிநோக்கம் ஈடேறிய திருத்தலம். இருள் சமயத்தினரை வென்று நம் மொழி, சமயம் & கலாச்சாரத்தைக் காத்த தலம். பெருமான் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்... நாம் பிறந்தமேனியர்களாக / மொட்டைகளாக கதியற்று என்றோ வடக்கத்தாருக்கு அடிமைகளாகியிருப்போம்!!

அன்னை தமிழைக் காப்பாற்றிய காரணத்தினால்தான் வடலூர் பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசகத்தை தனது வழிகாட்டி நூலாகக் கொண்டாலும், தனது மானசீக மெய்யாசிரியராக சம்பந்த பெருமானையேக் கொண்டார்.


திருமயிலை கபாலீச்சுரம்

என்றோ பாம்பு தீண்டி இறந்து சாம்பலாகிப் போயிருந்த பூம்பாவை அம்மையாரை பதிகம் பாடி உயிர்ப்பித்த திருத்தலம்.

(ஆனால், அவர் பதிகம் பாடியது இன்றிருக்கும் திருத்தலத்தில் அல்ல. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா உடைத்தெறிந்த மூலவரைக் கொண்டுவந்து, இன்றிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டப்பட்டது தான் தற்போதைய திருக்கோயில். உண்மையான கபாலீச்சுரத்தின் (ஒரு மாமுனிவரின் சமாதியின்) மேல்தான் பரங்கியரின் தோமையர் பேராலயம் கட்டப்பட்டுள்ளது. உண்மையான தோமையர் பாரதத்திற்கு வரவேயில்லை என்பதும், அவரது சமாதி இத்தாலியில் உள்ளது என்பதும் உறுதியான பின்னரும் இன்னமும் காட்சிகள் மாறவில்லை!)


திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) பெருமணமுடையார் திருக்கோயில்

பெருமானுக்கு திருமணம் நடந்த திருத்தலம். திருமணம் முடிந்தவுடன், மனதை கொள்ளை கொள்ளும் "காதலாகி கசிந்து..." பதிகத்தை அருளியவாறு, தனது மனைவி சொக்கியார், நாயன்மார்கள் திருநீலநக்கர், திருநீலகண்டர், முருகனார் ஆகியோருடன் மற்றும் வினைப்பயன் முடிந்திருந்த சிவனடியார்கள் சிலரோடு பெருமான் சிவசோதியுள் கலந்த திருத்தலம்.

🌺🌺🌺🙏🏽🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️


பெருமானின் மணக்கோலம்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!!

🌺🙏🏽🙇🏽‍♂️


பெருமானுக்கு உமையன்னை அமுதூட்டும் ஓவியம்

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி

-- உமாபதி சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

சிவாச்சாரியார் அருளிச்செய்த இந்த ஒரு பாடல் போதும் பெருமானின் அருமை பெருமைகளை உணர!

இது உமையன்னையின் துதி பாடலாகும். ஆனால், அன்னைக்கு 1.25 அடி தான்! பிள்ளைக்குத்தான் 2.75 அடி!!

வடக்கிலிருந்து வந்த மதங்களினால் ஏற்பட்ட இருளைப் (அறியாமை, மடமை) போக்கவும், பேருண்மைகளைக் (திருநீறு) காக்கவும், வடக்கத்தாரால் ஏற்பட்ட துன்பங்களை (அரந்தை) நீக்கவும் பிறவியெடுத்த காழியூர் பிள்ளை பசியாறிட திருமுலைப்பால் அளித்ததினால்தான் அன்னை போற்றுதலுக்கு உரியவராகிறாராம்!! ☺️

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

💮🌻🏵️🌸🌼

Monday, May 24, 2021

ஒண்டர் வுமன் 1984, ப்ளேட் ரன்னர் 2049 & ஃபோர்ட் x ஃபெர்ராரி

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம்.

(நம் செய்தி ஊடகங்கள் செய்வது போல், கூகுள் மொழிபெயர்ப்பானை பயன்படுத்தாமல், நேரடியாக மொழிபெயர்த்துள்ளேன். ஆகையால், சிற்சில வேறுபாடுகளைக் காணலாம்.)

oOOo


2020ஆம் ஆண்டு வெளிவந்த "ஒண்டர் வுமன் 1984 (Wonder Woman 1984)" என்ற படத்தின் இறுதிக்காட்சிகளில், கொடியவன் (வில்லன்) வழியாக உலக மக்களிடம் கதாநாயகி பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

நாம் வாழும் இவ்வுலகம், அது ஏற்கனவே உள்ளபடி, அழகானதாகும். ஆனால், இவ்வுலகில் உள்ள யாவற்றையும் உங்களால் துய்க்கமுடியாது. உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான். அந்த துய்ப்பு போதும். உண்மை தான் உண்மையில் சுகமானதாகும்.

(ஆங்கில மூலம்: This world was a beautiful place just as it was, and you cannot have it all. You can only have the truth. And the truth is enough. The truth is beautiful.)

இதில் "உண்மை" என்ற சொல் குறிப்பது உள்ளபொருளை! "உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான்" என்ற வரி குறிப்பது நனவு, கனவு நிலைகளை நாம் துய்க்கும் விதத்தை!! ("[உலக] விசயங்களைப் பார்க்கும் அஞ்ஞானி கூட ஆன்மாவையே பார்க்கிறான்" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரது 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்கு. அதாவது, எப்போதும் எல்லோரும் துய்ப்பது தங்களையே - உள்ளபொருளையே - உண்மையையே!)

oOOo


2017ஆம் ஆண்டு வெளிவந்த "ப்ளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049)" என்ற படத்தில் ஒரு காட்சியில், அப்போது "தயாரிக்கப்பட்டு" வெளிவந்து விழுந்து, எழுந்து நின்று, சற்று பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று கொண்டிருக்கும் ஒரு "மனிதப்பிரதியியைக்" (Replicant) கருத்தில் கொண்டு, அதன் முதலாளி நியாண்டர் வாலஸ் பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

பிறந்து கண்விழித்தவுடன் தோன்றும் முதல் உணர்வு: உடலைப் பற்றிய பயம்! சிறு பூச்சி முதல் மனிதன் வரை, தன்னைப் பற்றி ஆராய்ந்து தெளிவதற்கு முன், தனக்கு வாய்த்திருக்கும் களிமண்ணைப் பாதுகாக்க முயற்சிப்பது ... விந்தை! வினோதம்!! வியப்பு!!! ... பிறந்தநாள் வாழ்த்துகள்!!

(ஆங்கில மூலம்: The first thought one tends to fear, to preserve the clay. It's fascinating. Before we even know what we are, we fear to lose it. Happy Birthday.)

மண், கோணிப்பை, புற்று என்று பலவாறு நமது அருளாளர்களால் "பூசை" செய்யப்பட்ட நமதுடலை, இந்த கதாசிரியர்கள் "களிமண்" என்று அழைத்திருக்கிறார்கள். "காட்சிகள் யாவும் பொய். காண்பவனே மெய்." என்று பகவானும், ஏனைய மெய்யறிவாளர்களும் திரும்ப திரும்ப வலுயுறுத்திய கருத்துத்தான் "தன்னைப் பற்றி ஆராய்ந்து..." என்ற சொற்றொடர் குறிக்கிறது.

oOOo


2019ஆம் ஆண்டு வெளிவந்த "ஃபோர்ட் x ஃபெர்ராரி (Ford vs Ferrari)" என்ற படத்தின் இறுதியில் கென் மிலெஸ் இறப்பதற்கு சற்றுமுன், திரைமறைவிலிருந்து கரோல் ஷெல்பை பேசும் உரையிலிருந்து ஒரு பகுதி:

சிற்றுந்து இயந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 7,000 சுற்றுகளைத் தாண்டியதும் அது நடக்கிறது... எல்லாம் மறையத் தொடங்குகிறது. சிற்றுந்து எடையற்றதாகிறது. மறைந்தும் போகிறது. இருப்பதெல்லாம், இடம் மற்றும் காலம் என்னும் இரு பரிமாணங்களினுடே பயணிக்கும் நமது உடல் மட்டும்தான். 7,000 ஆர்.பி.எம்.!! அப்போது தான் அந்த உணர்வு தோன்றுகிறது. உடலின் கீழிருந்து மேலாக பயணிக்கிறது. உடலும் மறைந்துபோகிறது. இப்போது எழும் கேள்வி: நாம் யார்?

(ஆங்கில மூலம்: There's a point at 7,000 RPM... where everything fades. The machine becomes weightless. Just disappears. And all that's left is a body moving through space and time. 7,000 RPM. That's where you meet it. You feel it coming. It creeps up on you, close in your ear. Asks you a question. The only question that matters. Who are you?)

(இந்த மொழிபெயர்ப்பில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். "மூலத்திற்கு ஏற்றாற்போல" என்பதை விட அது உணர்த்தும் "கருத்திற்கு ஏற்றாற்போல்" என்ற வகையில் மொழிபெயர்த்துள்ளேன்.)

நாம் என்றுமே உள்ளபொருள் தான். ஆனால், இதை நாம் உணர்வதில்லை. காரணம் - காணும் காட்சிகளின் தரம்! அன்னை மாயையின் திறம்!! "காண்பவனே மெய்" என்பதை நாம் உணர ஒவ்வொரு மெய்யறிவாளரும் ஒவ்வொரு வழியை சுட்டிக்காட்டினர்:

🌷 பகவான் காட்டிய வழிகள்: நான் யார்? (நமது தன்மையுணர்வின் மீது கவனத்தை வைத்தல்), நிறைமாதமாக இருக்கும் பேரரசி நடைபயில்வது போல அண்ணாமலையாரை வலம் வருதல் (ஒரு சமயத்தில் உடல் மறத்துப்போகும். மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்).

🌷 திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ காட்டிய வழி: கங்கையில் மூழ்குவது (நீரின் குளிர்ச்சியால் உடலுணர்வு ஒரு சில கணங்கள் அற்றுப்போகும். அச்சமயம், மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.)

இந்த உத்திகளைப் போன்றொரு உத்திதான் வண்டியை வெகு வேகமாக ஓட்டுவதென்பது. ஆனால், ஆபத்தானது. பந்தய சிற்றுந்துகளைப் பற்றிய திரைப்படத்தில் மெய்யறிவு பற்றிய உரை இடம் பெறக் காரணம்: உடலுணர்வு அற்ற நிலையில் கென் மிலெஸ் இறந்ததால் அவர் மெய்யறிவு பெற்றிருப்பார்; பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டிருப்பார் என்று அவரை உயர்த்திக் காட்டுவதற்காக!

oOOo

மேற்கண்ட 3 திரைப்படங்களின் உரைகளை 8 பேர் எழுதியுள்ளனர். ஒரு படத்தின் குழுவிற்கும் இன்னொரு படத்தின் குழுவிற்கும் தொடர்பில்லை. ஆனால், அனைவரும் ஆன்மிக அடிப்படைகளை சரியாக தெரிந்துகொண்டு உரை எழுதியுள்ளனர். ஆழ்ந்து ஆராய்ந்தோமானால், இவர்களது ஆன்ம அறிவிற்கு அடிப்படை நமது இந்து சமயம் அல்லது பௌத்த மதமாகத்தானிருக்கும். பெரும்பாலும், பகவான் தான் இருப்பர்!!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, வீட்டிலுள்ள அனைவரும் ஒரே பாத்திரத் தண்ணீரில் முகம் கழுவி, வாய் சுத்தம் செய்து கொண்ட "சுத்தமானவர்கள்", 500 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, நம்முடன் மீண்டும் தொடர்பு ஏற்படும் வரையில், "பூமி தட்டையானது", "பூமியைத் தான் கதிரவன் சுற்றி வருகிறது" என்று நம்பிக் கொண்டிருந்த "அறிவாளிகள்", சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் கூட மரங்களும் உயிருள்ளவைதாம் என்பது கூட அறிந்திராத "தருக்க புத்தியுள்ளவர்கள்" இன்று உள்ளபொருளை உள்ளபடி உணர்ந்து, எல்லோருக்கும் புரியும்படி எளிமையான நடையில் உரையாடல் எழுதுமளவுக்கு உயர்ந்துள்ளனர்! 👍🏽

ஆனால், உலகிலுள்ள அனைத்து கலாச்சாரங்களுக்கும். மதங்களுக்கும், மொழிகளுக்கும், உணவு & மருத்துவ முறைகளுக்கும் முன்னோடியான நாம் ... 1960களில் கூட நன்னீர் ஆறாக இருந்த கூவத்தை சாக்கடையாக்கி பகுத்தறிவின் உச்சம் கண்டுள்ளோம்! சமூக நீதி காத்துள்ளோம்!! 😔🤬

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, May 14, 2021

நந்தி எனும் சிவன்காளை என்பது நமது மனம்!!

நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது.

காளையின் தலைவன் அதன் முதலாளி. அவன் இட்ட பணிகளை பலன் எதிர்பார்க்காமல் செவ்வனே செய்யும். விளைந்த நெல்லை தலைவன் எடுத்துக் கொள்ள, அவன் கழித்து விட்டுச்சென்ற தட்டையை உண்டு உயிர் வாழும். காளையின் கழிவுகளால் நிலம் மேம்படும். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தலைவன் மீது கவனம் வைத்திருக்கும்.

இவ்வாறே, நாமும் இவ்வுலகில் வாழவேண்டும். இறைவன் நம் தலைவன். பிரதிபலன் எதிர்பார்க்காமல், வாழ்வை சேவையாகக் கருதி வாழவேண்டும். நமது கழிவுகளால் உலகம் மேம்படவேண்டும் (#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ கழிவு: நான் யார்?). எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், நமது தன்மையுணர்வின் மீது கவனம் இருக்கவேண்டும். ("ஒருவன் உழைக்க வேண்டியிருக்கும் வரையில் தன்னையறியும் முயற்சியையும் கைவிடக்கூடாது" என்பது பகவானது வாக்கு.)

oOOo

8ம் நூற்றாண்டில், பௌத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்திலுள்ள பசுமாட்டுச் சடங்கிற்கும் சைவத்தின் சிவன்காளைதான் அடிப்படை!

நமது பெரியவர்கள், காளையை இறைவன் முன் அமரவைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் என்பதால் வைணவர்கள், திருப்பள்ளியெழுச்சி சடங்கின் போது, பெருமாளின் முன் பசுமாட்டை திருப்பி நிற்க வைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் (சைவத்தில் உள்ளவை யாவும் வைணவத்தில் இன்னும் சிறப்பாக, பெரிதாக இடம் பெற்றிருக்கவேண்டுமே!! ☺️).

பசுவின் பின்புறத்தின் வழியாக சிறுநீரும், சாணமும் வெளியேறும். இவற்றை நிலத்தில் சேர்த்தால், நிலம் வளம் பெரும். வளமடைந்தால், விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் (செல்வம்) பெருகும். ஆக, வருமானம்=செல்வம்=லட்சுமி இருக்குமிடம் பசுவின் பின்புறம்!!

மற்ற உயிரிகளின் சாணத்தை விட, நம் நாட்டுப்பசுவின் சாணத்தில் பலமடங்கு நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன.

திருப்பள்ளியெழுச்சியின் போது, பெருமாளின் முன்புறம் பசுமாட்டை திருப்பி நிற்கவைப்பார்கள். இதற்கு, "பெருமாள் தனது மனைவியை பார்த்துக்கொண்டே எழுகிறார்" என்பார்கள். சிலர், பசுமாட்டைக் கண்டவுடன் அதன் பின்பகுதியைத் தொட்டு வணங்குவார்கள். இவ்விரண்டிற்கும் உட்பொருள் மேற்கண்ட விளக்கம் தான்.

இப்படிப்பட்ட சடங்கு மற்றும் செயல்களின் மூலம் நாட்டுப்பசுவினுடைய கழிவுகளின் மேன்மையைப் பற்றிய அறிவை பதிவு செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்!!

oOOo

🔹திருபுன்கூரில் "நந்தனாருக்காக விலகிய நந்தி" எனில், அவ்விடத்தில், உலக காட்சிகள் நீங்க பெற்று, நந்தனார் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார் என்று பொருள். இதேதான் "பட்டீச்சுரத்திலுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்காக 🌺🙏🏽🙇🏽‍♂️ விலகிய நந்தி" என்பதன் பொருளும். அவ்விடத்தில் பிள்ளையார் சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார்.

🔹திருவல்லத்தில் (முதலாம் ராஜராஜ சோழரின் மாமனும், படைத்தளபதியுமான வந்தியத்தேவனின் ஊர்) கஞ்சனுடன் போராடிய நந்தி: கஞ்சன் என்பது உலகக்காட்சி. கஞ்சனை வெல்வது என்பது உலகக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணர்வதாகும்!!

இங்குள்ள மூலவருக்கு முன்னுள்ள பலிபீடம் போன்ற அமைப்பின் கீழே தான் சனத்குமார மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதியடைந்துள்ளார் என்பது தொன்நம்பிக்கை.

🔹நந்தா - முடிவில்லாதது. உள்ளபொருள்.
நந்தி - முடிவுள்ளது. மனம்.

oOOo

எனது நண்பர் ஒருவர், நம் திருத்தலங்களில் மூலவர் முன் அமர்ந்திருக்கும் சிவன்காளைகளைப் பற்றிய ஒரு நீண்ட இடுகையை அனுப்பியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய கருத்துகளின் தொகுப்பே இந்த இடுகையாகும். நன்றி. 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, May 8, 2021

திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!

இது ஒரு அருமையான படம்!! 👌🏽

படமும் அழகு! அது உணர்த்தும் தத்துவமும் அழகு!!

🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!!

🌷 இன்னொரு வகையில், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், ஆன்மா மாறுவதில்லை; அழிவதில்லை. பிறவிகளே (உடல்களே) மாறுகின்றன; அழிகின்றன. இந்த பேருண்மையை, மயிலை அணைத்தபடி இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவம் உணர்த்தும். முருகப்பெருமான் உள்ளபொருளைக் குறிக்கிறார். அவரது வேல் மெய்யறிவைக் குறிக்கும். அவர் அணைத்திருக்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளைக் குறிக்கும். இது போன்று, அண்ணாமலையார் அழியாத, மாறாத உள்ளபொருளையும், முன்னர் நிற்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளையும் குறிக்கும்.

🌷 இன்னுமொரு வகையில், எத்தனையோ கோடி உயிரிகள் உலகில் வாழ்வது போல் தோன்றினாலும், அனைத்துள்ளும் இருப்பது ஓர் ஆன்மாதான். ஆன்மாவை முருகப்பெருமானும் (இங்கு அண்ணாமலையாரும்), பிறவிகளை மயிலின் தோகையிலுள்ள கண்களும் குறிக்கின்றன.

🌷 இறுதியாக, திரை-காட்சிகள் உவமைக்கு திரும்புவோம். வைணவத்தின் திரு சக்கிரத்தாழ்வார் திருவுருவம் உணர்த்துவதும் இதுவே. முன்புறமுள்ள சக்கிரத்தாழ்வார் இயங்கும் உலகிற்கு (காட்சிகளுக்கு) சமம். பின்புறமுள்ள வடக்கிருக்கும் சிங்கப்பெருமாள் திரைக்கு சமம்.

(மதுரையம்பதியில் கால்மாறி ஆடிய கூத்தப்பெருமானின் திருவுருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் சக்கிரத்தாழ்வார். பெருமானின் வலது காலும், ஆழ்வாரின் பாதங்களும் குறிப்பது இயங்கும் உலகத்தை!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, April 16, 2021

அனைவருக்கும் இனிய கீழறை (பிலவ) புத்தாண்டு¹ நல்வாழ்த்துகள்!! 💐🙏🏽

"பகுத்தறிவால்" நம் தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம் பெறாமல் போன மனோன்மணியச் செய்யுள்:

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!!

"முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது" என்ற திருமறைக் கருத்தை பயன்படுத்தி, தமிழிலிருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய மொழிகள் தோன்றிய பின்னரும், ஆரியம் போன்று வழக்கொழியாமல், தமிழன்னை சீர் கெடாமல், இளமையாகவே இருப்பதைக்கண்டு வியந்து, செயல்மறந்து (நான் என்ற தன்மையுணர்வை எக்கணமும் மறக்க முடியாதல்லவா? எனவே, "தன்னை மறந்து" என்று குறிப்பிடாமல், "செயல்மறந்து" என்கிறார் 👏🏽👏🏽👌🏽) அன்னையைப் போற்றுகிறார் சுந்தரம் பிள்ளையவர்கள்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

¹ ஆண்டு என்றாலே அது தமிழ் புத்தாண்டுத்தான்! இந்த அறிவியலை கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் தமிழர்களே. இதன் பிறகே ஏனைய ஆண்டுகள் உருவாயின. எனவே, "தமிழ்" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

(ஆப்பிள் தலையில் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட அதிமேதாவிகளான (🤭) பரங்கியர்களின் ஆண்டு ஆண்டே அல்ல! அறிவியல், வரலாறு, இயற்கை, மதம் என்று எந்த அடிப்படையும் அதற்கில்லை. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என்ற கதையாக இருந்ததை, 500 ஆண்டுகளுக்கு முன், நம்முடன் மீண்டும் ஏற்பட்ட தொடர்பால் சரி செய்து கொண்டனர். கேட்டால், "கிரிகோரி உருவாக்கினார்" என்று பீலா விடுவார்கள்! 👊🏽👊🏽👊🏽)

Friday, April 9, 2021

சோதிடம் - ஒளியைப் பற்றிய அறிவியல்!!

ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.

oOOo

🔸சோதிடம் என்பது திருமறைகளின் ஒரு பகுதி. அதன் மதிப்பை, புராதனத்தை உணர இந்த ஒரு தகவல் போதும். நியூட்டன், கெப்ளர், ஆர்க்கிமிடிஸ் போன்ற திருட்டுப்பயல்களின் வரலாறு தேவையில்லை. பராசரர், வராகமிகிரர், ஸ்ரீபதி, பரமேஸ்வரா போன்ற மேதைகள் நம்மிடமிருக்க, எடுத்துக்காட்டிற்குக்கூட நம்மை சீரழித்த பரங்கியர்களைப் பயன்படுத்தக்கூடாது.

🔸அக்காலத்தில் மருத்துவர்களே சோதிடர்களாகவும் இருந்தனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதாவது, மக்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட ஓர் அறிவியலே சோதிடம்!

🔸தாங்கள் சொல்வது போல் நமது முன்னோர்களின் அண்ட-பிண்ட ஆரய்ச்சியின் விளைவாக தோன்றியவற்றில் ஒன்றாக சோதிடமும் இருக்கும்.

🔸திருமறைகளின் இறுதி நோக்கம் மனிதன் மெய்யறிவு (ஞானம்) பெற்று நிலைபேறு (சமாதி - மரணமில்லாப் பெருவாழ்வு) பெறுவதே. எனில், அவற்றின் ஒரு பகுதியான சோதிடமும், அந்நோக்கத்தை அடைவதற்கு உதவி புரிவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

🔸சோதிடம் - ஜோதிடம் - ஜோதிஷா - ஜோதி = ஒளி. ஒளியைப் பற்றிய அறிவியல்.

🔸ஜோதிஸ - ஜோதிஸ் + அ = சாபம் அல்லது மதி மயக்குவது. உடலல்லாத நம்மை உடலாக நாம் காணுவதற்கு முக்கிய காரணமான ஒளியை "மதி மயக்குவது" என்றும், இப்படி மதி மயங்கி கிடப்பதை சாபம் என்றும் கொள்ளலாம்.

oOOo

எனது சோதிட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!! 🙏🏽

Monday, April 5, 2021

திரு மாணிக்கவாசகர் சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்!!

"... சுமந்த ... திருப்பாதம்" - இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்!!

இது போன்ற சொற்றொடர்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தவறான பாதிப்புகள் தான் எவ்வளவு! 😔

மணிவாசகப் பெருமானின் 🌺🙏🏽 காலம் சுமார் 9ம் நூற்றாண்டு. வேதகிரீசுவரர் என்னும் மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமானின் 🌺🙏🏽 காலம் அதற்கும் வெகுகாலத்திற்கு முன்னராகும். சிவமாய் சமைந்த ஒரு பெருமான் எவ்வாறு வெளிவந்து, ஒரு அன்பரின் சிரசில் கால் வைத்து ஆட்கொள்ள முடியும்? அப்படியே பாதம் வைத்தால் மணிவாசகரின் மனமழிந்துவிடுமா? சிவதத்துவம் என்பது உடலுடன் கூடியதா? (அனைத்தும் அதுவே - ஏகன் அநேகன் - என்பது வேறு)

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) குருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்த தனது மெய்யாசிரியரின் பார்வை பட்டதும், முதன்முதலாக "தான்" யாரென்று மணிவாசகர் உணர்கிறார். உடல், உலகம் முதலிய காட்சிகள் நீங்கப்பெற்று, தானே உள்ளபொருள் (சிவம்) என்ற துய்ப்பைப் பெறுகிறார். பின்னர், மீண்டும், உடல்-உலகு தோற்றத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். "நரி-பரி", "வந்திக் கிழவி" திருவிளையாடல்களுக்கு பின்னர், தனது முதலமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, பல திருத்தலங்களுக்கு செல்கிறார். தான் துய்த்த திருநீற்று நிலையை மீண்டும் பெற போராடுகிறார். சில திருத்தலங்களில் துய்க்கவும் செய்கிறார். அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்று தான் திருக்கழுக்குன்றம்.

இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள இடம், திருக்கழுகுன்றத்தின் அடிவாரத்தில், மலையேற்றப் படிகளுக்கு முன்னர் உள்ளது. இவ்விடத்தில் அவர் வடக்கிருந்திருக்கிறார். தானேத்தானாக - சிவமாக - மிளிர்ந்திருக்கிறார்!!

எனவே, இவ்விடத்தை "திரு மாணிக்கவாசகர் வடக்கிருந்து ...

🔹 திருநீற்று நிலை எய்திய இடம்
🔹 சிவநிலையை துய்த்த இடம்
🔹 தானேத்தானாய் மிளிர்ந்த இடம்
🔹 சிவமாய் இருந்த இடம்

போன்ற பெயர்களால் அழைக்கவேண்டும்.

இப்படி அழைப்பதால் என்ன பயன்?

"உண்மைகள் திரியாமலிருக்கும்", "முட்டாள்தனம் குறையும்", "சிந்தனை வளரும்" என எத்தனையோ பயன்கள் இருந்தாலும், திருத்தலத்திற்கு வருகை தரும் அன்பர்கள், திருத்தலத்தில் செய்யவேண்டியதை (வடக்கிருத்தலை) உணர்த்தும். இது ஒன்று சரியாக நடந்தால் அனைத்தும் சீராக வாய்ப்புள்ளதே! 😍

oOOo

ஒரு திருத்தலத்திற்கு சென்றுதிரும்பும் போது, நம்மைத் தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கேட்கும் கேள்வி:

🔹 சாமி கும்பிட்டீங்களா?
🔹 சாமிய நல்லா பாத்தீங்களா?
🔹 தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?

பகுத்தறிவு தோன்றி, வளர்ந்து, உச்சத் தொட்டுள்ள இக்காலத்தில், இக்கேள்விகளின் பொருள்: கருவறையில் உள்ள மூலவரை நன்கு பார்த்தீர்களா?

பகுத்தறிவு தோன்றுவதற்கு முன்னர் இக்கேள்விகளின் பொருள்:

🔹 கும்பகமிட்டீரா? - மூச்சை உள்நிறுத்தும் போது மனம் செயலிழக்கும். மனமடங்கினால் மீதமிருப்பது... பரம்பொருள்!
🔹 பார்ப்பது / தரிசிப்பது - அனைத்தையும் பார்ப்பவனை பார்ப்பது!

அதெப்படி பார்ப்பவனை பார்ப்பது? இதற்கு பகவானின் 🌺🙏🏽 பதில் கேள்வி: இராமன் என்பவன் தன்னை இராமன் என்றுணர கண்ணாடி தேவையோ? 👌🏽👏🏽😍

குறைந்தது, திருத்தல வளாகத்தினுள் நுழைந்தது முதல் வெளிவரும் வரை, "நான் இன்னார்" என்ற உணர்விலுள்ள "இன்னாரைக்" கழட்டிவிட்டு நாம் நாமாக இருந்தால் போதும்.

oOOo

ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽, திருநீற்றுப் பதிகத்தில், திருநீறு என்ற சொல்லை சிவம் என்ற சொல்லிற்கு சமமாக பயன்படுத்துகிறார்:

🌷 செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

🌷 மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

அப்பெருமானின் வழி பற்றி, உடல்-உலகு காட்சிகள் நீங்கி, தான் மட்டும் "இருந்து விளங்கும்" நிலையை நிர்விகற்ப சமாதி என்று குறிப்பிடாமல், திருநீற்று நிலையென்று குறிப்பிட்டுள்ளேன். 🙏🏽

oOOo

ஊலிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮